'நான் அழ மாட்டேன்' - காஷ்மீர் என்கவுன்டரில் உயிரிழந்த கேப்டன் தீபக் சிங்கின் தந்தை என்ன சொன்னார்?

    • எழுதியவர், ஆசிஃப் அலி
    • பதவி, டேராடூனில் இருந்து பிபிசி ஹிந்திக்காக

சுதந்திர தினத்திற்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்டத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நடந்த பயங்கர என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.

இந்த நடவடிக்கையில் ராணுவத்தின் ‘48 ராஷ்டிரிய ரைபிள்ஸ்’ பிரிவு கேப்டன் தீபக் சிங் படுகாயமடைந்தார். அவரை ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீபக் சிங் டேராடூனைச் சேர்ந்தவர். அவரது உடல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சோகத்தில் ஆழ்ந்த குடியிருப்பு

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த கேப்டன் தீபக், டேராடூனில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தார்.

2020-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி, அவர் ராணுவத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக (commissioned officer) பணியமர்த்தப்பட்டார். இவரது தந்தை மகேஷ் சிங் உத்தரகாண்ட் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

போலீஸ் தலைமையகத்தில் பணியமர்த்தப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விருப்ப ஓய்வு எடுத்திருந்தார். அவரது தாயார் சம்பா தேவி ஓர் இல்லத்தரசி.

அவரது வீட்டில் அனைவரும் உடைந்து போயிருக்கின்றனர். அண்டை வீட்டாரும் சோகமாக இருக்கிறார்கள்.

முன்னதாக அவரது குடும்பம் டேராடூன் போலீஸ் லைன் ரேஸ் கோர்ஸில் வசித்து வந்தது. ஆனால் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்பம் குவான்வாலாவின் விண்ட்லாஸ் ரிவர் வேலி பகுதிக்கு இடமாறியது.

கேப்டன் தீபக் இறந்த செய்தியால் விண்ட்லாஸ் ரிவர் வேலி ஹவுசிங் சொசைட்டி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ரிவர்வேலி குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடியிருப்பு நலச்சங்க செயலர் பிரதீப் சுக்லா கூறுகையில், ''ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன், பல நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்பு வந்த இந்த செய்தியால், அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்திவிட்டோம். ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றம் மட்டுமே செய்யப்பட்டது," என்றார்.

தம்பியின் மரணத்தால் அதிர்ந்த சகோதரிகள்

கேப்டன் தீபக் சிங்கிற்கு இரண்டு சகோதரிகள். ரக்ஷா பந்தனுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு கேப்டன் தீபக்கின் சகோதரிகளுக்கு தங்கள் ஒரே சகோதரன் இறந்த செய்தி கிடைத்தது.

இரண்டு உடன்பிறப்புகளுடன் பிறந்த அவர் தான் வீட்டில் இளையவர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, அவரது மூத்த சகோதரி ஜோதியின் திருமணம் நடந்தது, அதில் கலந்து கொள்ள அவர் டேராடூனுக்கு வந்திருந்தார்.

மற்றொரு சகோதரி மனிஷா கேரளாவில் வசிக்கிறார். கேப்டன் தீபக்கின் சகோதரிகள் தன் தம்பியின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால் எதிர்பாராத விதமாக வந்த அவரின் மரண செய்தி குடும்பத்தில் பேரிடியாய் விழுந்தது. அவரது சடலம் ஆகஸ்ட் 15 அன்று வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.

அவரது சகோதரிகள் மற்றும் தாயார் கதறி அழுது கொண்டிருந்தனர். அவர்கள் பேச முடியாத நிலையில் இருந்தனர்.

குடியிருப்பு நலச்சங்கத்தின் செயலாளர் பிரதீப் சுக்லா கூறுகையில், “ரக்ஷா பந்தன் வரவிருக்கிறது. தீபக் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே சகோதரன். அத்தகைய சூழ்நிலையில் சகோதரிகள் அனுபவிக்கும் வலியை வார்த்தைகளில் கூறுவது கூட மிகவும் கடினம்,” என்றார்.

தீபக்கின் தந்தை மகேஷ் சிங் கூறுகையில், “மே மாதம் வீட்டில் திருமணம் நடந்தது, மே 2-ஆம் தேதி தீபக் வீட்டுக்கு வந்தார். சுமார் 2 வாரங்கள் வீட்டில் இருந்தார். அதன் பிறகு அவர் பணிக்குச் சென்றுவிட்டார். அவருடன் தொடர்ந்து அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தோம்,” என்றார்.

"வரும் நாட்களில், தீபக் டேராடூனில் நடைபெறும் தனது இரண்டு-மூன்று நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் இப்படி நடந்து விட்டது," என்றார் மகேஷ் சிங்.

ராணுவத்தில் சேர விரும்பிய கேப்டன் தீபக் சிங்

கேப்டன் தீபக் சிங், 25 வயதில் '48 ராஷ்டிரிய ரைபிள்ஸ்’ கேப்டனாக நியமிக்கப்பட்டார். தனது மகன் குறித்து தீபக்கின் தந்தை மகேஷ் சிங் பேசுகையில் தீபக் சிங் ராணுவத்தில் சேர விரும்பியதாகக் கூறினார்.

மகனின் மரணத்தை எண்ணி அவர் கண்ணீர் சிந்தவேயில்லை. மாறாக, அவர் தனது மகனைப் பற்றி பெருமிதம் கொள்வதாகக் கூறுகிறார். மகேஷ் சிங் கூறுகையில், “எனது மகனின் தியாகம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். நான் எதைப் பற்றியும் வருத்தப்படவில்லை. ”

“நான் அழவில்லை, இனியும் மகனை எண்ணி அழ மாட்டேன். நான் பலவீனமாக இருக்க மாட்டேன் என்று உறுதியாக முடிவு செய்துள்ளேன்,” என்றார்.

போலீஸ் குடியிருப்பில் வசித்ததால், சீருடையைப் பார்த்து தீபக் பாதுகாப்பு பணியில் ஆர்வம் காட்டியதாக அவரின் தந்தை கூறுகிறார்.

“அவர், படிப்பிலும் முதலிடத்தில் இருந்தார். அவர் இடைநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றவுடன், ராணுவத்தில் சேர படிவம் வாங்கி நிரப்பினார். அவர் எஸ்.எஸ்.பி தேர்வுக்காக அலகாபாத் மற்றும் போபால் ஆகிய இரண்டு இடங்களுக்குச் சென்றார்.

“நான் அவருடன் இரண்டு இடங்களுக்கும் சென்றேன். பின்னர் அவர் இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார். அதற்குப் பிறகு நான் காலாட்படையில் சேருவேன் என்று கூறினார். அதன் பிறகு தீபக் அதில் சேர்ந்தார்,” என்றார்.

தனது மகனை நினைவு கூர்ந்த தந்தை கூறுகையில், “அங்கு சேர்ந்த பிறகும், அவர் ஒரு நாள் விடுப்பில் வந்தபோது, நான் ஜம்மு காஷ்மீரில் வேலை செய்யப்போகிறேன் என்று மட்டும் கூறினார். பின்னர் அசாமில் பணியமர்த்தப்பட்டு, அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் சென்று ‘ஆர்.ஆர்'-இல் (ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்) சேர்ந்தார். பின்னர் வீட்டுக்கு வந்ததும் தான் இதைத் தெரிவித்தார்,” என்றார்.

விளையாட்டிலும் ஆர்வம்

கேப்டன் தீபக் சிங்கின் தந்தை தன் மகனைப் பற்றிய நினைவுகளை மேலும் பகிர்ந்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுகையில், "நான் முதலில் செல்ல வேண்டியது: ஆனால் அவர் எனக்கு முன்பே உலகை விட்டு போனது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது," என்றார்.

கேப்டன் தீபக் போர்க்களத்தில் மட்டுமல்ல விளையாட்டு மைதானத்திலும் கைத்தேர்ந்தவர். சிறந்த விளையாட்டு வீரராக இருந்த அவர், பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக விளையாடினார்.

“அவர் வாங்கி குவித்த பதக்கங்கள் அனைத்தும் இன்று வீட்டில் உள்ளன. உண்மையில், அவர் பல பதக்கங்களை வென்றார், அவற்றை அடுக்கி வைக்க இடம் போதவில்லை,” என்றார்.

ரிவர் வேலி குடியிருப்பு நலச் சங்கத்தின் செயலாளர் பிரதீப் சுக்லா கூறுகையில், “தீபக் மிகவும் நட்பாகவும், கனிவாகவும் இருந்தார். விடுப்பில் வரும்போதெல்லாம் டென்னிஸ் விளையாட வருவார்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)