You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கலான் ஊடக விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. நடிகர் விக்ரம், நடிகைகள் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
விடுமுறை நாள் என்பதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை ரோஹிணி திரையரங்குக்கு முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்கள் படம் குறித்த தங்கள் கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
"விக்ரமுக்கு கட்டாயமாக தேசிய விருது தரவேண்டும். அவர் இந்தப் படத்திற்காக அத்தனை மெனக்கெட்டுள்ளார். வரலாற்று படங்களுக்காக இசையமைக்கும் போது ஜி.வி. பிரகாஷ் சிறப்பாகப் பணியாற்றுவார். அவர் இந்தப் படத்திலும் மிக நுணுக்கமாகப் பணியாற்றியுள்ளார்," என்று கூறினார் ஜெகதீஷ்.
"வரலாற்றுப் படம் என்பதால் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழைப் புரிந்து கொள்ளச் சற்று சிரமம் இருப்பதாகவும், சப்டைட்டில்ஸ் இருந்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் செல்வா.
மேலும் சில ரசிகர்கள், இரண்டாம் பாதி மிகவும் தொய்வாக இருப்பதாகக் கூறினர்.
தங்கலான் படத்தின் கதை என்ன?
தங்கலான் படத்தின் கதை 1800-களில் நடப்பதாகக் காட்டப்படுகிறது.
கோலார் பகுதியில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்படும் பிரிட்டிஷ் ஜெனரல் க்ளெமென்ட், அதை எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு அவருக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில், வட ஆற்காடு பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள், வழக்கமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதைக் கேள்விப்படுகிறார்.
இதனையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் மற்ற பழங்குடி மக்களை அந்த வேலையில் ஈடுபடுத்துகிறார்.
இதற்கிடையே, அப்பகுதியில் இருக்கும் ஒரு தேவதை, அந்தத் தங்கத்தை எடுக்கவிடாமல் பாதுகாத்து வருகிறது. அதைத்தாண்டி அவர்கள் தங்கத்தை எடுத்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
கோலார் தங்கவயலை அடிப்படையாகக் கொண்டு, அதனோடு தொன்மத்தையும் சேர்த்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
தங்கலான் - ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?
தங்கலான் படத்தைப் பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், இந்தப் படம் ரஞ்சித்தின் ஒரு சிறப்பான முயற்சி என்று குறிப்பிட்டுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த படத்தில் தங்கலானாக வரும் விக்ரம், ஆரத்தியாக வரும் மாளவிகா மோகனன், ஆங்கிலேய அதிகாரியாக வரும் டேனியல் கால்டாகிரோன், கங்கம்மாவாக வரும் பார்வதி திருவோத்து தங்களின் அடையாளத்தைத் தேடும் களமாக படம் அமைந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
"ஆரம்பத்தில் ஒரு சாகசப் படம் போல நகரும் தங்கலானில் நிறைய மக்கள் குழுவாக ஒரு நிலத்தை அடைகின்றனர். அந்த சாகசத்தில் காடுகள், நதிகள், காட்டு விலங்குகள், நச்சுப் பாம்புகள் போன்றவை இருக்கின்றன. இது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை பார்ப்பது போல் இருப்பதாக" இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.
வி.எஃப்.எக்ஸ் மற்றும் ஒலிக்கோர்வை சிறப்பாக இல்லை என்று விமர்சித்ததோடு, இருப்பினும் மற்ற அனைத்து தொழில்நுட்பமும் ஒன்றிணையும்போது அது பிரமிக்க வைக்கும் படமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
விக்ரம் நடிப்பு எப்படி இருந்தது?
உலகத் தரம் வாய்ந்த நடிப்பை விக்ரம் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறிய தினமணி நாளிதழ் அவருக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தியதாக நடிகை பார்வையைப் பாராட்டியுள்ளது.
நடிகர் விக்ரம் தங்கலானுக்காகவே தன்னை அர்பணித்திருப்பதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறுகிறது. "தங்கலானின் உடல், மன வலி, மகிழ்ச்சி, புத்திக்கூர்மை என அனைத்தையும் அவரது நடிப்பு வெளிப்படுத்துகிறது. பார்வதி, பசுபதி, டேனியல் என ஒவ்வொருவரும் மாயாஜால உலகில் ஒரு உண்மையான கதாப்பாத்திரங்களாக வாழ்கின்றனர்."
தினமணியின் விமர்சனத்தில், "படத்தின் முதல் பாதி விறுவிறுவென நகர்ந்தாலும், இடைவேளை மற்றும் இரண்டாம் பாதி லேசான சலிப்பைக் கொடுக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் வரும் சலிப்பை கதைக்குத் தேவையான ஒன்றாகவே எடுத்துக் கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
அதோடு, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் சிறிது குழப்பத்தைத் தருவதாகவும் தினமணி விமர்சித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கம் சிறப்பாக இருந்ததா?
இயக்குநர் பா.ரஞ்சித் முற்றிலும் வித்தியாசமான ஒரு படத்தையே வழங்கியுள்ளதாகவும், "ஆடை முதல் மேக்-அப் வரை, படத்திற்கான செட்டிங், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிபலிக்கும் தொனி என வலிமையான தாக்கத்தை படம் ஏற்படுத்துகிறது" என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
கதாபாத்திரங்கள் மாறுபட்ட தமிழை பேசுகின்றனர். அதனால் படத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
"கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. ஆனால் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்" என்றும் ஹிந்துஸ்தான் டைம்டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
"தலித் பூர்வகுடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றைத் தொன்மக் கதைகள் வழியே கற்பனை கலந்த ஒரு ஃபேன்டசி படைப்பாக பா.ரஞ்சித் கொடுத்துள்ளார்," என்கிறது இந்து தமிழ் திசையின் தங்கலான் விமர்சனம்.
"சாதிய ஒடுக்குமுறையையும், நில அரசியலையும் ரஞ்சித்தின் முந்தைய படங்களைவிட ‘தங்கலான்’ ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமாகவே பதிவு செய்திருப்பதாக," இந்து தமிழ் பாராட்டியுள்ளது.
"வரலாற்றின் பக்கங்களில் இருந்து பௌத்தம் மெல்ல அழிக்கப்பட்டது, அரசர்களுக்குப் பின்னால் வந்த ஜமீன்தார்கள் நிலங்களை வஞ்சித்துப் பிடுங்கியது, தாய்வழிச் சமூகங்கள் பற்றிய குறியீடுகள் ஆகியவை கதையின் அங்கமாக தங்கலானின் பயணத்தினூடே வழிநெடுக வந்துகொண்டிருக்கின்றன."
ஜி.வி.பிரகாஷின் இசை எப்படி இருந்தது?
"முதல் பாதி முழுவதும் ரஞ்சித்தின் நேர்த்தியான திரை மொழி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது," என்று இந்து தமிழ் விமர்சனம் பதிவு செய்துள்ளது.
"சமூகம் தொடர்பான அம்சங்களை நீக்கிவிட்டுப் பார்த்தாலும் இதுவோர் அசாத்தியமான சாகசப் படமாக இருந்திருக்கும். ஆனால் இந்த சமூக அம்சமே படத்தை மிகவும் சிறப்புமிக்கதாக மாற்றிவிட்டதாக," டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
தங்கலான் படத்திற்கு இசை ஒரு முக்கிய பலமாகத் தெரிவதாக தினமணி கூறியுள்ளது. "படம் முழுக்கவே பல இடங்களில் இசை இறங்கி விளையாடுகிறது" என்றும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்து தமிழ் நாளிதழ், படத்தின் இன்னொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ்தான் என்று அவரது இசையைப் பாராட்டியுள்ளது.
"படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மிரட்டியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது" எனத் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது. மேலும், சலிப்படையச் செய்யும் பல காட்சிகளில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசைதான் படத்தைக் காப்பாற்றுவதாகவும் இந்து தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)