You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிமான்டி காலனி படத்தில் வரும் 'ஜான் டி மான்டே' உண்மையில் யார்? என்ன ஆனார் தெரியுமா?
பெரும் வரவேற்பைப் பெற்ற திகில் திரைப்படமான ‘டி மாண்டி காலனி’யின் இரண்டாம் பாகம் சுதந்திர தினத்தன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் பேயாக மாறி பழிவாங்கும் ஜான் டி’ மான்டே உண்மையில் எப்படிப்பட்டவர்?
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளிவந்தது ‘டி மாண்டி காலனி’ திரைப்படம். இந்தப் படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், எம்.எஸ். பாஸ்கர், சிங்கம் புலி, மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ஒரு திகில் திரைப்படம். ராகவன், சஜித், விமல், சீனிவாசன் ஆகிய நான்கு நண்பர்கள் ஒரு நாள் பேய் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படும் டி மான்டி காலனியில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவிற்குள் செல்கின்றனர். அங்கே சில சம்பவங்கள் நடக்கின்றன. அங்கிருந்து வெளியில் வரும்போது, ஒரு தங்கச் சங்கிலியையும் எடுத்து வந்துவிடுகின்றனர்.
அந்தச் சங்கிலிக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதாவது, போர்ச்சுகீசிய வணிகரான டி மான்டே பிரபு சென்னையில் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு மனநலம் சரியில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் டி மான்டே கல்கத்தாவுக்குச் சென்றிருக்கும்போது, அவரது மனைவியை யாரோ பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விடுகின்றனர். இதனால், வீட்டில் இருக்கும் பணியாளர்களை எல்லாம் சுட்டுக் கொன்றுவிடுகிறார். ஊர் மக்கள் திரண்டுவந்து அந்த மாளிகைக்கு தீ வைத்து விடுகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த மாளிகைக்குச் செல்பவர்கள் இறந்துவிடுகின்றனர். டி மான்டே பிரபுவின் மனைவி வைத்திருந்த சங்கிலியிலும் அவர்களது பேய் இருக்கிறது. அந்தச் சங்கிலியைத்தான் நண்பர்கள் எடுத்து வந்துவிடுகின்றனர். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் அந்தப் மீதிக் கதை.
இந்தப் படத்தில் சொல்லப்படும் டி மான்டே பிரபுவின் கதையில் சில சம்பவங்கள் உண்மையாக இருந்தாலும் பல சம்பவங்கள் கற்பனையாக இருந்தன. ஆனால், டி மான்டே பிரபுவின் வாழ்க்கை துயர் மிகுந்ததாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உண்மையான டி மான்டே பிரபுவின் கதை
டி மான்டே பிரபுவின் முழுப் பெயர் ஜான் டி’ மான்டே. போர்ச்சுகல்லை பின்னணியாகக் கொண்ட ஜான் டி’ மான்டே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்தார். சென்னையில் கைக்குட்டைகளை ஏற்றுமதி செய்யும் சிறிய வர்த்தகராக வாழ்வைத் துவங்கியவர், விரைவிலேயே மிகப் பெரிய தொழிலதிபராகிவிட்டார். சென்னையின் வரலாற்றை தொடர்ந்து எழுதிவந்த வரலாற்றாசிரியரான எஸ். முத்தையா தன் கட்டுரை ஒன்றில் ஜான் டி மான்டேவைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
"சென்னையில் Francis Lautour & Co. என்ற நிறுவனம் 1777ல் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஜார்ஜ் அர்பர்ட்னாட் என்பவர் 1800ல் இணைந்தார். இதற்குப் பிறகு இந்த நிறுவனம் லாதூர், அர்பட்னாட் அண்ட் கோ என்று மாறியது. 1808ல் டி மான்டே இந்த நிறுவனத்தில் இணைந்தார். இந்நிலையில் லாதூர் 1810ல் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி, ஓய்வுபெற்றார். லாதூர் ஓய்வுபெற்றதும் அவரது பங்குகளை வாங்கினார் டி மோன்டே. இதற்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் பெயர் Arbuthnot, de Monte & Co என்று மாறியது" என்கிறார் எஸ். முத்தையா.
அர்பத்னாட், டி மான்டே அண்ட் கோ நிறுவனம் விரைவிலேயே மிகப் பெரிய நிறுவனமானது. டி மான்டே தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் சென்னையில் நிலமாக வாங்கிக் குவித்தார். அதில் ஒரு சொத்துதான் 105 ஏக்கர் பரப்பளவுள்ள மௌபரீஸ் கார்டன். தற்போதைய டிடிகே சாலையும் சேமியர்ஸ் சாலையும் சந்திக்கும் பகுதியின் இருபுறங்களிலும் இருந்த இடம்தான் இது. இந்தத் தோட்டத்திற்குள்தான் இவரது வீடும் அமைந்திருந்தது.
எழும்பூரில் தற்போது போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ் இருக்கும் பகுதியிலும் கோவளத்திலும் கூட நிலங்களை வாங்கிப் போட்டிருந்தார் டி மான்டே.
டி மாண்டேவிடம் ஏகப்பட்ட பணம் இருந்தாலும், அவருடைய வாழ்க்கை பெரும் துயர் மிகுந்ததாக இருந்தது. அவருடைய மனைவி மேரி பில்டெர்பெக் ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குழந்தை பிறப்பின் போதுதான் மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதனால், அவர்களுக்குப் பிறந்த மகனான கிறிஸ்டோஃபர் பில்டெர்பெக்கை, வளர்ப்பதற்காக ஜெர்மனியில் வசித்த மேரியின் பெற்றோரிடம் அனுப்பிவைத்தார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மேரியை கோவளத்தில் ஒரு வீட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டார் டி மான்டே. தன் மனைவி வணங்குவதற்காகவே கோவளத்தில் உத்தரியா மாதா கோவில் (Church of Our Lady of Mount Carmel) என்ற ஒரு தேவாலயம் கட்டவும் அவர் உதவினார்.
ஜெர்மனியில் வளர்ந்த கிறிஸ்டோபர் தனக்கு 1816ஆம் ஆண்டில் 22 வயதான போது, சென்னைக்கு வந்து தன் தந்தையுடன் சேர்ந்துகொள்ள விரும்பினார். ஜெர்மனியில் கப்பலில் ஏறுவதற்கு முதல் நாள், கிறிஸ்டோபர் கொல்லப்பட்டார். சிலர் கப்பலில் நடந்த ஒரு சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள். அவரது சடலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. உச்சக்கட்ட துயரில் இருந்த டி மான்டே, கோவளத்தில் இருந்த தேவாலயத்தில் தன் மகனின் சடலத்தை அடக்கம் செய்தார்.
புத்திர சோகத்தில் ஆழ்ந்து போயிருந்த ஜான் டி மான்டே ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, தனது 56வது வயதில் அதாவது 1821ல் இறந்து போக அவருடைய சடலமும் மகன் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
படத்தில், டி மான்டே தன் மனைவியை கொல்வதாகக் காட்டினாலும், உண்மையில் டி மான்டே இறந்த பிறகும் சில ஆண்டுகள் மேரி வாழ்ந்தார். அவர் இறந்த பிறகு அவரது சடலமும் கோவளத்திலேயே கணவருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
மனைவி மனநலம் குன்றியவராக இருந்ததால் டி மான்டே உயிரோடு இருக்கும் போதே தன் சொத்துகள் குறித்து உயில் ஒன்றை எழுதிவைத்தார். அவரது பெரும்பகுதி சொத்துகள் மயிலைப் பேராயத்திற்கு எழுதிவைக்கப்பட்டன. அப்படித்தான் மௌபரீஸ் கார்டன் பகுதியை டி மான்டே காலனியாக மயிலாப்பூர் தேவாலயம் உருவாக்கியது என்கிறார் எஸ் முத்தையா.
“1960களில் சரியான சதுர வடிவில் இடங்கள் பிரிக்கப்பட்டு, அழகான சிறிய வீடுகள் கட்டப்பட்டன. அதில் இசன் குழுமத்தைச் சேர்ந்த பணியாளர்கள் குடியிருந்தனர். ஆனால், விரைவிலேயே அந்த வீடுகளில் இருந்து அவர்கள் காலிசெய்துவிட்டனர். பிறகு அந்த வீடுகள் பாழடைய ஆரம்பித்தன” என்கிறார் அவர்.
இந்த வீடுகளின் பாழடைந்த தோற்றமே ‘டி மான்டே காலனி’ படத்தின் கதைக்கு ஒரு உத்வேகமாக இருந்திருக்கலாம். இப்போது செயின்ட் மேரி சாலையில் டிடிகே சாலையின் கிழக்குப் பகுதியில் இருக்கிறது ‘டி மான்டி காலனி’. அந்த இடத்தைத் தேடி இப்போது யாரும் சென்றால் ஏமாற்றமே எஞ்சும்.
‘டிமான்டி காலனி’ என்ற பெயர் பலகை கூட தற்போது சிதைக்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.
அப்படியானால் Arbuthnot, de Monte & Co என்ன ஆனது? டி மான்டே மறைவுக்குப் பிறகு அந்த நிறுவனம் Arbuthnot & Co ஆக மாறியது. 1906ல் இந்த நிறுவனம் முழுமையாக திவால் ஆனது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)