குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எவ்வாறு நடக்கும்? 6 கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
உடல்நிலையைக் காரணம் காட்டி குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் தனது உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தரப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ)படி, எனது பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்" என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
74 வயதான ஜெகதீப் தன்கர் 2022 ஆகஸ்ட் மாதம் குடியரசு துணை தலைவராக பதவியேற்றார். அதன்படி பார்க்கையில் 2027ல் தான் இவரின் பதவிக்காலம் முடிகிறது.
தற்போது இவர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து, இந்த பொறுப்பை ஏற்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த குடியரசு துணைத் தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?இதற்கு இந்திய அரசியலமைப்பில் உள்ள வழிகள் என்ன?
குடியரது துணைத் தலைவராவதற்கான தகுதிகள் என்ன? தேர்தல் ஆணையத்தின் விதிகள் என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ளலாம்:
இந்திய அரசியலமைப்பு சொல்வது என்ன?

பட மூலாதாரம், @VPIndia
இந்தியாவின் அரசியலமைப்புப்படி குடியரசு தலைவருக்கு பிறகு உயரிய பதவியாக கருதப்படுவது குடியரசு துணை தலைவர் பதவியாகும்.
அரசியலமைப்புப் படி, பிரிவு 63 - 71-ன் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்வு விதிகள் 1974-ன் கீழ் தேர்தல் நடைபெறும்.
தற்போது குடியரசு துணைத் தலைவருக்கான பதவி காலியாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இப்பதவிக்கான தேர்தலை ஏற்பாடு செய்யும்.
எத்தனை நாட்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவி கூடிய விரைவில் நிரப்பப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சொல்கிறது. அதாவது, இப்பதவிக்காக தேர்தல் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் உயிரிழந்தாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது வேறு காரணங்களால் பதவி பறிக்கப்பட்டாலோ உடனடியாக அப்பதவியை நிரப்ப தேர்தல் நடத்தப்படும் என இந்திய அரசியலமைப்புப் பிரிவு 68ன் உட்பிரிவு 2ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக பதவி விலகும் துணை குடியரசு தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்த 60 நாட்களுக்குள் அடுத்த துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பொதுவாக குடியரசு துணை தலைவரின் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் முடிந்துவிடும்.
ஆனால் உயிரிழப்பு, ராஜினாமா, பதவிப்பறிப்பு உள்ளிட்டவை நிகழும் பட்சத்தில் உடனடியாக தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குடியரசு துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசியலமைப்பு பிரிவு 66-ன் படி, குடியரசு துணை தலைவரை தேர்தெடுக்க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
விகிதாசார பிரதிநிதித்துவத்தின்படி மறைமுகமாக தேர்தல் நடைபெறும். ஒரு வாக்காளர் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
குடியரசு துணைத் தலைவர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
1. இந்திய குடிமகன்/ குடிமகளாக இருக்க வேண்டும்.
2. 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
3. மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இந்திய அரசு, மாநில அரசு அல்லது எந்த துணை உள்ளாட்சி அமைப்பின் கீழ் எந்த லாபம் பெறும் பதவியும் வகிக்கக் கூடாது.
ஜெகதீப் தன்கர் இல்லாத நிலையில் அவரது பொறுப்புகளை கவனிக்கப் போவது யார்?

பட மூலாதாரம், ANI
பதவிக்காலம் முடிவதற்கு முன் குடியரசு துணை தலைவர் உயிரிழந்தாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது அவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்றாலோ அவருக்கு பதில் யாருக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை.
இந்திய அரசியலமைப்பின்படி, குடியரசு துணை தலைவர் என்பவர் மாநிலங்களவை தலைவர் பதவியை சார்ந்தவர் ஆவார்.
அரசியலமைப்பில் துணை குடியரசு தலைவர் தொடர்பாக ஒரே ஒரு விதி மட்டுமே உள்ளது. அது மாநிலங்களவை தலைவராக அவரது செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகும்.
இப்பதவி காலியாகும் பட்சத்தில் மாநிலங்களவையின் துணை தலைவரோ அல்லது குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஒரு மாநிலங்களை உறுப்பினரோ குடியரசு துணை தலைவர் பதவியை வழிநடத்தலாம்.
குடியரசு துணைத் தலைவரின் பொறுப்புகள் என்ன?

பட மூலாதாரம், PUNJAB/AFP via Getty Images
இது இந்திய அரசியலமைப்பில் 2வது உயரிய பதவியாகும். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், பதவிக்காலம் முடிந்தாலும் புதிய குடியரசு துணைத் தலைவர் பதவியேற்கும் வரை அவரே பதவியில் தொடரலாம்.
எனினும், குடியரசு துணை தலைவர் என்பவர் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருக்க மாட்டார்.
மேலும், குடியரசு தலைவர் பதவி காலியாகும் பட்சத்தில் குடியரசு துணை தலைவரே தற்காலிகமாக குடியரசு தலைவராக பதவி வகிக்க முடியும்.
உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் குடியரசு தலைவர் தனது வேலையை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் குடியரசு துணைத் தலைவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருக்கு குடியரசு தலைவர் பதவிக்கான அனைத்து அங்கீகாரங்களும் கிடைக்கும்.
குடியரசு துணைத் தலைவருக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

ஜெகதீப் தன்கரின் அரசியல் பயணம்:

பட மூலாதாரம், Getty Images
ஜெகதீப் தன்கர் 1951ம் ஆண்டு மே 18ம் தேதி ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானா கிராமத்தில் பிறந்தார்.
1 முதல் 5ம் வகுப்பு வரை அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் பயின்றார். பின் கர்தானா அரசுப் பள்ளியில் சேர்ந்தார். 1962ல் சிட்டோர்கார்க் சைனிக் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலை (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன்பின் 1978-79ல் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
1979 நவம்பர் முதல் ராஜஸ்தான் பார் கவுன்சில் உறுப்பினராக இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.
மார்ச் 1990ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1990 முதல் உச்ச நீதிமன்றத்திலும் பயிற்சி மேற்கொண்டு வந்தார் தன்கர்.
அவரின் அரசியல் பயணம் 1989ல் தொடங்கியது. பாஜக ஆதரவு கட்சியான ஜனதா தளம் சார்பில் ஜுன்ஜுனு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1990-91ல் மத்திய (நாடாளுமன்ற விவகாரத் துறை) அமைச்சராக இருந்தார். 1991ம் ஆண்டு ஜனதா தள கட்சி பிளவடைந்தபோது காங்கிரஸில் இணைந்தார். அப்போது அஜ்மெர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன்பின், 2003ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 1993 முதல் 1998 வரை கிஷான்கார்க் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் முக்கிய நாடாளுமன்ற குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












