தமிழ்நாடு அரசு 9 ரக நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தடை விதிக்க திட்டமிடுவது ஏன்?

    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் குளிர் பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 9 ரக நாய்களை இனி இனப்பெருக்கம் செய்ய தடை என்ற விதிமுறையை புதிய தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை வரைவு (DRAFT TAMIL NADU DOG BREEDING POLICY) வழியாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம்.

இந்திய சீதோஷண நிலை, விலங்குகள் உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முன்மொழியப்பட்ட இந்த புதிய விதிமுறைகள் என்ன? அதனால் என்ன மாதிரியான தாக்கங்கள் உருவாகும்? எந்தெந்த இனங்களுக்கு தடை என்பதை விரிவாக பார்க்கலாம்.

நாய் வளர்ப்பு

உலகம் முழுவதும் உள்ள மக்கள் விதவிதமான செல்லப்பிராணிகளை தங்களது வீட்டு விலங்குகளாக வளர்த்து வருகின்றனர். அதில் எப்போதும் முதன்மையான இடம் நாய்களுக்கே. ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் தன்மைக்கேற்ப பல்வேறு நாய் இனங்கள் இருக்கின்றன.

ஆனாலும் மக்கள் வெளிநாட்டு நாய்கள் அல்லது பல்வேறு தனித்துவமான இனங்களை சார்ந்த நாய்களை தங்களது செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிலர் அழகுக்காக, சிலர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாய்களை வாங்கி வளர்க்கின்றனர்.

இதில் ஒரு சிலர் உலகின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த நாய்களையும் இறக்குமதி செய்து வளர்த்து வருகின்றனர். உதாரணத்திற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை சேர்ந்த நாய் இனங்களை கூட தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாங்கி வளர்க்கும் பழக்கம் உள்ளது.

இவற்றில்ல் பல நாய் இனங்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய கலவையான சுற்றுச்சூழல் நிலைகளுக்கு ஏற்ப பொருந்தி போவதில் சிக்கல் உள்ளது. இந்த காரணங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசின் புதிய வரைவு கொள்கை, குளிர் பிரதேசங்களை சேர்ந்த 9 நாய்களை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் (Breeding) செய்ய தடை செய்துள்ளது.

எந்தெந்த நாய்களுக்கு தடை?

தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த நாய்களை இறக்குமதி செய்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். அதில் சைபீரியன் ஹஸ்கி (siberian husky) போன்ற நாய்களும் அடங்கும்.

அப்படி 9 நாய் இனங்களை இனி தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்ய தடை விதிக்கிறது தமிழ்நாட்டு விலங்குகள் நல வாரியத்தின் புதிய நாய் வளர்ப்பு கொள்கை வரைவு.

அந்த பட்டியலில் பாசெட் ஹவுண்ட் (Basset Hound), பிரஞ்சு புல்டாக் (French Bulldog), அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute), கீஷொண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாந்து (Newfoundland), நார்வே எல்கவுண்ட் (Norwegian Elkhound), திபெத்திய மாஸ்டிஃப் (Tibetan Mastiff), சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky), செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard) ஆகிய 9 நாய் இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏன் தடை?

புதிய வரைவு கொள்கையின்படி, இந்த இனங்கள் உலகின் குளிர் பகுதிகளை சேர்ந்தவை. எனவே இவற்றால் இந்திய சீதோஷண நிலையை தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே அவற்றின் ஆரோக்கியம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு இவற்றை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்ய தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினரான, ஸ்ருதி வினோத் ராஜிடம் பேசினோம். இந்த தடைக்கு காரணம் என்ன என்பது குறித்து அவரிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்திற்கு கைவிடப்பட்ட நாய்கள் குறித்து பல புகார்கள் வருகின்றன. பலரும் குறிப்பிட்ட நாய்கள் அழகாக இருக்கிறது என்பதற்காக வாங்கி விடுகிறார்கள். ஆனால், அவற்றை 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருக்க வேண்டும். காரணம் மைனஸ் டிகிரியில் இருக்கும் குளிர் பிரதேசங்களில் இருந்துதான் இவை வருகின்றன.”

“இந்த நிலையில் இந்தியாவின் சீதோஷண நிலையை தாங்க முடியாமல் அவை எளிதில் நோய்வாய்ப்படுகின்றன. அப்படியான நாய்களை இவர்கள் சாலையில் விட்டு செல்கின்றனர். ஒரு வருடத்தில் மட்டுமே 9 ஹஸ்கி நாய்கள் வரை நாங்கள் மீட்டுள்ளோம். இதன் காரணமாகவே இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும், சிலர் இன்பரீடிங்(inbreeding) முறையை பயன்படுத்துவதால் பிறக்கும் போதே நாய்கள் குறைபாடோடு பிறக்கின்றன என்கிறார் ஸ்ருதி.

இதுகுறித்து பேசிய நாய்களுக்கான நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி, “இன்பரீடிங் என்று சொல்லக்கூடிய ஒரே குடும்பத்திற்குள் இனப்பெருக்கம் செய்வதால் மரபணு ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு பிறக்கும் போதே அந்த நாய் குறைபாடுகளுடன் பிறக்கும்” என்கிறார்.

இறக்குமதி செய்யப்படும் நாய்களால் இந்திய சூழலுக்கு பொருந்தி போக முடியதா?

மேற்கூறிய நாய்களை விற்கும் அல்லது இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தும் சில செல்லப்பிராணி விற்பனையாளர்கள் அவை 4 அல்லது 5வது தலைமுறையை சார்ந்த நாய்கள் என்பதால் அவை நமது சூழலுக்கு பழகியிருக்கும் என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து விவரிக்கும் ஸ்ரீதேவி, “நாய்களோ அல்லது எந்த உயிரினமாக இருந்தாலும் அது சார்ந்த பகுதிக்கு என்ன தேவையோ அதற்கான உடல்கூறுகள் தான் அதனிடம் இருக்கும். ஆனால், பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே பல வெளிநாட்டு வகை நாய்கள் இங்கு கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகளாக அவை இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றன.”

“எனவே பல நாய்களும் நம் சூழ்நிலையில் வாழ்வதற்கான உடலமைப்பை வளர்த்துக் கொண்டுள்ளன. ஆனால், வெளிநாடுகளில் இருந்து ஒரு நாயை நேரடியாக இறக்குமதி செய்யும்போது அது வாழ்வதற்கான சூழல் என்ன என்பதை அறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கனடாவில் இருந்து ஒரு நாயை இறக்குமதி செய்கிறீர்கள் என்றால் அது அங்கு என்ன சூழலில் வளர்ந்ததோ, அதை இங்கும் ஏற்படுத்தி தர வேண்டும். இது இல்லாமல் போகும்போதுதான் பல வகையான பிரச்னைகள் உண்டாகின்றன. உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டாலே மனரீதியான பிரச்சனைகளும் ஏற்படும்.” என்கிறார்.

ஏன் இந்த வகை நாய்கள் கைவிடப்படுகின்றன?

இப்போதெல்லாம் பெடிக்ரீ நாய்களான லேப், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய்களை கைவிடுவது வெகு இயல்பாகிவிட்டது என்று கூறும் ப்ளூகிராஸ் அமைப்பின் அட்மின் வினோத் குமார், ஹஸ்கி போன்ற இனங்கள் அவ்வளவு அதிகம் இல்லை என்றாலும், அவையும் கைவிடப்படுகின்றன என்கிறார்.

அதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, “இந்த வகை நாய்கள் அனைத்தும் குளிர் பிரதேசங்களில் வாழக் கூடியவை. அவைகளுக்கு அதற்கேற்றவாறு ரோமம், தோல் ஆகியவை அமைந்திருக்கும். அவற்றை நம்மை போல் வெப்பமண்டல வானிலை உள்ள நகருக்கு கொண்டு வந்தால் அவற்றால் சமாளிக்க முடியாது” என்கிறார்.

“அப்படியான சூழலில் அழகு உள்ளிட்ட காரணங்களுக்காக இவற்றை வாங்கி வந்து இங்கு வளர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அப்படி வளர்க்க வேண்டுமெனில் அவற்றிற்கு 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறை, முறையான பராமரிப்பு, மருத்துவ தேவைகள் ஆகியவற்றை செய்து கொடுக்க வேண்டும்.” என்கிறார் அவர்.

மேலும், “நாளாக நாளாக அதற்கான நேரம் இன்மையோ அல்லது ஆர்வம் குறைவோ ஏற்படும்போது அந்த நாய்களுக்கு தோல் நோய்கள் முதல் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கு மீண்டும் சிகிச்சை அளித்து செலவு செய்ய விருப்பமில்லாத பலர் சாலைகளில் கைவிடுகின்றனர். இதற்கு பழக்கமே இல்லாத நாய்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. உள்ளூர் நாய்களால் தாக்கப்படுகின்றன. இது கொடுமையானது” என்று கூறுகிறார் வினோத் குமார்.

இறக்குமதிக்கும் தடையா?

என்னதான் இனப்பெருக்கம் செய்ய தடை என்றாலும், வெளிநாடுகளில் இருந்து இந்த நாய் இனங்களை மக்கள் இறக்குமதி செய்து வளர்ப்பது தொடர்கிறது. இதற்கென்று பிரத்யேக கடைகளே கூட உள்ளன. இதற்கு தடை ஏதேனும் இருக்கிறதா என்று ஸ்ருதி வினோத் ராஜிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “முன்பு இறக்குமதி செய்யும் நாய்களுக்கு தடை இருந்தது. ஆனால், கெனல் கிளப் ஆஃப் இந்தியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்தியாவில் உள்ள இனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்துக் கொண்டிருந்தால் மரபணு (gene pool) சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்று அதில் கூறப்பட்டது. எனவே இறக்குமதிக்கு தடை இல்லை. ஆனால், மீண்டும் இங்கு இனப்பெருக்கம் செய்ய மட்டுமே தடை கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.

உரிமம் பெற்ற செல்லப்பிராணி நிலையங்கள்

தமிழ்நாட்டில் விலங்குகள் நலவாரியம் வழியாக உரிமம் பெற்று பலரும், அதிகாரப்பூர்வமாகவே நாய்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் பணியை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்ருதி வினோத் ராஜிடம் கேட்டபோது, “ நாய்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் அனைவரும் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். புதிய விதிகளின்படி, எந்தெந்த சூழலில் இனப்பெருக்க செய்ய வேண்டும், எத்தனை முறை ஒரு நாய் இனப்பெருக்கம் செய்ய வேண்டும், 8 வயதுக்கு மேல் ஒரு நாயை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தக்கூடாது, நாயின் உடல்நிலை, தொடர் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றை அவர்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும்” என்கிறார்.

மேலும், “உரிமம் இல்லாமல் இதில் ஈடுபடுபவர்கள் விரைவில் உரிமம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி உரிமம் இருந்தும் மேற்கூறிய விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றால் அவர்களுக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். அதை தாண்டியும் விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார் ஸ்ருதி.

இது இல்லாமல் பலரும் உரிமம் இல்லாமல் வீடுகளுக்கு சென்று தனியாக நாய்களை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்துவது பெரும் பிரச்னையாக இருப்பதாக கூறுகிறார் அவர்.

இவர்களில் பலர் குறைந்த செலவில் இதை செய்வதால் மக்களும் எளிதில் ஒப்புக்கொள்கின்றனர். இதனால், மேற்கூறிய விதிகள் எதுவும் பின்பற்றப்படுகிறதா என்பது கூட தெரியவில்லை என்கிறார் ஸ்ருதி. இவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், யார் வேண்டுமானாலும் இந்த துறை சார்ந்த முறையான பயிற்சி இல்லாமல் இந்த பணியில் ஈடுபடுவதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என்கிறார் ஸ்ரீதேவி.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய சூழலில் கொஞ்சம் முதலீடு இருந்தால் போதும் என்று நாய்களை வாங்கி, விற்பது போன்ற தொழிலில் சிலர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு முறையான பயிற்சி இருப்பதில்லை. குறிப்பாக அரசு குறிப்பிட்டுள்ள 9 இனங்களும் பெரிய உடலமைப்பு கொண்ட நாய் இனத்தை சேர்ந்தவை. எனவே இவற்றை எப்படி வளர்க்க வேண்டும் என்ற வழிமுறைகள் தெரியாமல் ஒருவர் வளர்க்க முடியாது. ஆனால், இங்கு பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் நாய்கள் விற்கப்படுகிறது. இதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்” என்கிறார் அவர்.

என்னதான் தீர்வு?

என்னதான் கொள்கை வகுத்தாலும் களத்தில் இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்களை முறைப்படுத்துவதே இதை சரி செய்வதற்கான முதல் பணி. அந்த வகையில் புதிய விதிகளை விரைவில் அனைத்து செல்லப்பிராணிகள் நிலையங்கள் மற்றும் இனப்பெருக்க கெனல்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்ப உள்ளோம் என்று கூறுகிறார் ஸ்ருதி.

மேலும், “மைக்ரோசிப் பொருத்தி அனைத்து நாய்களையும் பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் ஏதாவது நாய் கைவிடப்பட்டால் அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய முடியும். இதனால், அவற்றை கைவிடுதலை தடுக்க முடியும்” என்கிறார் வினோத் குமார்.

தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட நாய்களின் தகவல்கள் தங்களிடம் இல்லை என்று கூறியிருக்கும் ஸ்ருதி, விரைவில் அவற்றை சேகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்று விதிகள் உள்ளன என்பதையும் குறிப்பிடுகிறார்.

அதே சமயம் இந்த தனித்துவமான துறையில் பணியாற்றும் தொழில் வல்லுநர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் அமைப்புகளை அரசு உருவாக்கி, இந்த துறையை முறைப்படுத்தினால் மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று தெரிவிக்கிறார் ஸ்ரீதேவி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)