You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு சென்றுள்ள சீன கப்பல் ஒரு மாதம் மறைந்திருந்தது ஏன்? இந்தியா என்ன செய்கிறது?
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 22) மாலத்தீவு சென்றடைந்தது. இந்தக் கப்பல் கடந்த ஒரு மாதமாக இந்தியப் பெருங்கடலில் இருந்தது.
இது குறித்து மாலத்தீவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் இலங்கையின் கடலோர காவல்படை கப்பல்களும் ராணுவ பயிற்சிக்காக அப்பகுதியை வந்தடைந்த அதே நாளில் சீனக் கப்பல் மாலத்தீவை அடைந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தக் கப்பல் குறித்து இந்தியா முன்னர் கவலை தெரிவித்திருந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலை நிறுத்த மறுக்கும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது.
மாலத்தீவு ஊடகக் குழு பதிப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சீன ஆராய்ச்சிக் கப்பல் வியாழக்கிழமை மாலத்தீவு சென்றடைந்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் எழுதியுள்ளது. பிற்பகலில் திலாஃபுஷி அருகே கப்பல் காணப்பட்டது.
சீன கப்பல் ஒரு மாதம் மறைந்திருந்தது ஏன்?
மாலத்தீவு செய்தி இணையதளமான ஆதாதூவை (Aadhadhoo) மேற்கோள் காட்டி, செய்தி நிறுவனமான பி.டி.ஐ., ஜனவரி மாதம் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்குச் சென்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்த சீனக் கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியதாக எழுதியுள்ளது.
மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சுமார் ஒரு மாத காலம் கழித்து அந்தக் கப்பல் பிப்ரவரி 22 அன்று மாலே அருகே காணப்பட்டது.
ஜனவரி 22-ஆம் தேதி முதல் இந்த சீனக் கப்பல் ரேடாரில் எங்கும் தென்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கப்பலின் கண்காணிப்பு அமைப்பு 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
முய்சு சீனாவுக்கு ஆதரவானவராகக் கருதப்படுகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றார். 'இந்தியா வெளியேறு' என்ற முழக்கத்தை தேர்தலின்போது பயன்படுத்தியிருந்தார் முய்சு.
மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு, முய்சு இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. அவர் சமீபத்தில் சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் அழைப்பின் பேரில் அவர் துருக்கிக்கு விஜயம் செய்தார்.
அமெரிக்க சிந்தனை திணைக்களத்தின் குற்றச்சாட்டு என்ன?
சீனா 'அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்' என்று அழைக்கும் கப்பல் உண்மையில் கடலில் இருந்து தரவுகளை சேகரிக்கிறது என்று அமெரிக்காவின் சிந்தனை திணைக்களம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் கப்பல் ராணுவ நோக்கங்களுக்காக, குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கிறது என்று அந்தச் சிந்தனை திணைக்களம் கூறியது.
இந்த குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்து வருகிறது. இந்தக் கப்பல் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் தொடர்பான சட்டத்தின் கீழ் மட்டுமே இயங்குகிறது என்கிறார்.
இந்த ஆராய்ச்சிக் கப்பலுக்கு இந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி மாலத்தீவு அரசு அனுமதி வழங்கியது. இந்தக் கப்பல் மாலத்தீவு கடற்பரப்பில் தங்கியிருந்து எந்தவிதமான ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ளாது என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
எனினும், இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா கண்காணித்து வருவதாக இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பான ஆதாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ எழுதியிருந்தது.
இம்மாதம், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "கடந்த சில ஆண்டுகளில் சுற்றியுள்ள கடல்களில் சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் அமைதியின் நோக்கத்திற்காகவும், மனிதகுலத்தின் பார்வையில் இருந்து அறிவியல் புரிதலை மேம்படுத்துவதற்காகவும் உள்ளன," எனக் கூறினார்.
சீனக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை
முன்னதாக சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரையிறங்க அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி, சீனக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை தடை விதித்ததுடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் வருவதற்கு ஓராண்டு தடை விதித்துள்ளதாகவும் கூறியது.
முன்னதாக, அண்டை நாடுகளின் எல்லைக்குள் சீனக் கப்பல்கள் செல்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.
2022-ஆம் ஆண்டு யுவான் வாங் 5 என்ற சீன ராணுவக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது. ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை கண்காணிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.
இதனை 'உளவுக்கப்பல்' என்று கூறிய இந்தியா, இலங்கை அரசிடம் முறைப்படி தனது ஆட்சேபனையை தெரிவித்தது.
இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், "பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது, இது நியாயமற்றது," என்று சீனா கூறியது.
மாலத்தீவு குறித்து இந்தியாவின் கவலை என்ன?
மாலத்தீவு இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் உள்ளது, அதே சமயம் இந்தியாவின் லட்சத்தீவு குழுமத்தின் மினிகாய் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் உள்ளது.
புவியியல் ரீதியாக, மாலத்தீவின் இருப்பிடம் இந்தியாவிற்கும் உலகளாவிய வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கியமானது. இது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியில் உள்ளது, அங்கு உலகளாவிய கப்பல் பாதைகள் கடந்து செல்கின்றன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக மாலத்தீவு இருந்து வருகிறது. அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் கொள்கை மற்றும் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் வளர்ச்சி (சாகர்) போன்ற மோதி அரசாங்கத்தின் பிரச்சாரங்களில் இது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
மாலத்தீவுகள் சீனாவின் பக்கம் சாய்வது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயம். ஜனாதிபதியான பிறகு, தனது அனைத்து படைகளையும் திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் முய்சு கேட்டுக் கொண்டார், ஆனால் சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் ஒரு தளத்தில் இருந்தும், மே 10-ஆம் தேதிக்குள் மீதமுள்ள இரண்டு தளங்களில் இருந்தும் இந்திய ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று கூறியது.
இதன் பிறகு, விமான தளத்தை இந்திய வீரர்களுக்கு பதிலாக இந்திய தொழில்நுட்ப குழு கையாளும்.
மாலத்தீவில் தற்போது 77 இந்திய வீரர்கள் உள்ளனர், அவர்கள் கடல் கண்காணிப்புக்காக ஒரு டொனேர் 228 விமானத்தையும், மருத்துவ உதவிக்காக இரண்டு ஹெச்.ஏ.எல் துருவ் ஹெலிகாப்டர்களையும் இயக்குகின்றனர்.
மாலத்தீவு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடலோர காவல்படையினர் மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கினர்.
தோஸ்தி-16 என பெயரிடப்பட்ட இந்த ராணுவ பயிற்சியில் பார்வையாளராக பங்களாதேஷ் பங்கேற்றது.
இத்தகவலை சமூக வலைதளங்களில் அளித்துள்ள மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை (எம்.என்.டி.எஃப்), “இந்தியா மற்றும் இலங்கை கப்பல்கள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ‘தோஸ்தி-16’ என்ற மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதை வரவேற்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பயிற்சியில், மூன்று நாடுகளின் ராணுவத்தினரிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், கடலில் நடக்கும் சம்பவங்களை கூட்டாக கையாள்வதற்கான வழிகளை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," எனக் கூறியுள்ளது.
தோஸ்தி ராணுவப் பயிற்சிகள் 1991-இல் தொடங்கின. கடந்த 2012-ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை இதில் கலந்து கொண்டது. முன்னதாக, இந்த ராணுவப் பயிற்சி 2021-இல் நடந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)