அமெரிக்கா அருகேயுள்ள இந்த நாடு கிறிஸ்தவ மதத் தலைவர்களை வெளியேற்றுவது ஏன்?

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், நிகரகுவா அரசு அந்நாட்டின் கத்தோலிக்க பிஷப் ரோலண்டோ அல்வாரெஸ் உட்பட பல கத்தோலிக்க மதத் தலைவர்களை கைது செய்து, லத்தீன் அமெரிக்காவின் பெரிய மற்றும் மோசமான சிறையான லா மொடேலவில் அடைத்தது.

பிஷப் ரோலண்டோ அதிபர் டேனியல் ஓர்டேகாவின் கொடுமைகளை விமர்சித்த காரணத்திற்காக அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அவரும் அவரது சக பணியாளர்களும் நிகரகுவா தலைநகரான மனகுவாவில் இருந்து 12 கிலோமீட்டரில் உள்ள மனிதத்தன்மையற்ற சிறைகளில் ஒன்றான லா மொடேலவில் அடைக்கப்பட்டனர்.

பூச்சிகளால் நிரம்பி வழியும் இந்த சிறையில், அதன் கொள்ளளவை விட அதிகமான சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு அவர்கள் மனிதத்தன்மையே இல்லாமல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதே சிறையில் அடைக்கப்பட்ட பிஷப் அல்வாரெஸ் மற்றும் அவரது சக பணியாளர்களை விடுவிக்க கோரி வாடிகன் கத்தோலிக்க தலைவர்களும், அமெரிக்காவும் கிட்டத்தட்ட 500 நாட்களாக அழுத்தம் கொடுத்து வந்தனர்.

சிறையில் இருந்தபோது, பிஷப் அல்வாரெஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில் திடீரென்று அவரும் அவரது சகாக்களும் ரோமுக்கு அனுப்பப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நிகரகுவா அரசு போப் பிரான்சிஸ் மற்றும் வாடிகனின் தலைவர்களுக்கு இடையில் நிலவும் அமைதி, ஒருங்கிணைப்பு போற்றத்தக்கது என்று கூறியது.

தொடர்ந்து நிகரகுவாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மீது நடைபெற்றுவரும் இந்த அடக்குமுறையை வாடிகனால் தடுக்க முடியுமா? என்பதை பார்க்கலாம்.

சாண்டினிஸ்டா கட்சியும், டேனியல் ஓர்டேகாவின் எழுச்சியும்

20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி முழுவதும் நிகரகுவா ஒரே குடும்பத்தால் ஆளப்பட்டது. குறிப்பாக 1936இலிருந்து 40 வருடங்களுக்கு அனாஸ்டாசியோ சோமோசாவும், அவரது இரண்டு மகன்களுமே நிகரகுவாவை ஆண்டு வந்தனர்.

சோமோசாவின் ஆட்சி கொடுமையானதாக இருந்த போதிலும் கூட, கியூபாவின் கம்யூனிச அரசின் அச்சுறுத்தலை தடுப்பதற்காக அந்நாடு அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியாக மாறியது. மேலும் அமெரிக்காவிடமிருந்து பொருளாதார உதவியும் வழங்கப்பட்டது.

ஆனால், 1970இல் தொடக்கத்தில் இருந்து இயற்கை பேரிடர்களின் காரணமாக இங்கு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது.

மனகுவாவில் ஏற்பட்ட தீவிரமான பூகம்பத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது மட்டுமின்றி, பலர் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்தனர்.

அந்த சமயத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவத் தவறியதால் மக்கள் கோபமடைந்ததாக கூறுகிறார் அமெரிக்காவில் உள்ள அக்வினாஸ் நிறுவனத்தின் இணை இயக்குனரான பிராண்டன் வான் டிக். “அனஸ்டாசியோ ஜூனியரும், அவரது ஆதரவாளர்களும் சர்வதேச பொருளாதார உதவியைப் பெற்ற போதிலும் கூட அவர்கள் மக்களுக்கு உதவவில்லை.” என்கிறார் அவர்.

அதனை தொடர்ந்து உடனேயே மக்கள் புரட்சி தொடங்கியது. அதிகாரத்திற்கான போட்டியும் ஆரம்பமானது. இந்த போட்டி சண்டானிஷ்டா அல்லது தேசிய விடுதலை முன்னணியின் தலைவரான டேனியல் ஓர்டேகாவின் அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்தது.

இதுகுறித்து விவரிக்கும் பிராண்டன் வான் டிக், “ சண்டானிஷ்டா கட்சியினர் மார்க்சிஸ்டுகள். தொடக்கத்தில் அமைதியான ஜனநாயக முறைகளை அவர்கள் பின்பற்றினாலும், சமூக வகுப்புகளில் நிலவும் அசமத்துவத்தை எதிர்த்த இயக்கங்களின் மூலம் அவர்களும் தீவிரமான செயல்பாடுகளில் இறங்கினர்” என்கிறார்.

இந்த புரட்சிகர போர் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், நிகரகுவா கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவாளர்கள் டேனியல் ஓர்டேகாவுக்கு ஆதரவளித்தனர். இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள், மார்க்சிஸ்ட் சித்தாந்தங்களோடு, கிறிஸ்தவ கொள்கைகள் ஒத்துப்போவதாக நம்பினர்.

கம்யூனிஸ்டுகளை ஆதரித்த கத்தோலிக்கர்கள்

பிராண்டன் வான் டிக்கின் கூற்றுப்படி, கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த பலரும் சண்டானிஸ்டாக்களை ஆதரித்தனர்.

ஆனால், அந்த சமூகத்தை சேர்ந்த மிக முக்கியமான தலைவர்கள் சோமோசாவை எதிர்த்த போதிலும், சண்டானிஸ்டாக்களை ஆதரிக்க விரும்பவில்லை.

சண்டானிஸ்டாக்களுக்கு ஆதரவு வழங்குவதில் கத்தோலிக்க சமூகத்திற்குள்ளேயே பல கருத்து வேறுபாடு நிலவியது. கத்தோலிக்க திருச்சபை அரசிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென ரோமன் கத்தோலிக்க தலைவர்கள் நம்பினர்.

ஆனால், நிகரகுவாவை சேர்ந்த பல கத்தோலிக்க தலைவர்களும் இதை ஏற்றுக்கொள்ளாமல், டேனியல் ஓர்டேகாவின் அரசாங்கத்தோடு இணைந்தனர்.

எனவே ஓர்டேகா ஒரு சில கத்தோலிக்கர்களை நம்பலாம், ஆனால் எல்லோரையும் நம்ப முடியாது என்ற நிலையே இருந்தது. இந்நிலையில் நிகரகுவாவின் கத்தோலிக்க திருச்சபை, வலதுசாரி இயக்கமான கான்ட்ரஸின் வன்முறை செயல்களை கண்டிக்காத காரணத்தால், டேனியல் ஓர்டேகாவின் கோபத்திற்கு ஆளானது.

1990ஆம் ஆண்டு அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓர்டேகா, அதற்கு பின் பல ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. கத்தோலிக்க ஆதிக்கம் நிறைந்த நிகரகுவாவில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், நிச்சயம் கிறிஸ்துவ கத்தோலிக்க சபையோடு உறவை பலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை அவர் புரிந்துக் கொண்டார்.

“அவர் 2001 தேர்தலிலும் தோல்வியை தழுவினார். ஆனால், 2006 தேர்தலுக்கு முன்பு திருச்சபையுடனான தனது உறவை பலப்படுத்த தொடங்கினார் ஓர்டேகா” என்கிறார் பிராண்டன் வான் டிக்.

மேலும், “ தனது பழைய பேச்சுக்களுக்காக மன்னிப்பு கேட்ட அவர், தான் தேர்தலில் வெற்றிபெற்றால் கருக்கலைப்புக்கு நிபந்தனையற்ற தடை விதிப்பதாக உறுதிகொடுத்தார். அது மட்டுமின்றி தனது இணையரான ரொசாரியோ மோரில்லோவை கத்தோலிக்க சடங்குகளின் படி திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.”

இதனை தொடர்ந்து 2006 ஆட்சியை பிடித்து நிகரகுவாவின் அதிபரான டேனியல் ஓர்டேகா, தனது பழைய பாணியையே மீண்டும் கடைபிடித்தார்.

நிகரகுவாவில் எப்போதுமே ஊழல் இருந்து வருவதாக தெரிவிக்கும் பிராண்டன் வான் டிக், ஆனால் மீண்டும் ஓர்டேகா ஆட்சிக்கு வந்த பிறகு நெப்போட்டிசம், ஊழல் மற்றும் எதிரணியினர் மீதான அடக்குமுறை மேலும் அதிகரித்து விட்டதாக கூறுகிறார்.

எதிரணி மீதான அடக்குமுறை

2018ஆம் ஆண்டு நிகரகுவா முழுவதும், ஓர்டேகா அரசுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.

இதனை தொடர்ந்து ஆக்ரோஷமான முறையில் போராட்டங்களை ஒடுக்க தொடங்கினார் டேனியல் ஓர்டேகா. அந்த வருடத்தின் இறுதியில் அரசின் பாதுகாப்பு படைகள் நூற்றுக்கணக்கான மக்களை கொலை செய்தது மற்றும் கைதும் செய்தது.

மனித உரிமைகள் அமைப்பான பியான்கா ஜாகர் மனித உரிமைகள் அறக்கட்டளையின் தலைவர் பியான்கா ஜாகர், அரசின் எதிர் நடவடிக்கைகளை நேரில் பார்த்தவர்.

பிபிசியிடம் பேசிய அவர், “ நாங்கள் பேரணியாக சென்று கொண்டிருந்த போது, பாதுகாப்பு படை போராட்டக்காரர்களை நோக்கி சுட ஆரம்பித்தது. அன்று நிகரகுவாவில் 19 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 180 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 2018ஆம் ஆண்டு யாரெல்லாம் அரசுக்கு எதிரானவர்கள் என்ற பட்டியலை அதிபர் டேனியல் ஓர்டேகாவும், துணை அதிபரான ரொசாரியோ மோரெல்லோவும் தயார் செய்ததாகவும், அதில் பல மதம்சார் பிரதிநிதிகளின் பெயரும் இருந்தது” என்று கூறுகிறார்.

“அந்த பட்டியலில் பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களை பாதுகாக்க முயன்ற கத்தோலிக்க திருச்சபை தலைவர்களின் பெயர்களும் இருந்தது. இந்த தலைவர்கள் அரசின் அத்துமீறல்களை விமர்சனம் செய்தவர்கள்” என்கிறார் பியான்கா ஜாகர்.

அடுத்த ஆண்டிற்குள் நிகரகுவாவில், அரசை எதிர்த்த பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர். இதில் பல மத தலைவர்களும் அடங்குவர்.

பலரை நாடு கடத்திய ஓர்டேகா

பியான்கா ஜாகர் கூற்றுப்படி, குறைந்தது 200 மதத்தலைவர்களாவது சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டனர். இவர்களில் பலரது குடியுரிமைகள் ரத்து செய்யப்பட்டன.

டேனியல் ஓர்டேகாவும், ரொசாரியோ மோரெல்லோவும் நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளை அழித்து வருவதாகவும், இனி இங்கு எந்த ஒரு மத குருவோ அல்லது தலைவரோ மிச்சம் இருக்கமாட்டார் என்கிறார் பியான்கா ஜாகர்.

ஆனால், ஒரு மதத்தலைவர் மீது மட்டும் அரசால் குறிவைக்கப்பட்டது அது எதிர்க்கட்சிக்கும் ஓர்டேகா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க அழைக்கப்பட்ட பிஷப் அல்வாரெஸ்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது அவர் ஓர்டேகாவிற்கு ஆதரவாக பேசவில்லை.

இதுகுறித்து விவரிக்கும் பியான்கா ஜாகர், “ஓர்டேகா, எதிர்க்கட்சி மற்றும் மாணவ தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிஷப் அல்வாரெஸ், இந்த நாடு ஒரு மாற்றத்தை விரும்புவதாக கூறினார். அதையே நிகரகுவாவின் மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார். இதனால் ஓர்டேகா நினைத்ததை சாதிக்க முடியவில்லை. எனவே இதற்கு பிஷப் அல்வாரெஸையே பொறுப்பாக்கினார் அவர்” என்கிறார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் அரசியல் சூழல் மேலும் மோசமடைந்தது. அதற்கு பின்னர் பிப்ரவரி 2023 இல், அரசு நிகரகுவாவிலிருந்து 200 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை அமெரிக்காவிற்கு அனுப்பியது.

இதில் பல பத்திரிகையாளர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் அடங்குவர். ஆனால் பிஷப் அல்வாரெஸை தேசத்துரோக குற்றம் சுமத்தி 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைத்தது.

இது நேரடியாக கத்தோலிக்க திருச்சபையின் நம்பகத்தன்மைக்கு விடப்பட்ட சவாலாக பார்க்கப்பட்டது. தற்போதைய கேள்வி என்னவென்றால், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஓர்டேகா அரசின் அடக்குமுறையை நிறுத்துவதற்கு திருச்சபைக்கு என்ன வழிகள் உள்ளது?

வாடிகன் அமைதி காப்பது ஏன்?

சில செய்தி அறிக்கைகளின்படி, 2023ஆம் ஆண்டு பெரிய அளவில் கத்தோலிக்கர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவெடுத்த ஓர்டேகாவின் செயல்களை, நாஜி ஆட்சியோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் போப் பிரான்சிஸ். இது ஓர்டேகாவை கோபமடைய செய்துள்ளது.

ஏற்கனவே வாடிகனின் தூதரை மீண்டும் ரோமுக்கு அனுப்பியதன் மூலம் திருச்சபையுடனான பேச்சுவார்த்தைக்கான கதவை அவர் மூடி விட்டார். இந்நிலையில் இந்த உறவு மேலும் மோசமடைந்தது.

இதனை தொடர்ந்து பிஷப் அல்வாரெஸ் மற்றும் பிற மதத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வாடிகன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

2024 புத்தாண்டு தினத்தில் கிறிஸ்தவ ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போப் பிரான்சிஸ், நிகரகுவாவில் உள்ள கிறிஸ்தவ மதத்தலைவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள சூழல் குறித்து தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்தார்.

நிகரகுவாவில் நடந்து வரும் அடக்குமுறையோடு ஒப்பிடுகையில், அவரது உரை சாதாரணமானதாக பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் போரின்போது இதே வாடிகன், போப் பிரான்சிஸ் இந்த போரை முட்டாள்தனமானது, வெறுப்பானது மற்றும் இழிவானது என்று கருதுவதாக கூறினார்.

இதுகுறித்து ரோமில் உள்ள கத்தோலிக்க செய்தி நிறுவனமான EWTN-ACI இன் வாடிகன் விவகார நிபுணரான ஆண்ட்ரியா காக்லியார்டுசியிடம் பேசினோம், ரஷ்யா அல்லது பிற நாடுகளின் பிரச்னைகளில் எதிர்வினையாற்றியதை போல, ஏன் நிகரகுவா அடக்குமுறைக்கு வாடிகனின் எதிர்வினை வலுவானதாக இல்லை என்று அவரிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “நிகரகுவாவில் உள்ள பிஷப்கள் மற்றும் இதர மத தலைவர்கள் தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணுவ குழுக்கள் மதத் தலைவர்களை இலக்காக வைத்துள்ளனர். இது ரஷ்யாவில் நடக்கவில்லை. ரஷ்யாவுக்கும் வாடிகனுக்கும் நல்ல உறவு கிடையாது. ஆனால், நிகரகுவாவின் நிலை வேறு” என்கிறார்.

நிகரகுவாவில் வாழும் முக்கியமான கத்தோலிக்க நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டே போப் எச்சரிக்கையுடன் இந்த விஷயத்தை அணுகி வருகிறார். ஆனால் இதற்கு வேறு காரணங்களும் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

நிகரகுவா போன்ற கத்தோலிக்க மக்கள் அதிகம் வாழும் நாட்டுடன் வாடிகன் கொண்டுள்ள உறவை துண்டிப்பது என்பது, ஏற்கனவே வாடிகனோடு முரண்படும் சீனா மற்றும் வடகொரியா நாடுகளுடன் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

சீனாவில் கத்தோலிக்க தலைவரை யார் நியமிப்பது என்பதே அந்நாட்டுக்கும், வாடிகனுக்கும் உள்ள பிரச்னை. இதே விஷயத்தை செய்ய டேனியல் ஓர்டேகாவும் நினைக்க வாய்ப்புள்ளது.

அப்படி திருச்சபையின் பிரதிநிதியை நியமிக்க தனக்கே உரிமையிருப்பதாக நிகரகுவா கூறினால் வாடிகன் என்ன செய்யும்?

“அவர்கள் அப்படி எப்போதும் செய்ய மாட்டார்கள்” என்று கூறும் ஆண்ட்ரியா, பிஷப்புகள் போப்பால் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். எனவே அவர்களை நியமிப்பது போப்பின் விருப்பம் இல்லாமல் சாத்தியமில்லை. இது திருச்சபையின் சுதந்திரம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இது போன்ற ஒப்பந்தத்திற்கு வாய்ப்பே இல்லை” என்கிறார்.

ஆனால், இது சீனாவில் நடந்துள்ளதல்லவா?

இதற்கு பதிலளித்த அவர், “ சீனாவில் இது குறித்த ஒப்பந்தம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரை திருச்சபையின் பொறுப்புக்கு வாடிகனால் சிலரின் பெயர்கள் சீன அரசிற்கு பரிந்துரைக்கப்படும். அந்த பட்டியலில் யார் தங்களுக்கு உகந்தவர் என அவர்களால் விவாதிக்கப்படும். ஆனால், இறுதி முடிவை போப்தான் எடுப்பார்.”

பல சமயங்களில், ஒரு நாட்டுடனான இராஜ தந்திர உறவில் முறிவு ஏற்பட்ட பிறகு, திருச்சபை மட்டுமே தொடர்பு கொள்ளும் ஒரே வழியாக இருந்துள்ளது.

ஆன்ட்ரியாவின் கூற்றுப்படி, பல இயற்கை பேரிடர்கள் மற்றும் மோசமான சூழல்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக திருச்சபைகளே உதவியுள்ளன. ஆனால் மத்திய அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டில் கத்தோலிக்க திருச்சபை மட்டும் தான் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்கிறதா?

உலக அளவில் என்ன நடக்கிறது?

வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தின் அமெரிக்க திட்டத்தின் இயக்குனர் ரயன் பெர்க், “நிகரகுவாவில் கத்தோலிக்கர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் துன்புறுத்தப்படுவதை போல வேறு எந்த நாட்டிலும் நடப்பதில்லை” என்கிறார்.

இதன் அண்டை நாடுகளில் மனிதஉரிமை மீறல்கள் இயல்பான ஒன்றாக இருப்பதன் காரணத்தால்தான், இந்த நாட்டில் நடந்து வரும் அடக்குமுறைகள் அதிகம் வெளியில் தெரியாமல் இருந்து வருகிறது.

“இந்த பிராந்தியமே தனது உள்நாட்டு பிரச்சனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காரணத்தால் தான் யாரும் நிகரகுவாவில் நடைபெற்று வரும் அடக்குமுறை குறித்து குரல் எழுப்பவே இல்லை. இது தனக்கு கவலையளிக்கிறது” என்கிறார் அவர்.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்கா என்ன செய்து கொண்டிருக்கிறது? 1986களில் கம்யூனிசத்தை எதிர்க்கும் நோக்கில், ஓர்டேகா அரசை எதிர்க்க அமெரிக்கா நிதியுதவி அளித்ததை நாம் பார்த்தோம்.

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

பனிப்போருக்கு பிறகு நிகரகுவா மீதிலிருந்து அமெரிக்காவின் கவனம் திரும்பிவிட்டதாக கூறும் ரயன் பெர்க், தற்போது அமெரிக்கா உலகின் வேறு பிரச்னைகளோடு போராடி வருகிறது என்கிறார்.

ரயன் பெர்க் கூறுகையில், “நாம் நிகரகுவாவை ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற பிரச்னையின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதிலிருந்து விலகி, தற்போது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தின் பிரச்னையின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறோம். அங்கு சர்வாதிகாரம் உள்ளதும் சட்டவிரோத குடியேற்ற பிரச்சனைக்கு ஒரு காரணம்.

பனிப்போருக்குப் பிறகு நிலைமை ரொம்பவே மாறிவிட்டது. இப்போது நிகரகுவா ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை வளர்த்து வருவதைக் காண்கிறோம். இந்த விஷயத்தில் அமெரிக்கா ஒரு வியூகத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார்.

வாடிகன் விரும்பினால் டேனியல் ஓர்டேகா மற்றும் அவரது மனைவியை மதத்தை விட்டு வெளியேற்ற முடியும்.

ஆனால், அப்படி செய்வதால் அவர்களுக்கோ அல்லது அரசிற்கோ எந்த விதமான குறிப்பிடத்தகுந்த தாக்கமும் ஏற்படும் என்பது போல் தெரியவில்லை என்பதே ரயனின் கருத்து.

மீண்டும் பழைய கேள்விக்கே வருவோம், வாடிகனால் நிகரகுவாவில் நடக்கும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிரான அடக்குமுறையை தடுக்க முடியுமா?

ஓர்டேகாவால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து நிகரகுவாவின் மூத்த மதத்தலைவர்கள் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

அதற்கு எதிர்வினையாக அவர்களை கைது செய்வது, நாட்டிலிருந்து வெளியேற்றுவது மற்றும் வாடிகனுடனான உறவுகளை துண்டிக்கும் செயல்களை முன்னெடுத்துள்ளார் ஓர்டேகா.

நிகரகுவாவில் கத்தோலிக்க தலைவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்த அடக்குமுறை குறித்து இந்தாண்டு போப் பொதுவெளியில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

நிகரகுவாவில் இருந்து விடுதலை செய்த பிறகு பிஷப் அல்வாரெஸ் ரோமுக்கு திரும்பிவிட்டார். நிகரகுவாவில் நிலவும் சூழல் குறித்து விரைவில் அவரிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி என்னவென்றால் இதில் வேறு என்ன வாடிகனால் செய்ய முடியும்? வாடிகனின் வரலாற்றில், இதுபோன்ற பல சிக்கலான சூழல்களில் அதன் ராஜதந்திர முடிவுகளை செயல்படுத்தியிருப்பதை பார்க்க முடியும். ஆனால், இந்த முறை ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வாடிகனுக்கு உதவ வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)