சேவாக் சாதனை சமன் - 'பேஸ்பால்' இங்கிலாந்தை திணறடித்த இந்தியாவின் 'ஜெய்ஸ்வால்'

    • எழுதியவர், சஞ்சய் கிஷோர்
    • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி

இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டுக்கு பதிலாக இந்தியா 'ஜெய்ஸ்பால்' கிரிக்கெட்டை களமிறக்கியிருக்கிறது.

ஆம், இந்தியாவின் இளம் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணியை ஐ.சி.யு.வுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. அதிலிருந்து இங்கிலாந்து அணி மீள்வதற்கு சாத்தியமில்லை என்றும் தெரிகிறது.

ராஜ்கோட் டெஸ்டின் நான்காவது நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முநதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்றைய காலகட்டத்தில், டி-20 போன்ற வேகமான கிரிக்கெட்டின் ஆக்ரோஷம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் ஒரு வீரரிடம் அரிதாகவே காணப்படுகிறது.

உலக கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போல் டெஸ்ட் மற்றும் டி-20 கிரிக்கெட்டை இவ்வளவு சிறப்பாக சமநிலையில் வைத்திருக்கும் ஒரு வீரர் இல்லை.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி எச்சரிக்கையுடன் தொடங்கி முதல் 39 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு அவர் விரைவில் தனது ஆட்டத்தை மீட்டெடுத்து, பவுண்டரிகளை விளாசி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஸ்பின்னர்களின் பந்துகளை விளாசிய ஜெய்ஸ்வால்

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்தின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை குறிவைத்தார்.

ஆட்டத்தின், 27வது ஓவரில் ஆண்டர்சன் பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார். லாங் ஆன் ஆஃப் ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்துவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஜெய்ஸ்வாலின் ஆக்ரோஷத்தில் இருந்து, பந்துவீச்சாளர்கள் ஜோ ரூட் மற்றும் ரெஹான் அகமதும் தப்பவில்லை

இருவரின் பந்துகளிலும் ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடித்தார். அவரது ஆக்ரோஷத்தில் டி-20 போட்டியின் தன்மை வெளிப்பட்டாலும், அவர் ஆடித்த ஒவ்வொரு பவுண்டரியும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

யஷஸ்வி தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளில், 122 பந்துகளில் மூன்றாவது சதத்தையும், தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது சதத்தையும் அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், அவர் 209 ரன்கள் எடுத்திருந்தார்.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையும் யஷஸ்வி விட்டுவைக்கவில்லை.

அவரது ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஷாட்கள் மிக அழகாக இருந்தன. அவரது இன்னிங்ஸைப் பார்த்த முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது சமூக ஊடகப் பக்கமான 'எக்ஸ்' தளத்தில், "யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சதத்திற்குப் பின் சதம். சுழற்பந்து வீச்சாளர்கள் நடத்தப்பட வேண்டிய விதத்தில் நடத்தப்படுகிறார்கள். கொடு கொடு கொடு," என பதிவிட்டிருந்தார்.

சிக்சருடன் அரை சதம், பவுண்டரி அடித்து சதம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.

நேற்றைய ஆட்டத்தில், 133 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து, 104 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 78.19 ஆகும். இதையடுத்து முதுகு வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

சதம் அடித்த யஷஸ்வி, டேவிட் வார்னரைப் போல் காற்றில் குதித்து கொண்டாடினார். ஒருவேளை முதுகு வலிக்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், இந்த காலகட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு பிறகு 400 ரன்கள் எடுத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார்.

விராட் 2018-இல் 593 ரன்களும், ரோஹித் சர்மா 2021-இல் 368 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஹைதராபாத் டெஸ்டின் முதல் நாளில், ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் டெஸ்டில் இருந்து டி20க்கு மாறுவது அல்லது டி20யில் இருந்து டெஸ்டுக்கு மாறுவது கடினமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

யஷஸ்வி, டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார். அதன் பிறகு அவர் 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்ததன் அடிப்படையில் அவர் கூட்டாக ஏழாவது இடத்தில் உள்ளார். இந்த விஷயத்தில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சமன் செய்துள்ளார்.

ஜெய்ஸ்வால் அதிரடி இரட்டை சதம் - உலக சாதனை சமன்

களத்தில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் கடந்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து ஜோ ரூட் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார்.

236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில், பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.

அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.

ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் என்ற தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.

ஜெய்ஸ்வால் இதுவரை எத்தனை சதங்கள் அடித்துள்ளார்?

யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்நாட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். 2019-ஆம் ஆண்டில், ஹசாரே டிராபியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இவர் வெளிச்சத்திற்கு வந்தார்.

ஜெய்ஸ்வால் இன்னிங்சில் 113, 22, 122, 203 மற்றும் 60 ரன்கள் எடுத்தார்.

2020-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். இவர் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் முதல் சீசனில் சரியாக விளையாடா விட்டாலும், படிப்படியாக அவர் முன்னேறினார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 163.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 625 ரன்கள் எடுத்தார்.

ஜோஸ் பட்லருடன் இவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. 13 பந்துகளில் அரை சதம் அடித்து அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

யஷஸ்வி 2019-இல் ரஞ்சி விளையாடத் தொடங்கினார். 2021-22ல், அவர் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து மும்பையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இதுவரை, அவர் 37 முதல் தர இன்னிங்ஸில் 73 சராசரியுடன் 2482 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 11 சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும்.

அதனால்தான் அவருக்கு ஒருநாள் மற்றும் டி-20க்கு முன் டெஸ்ட் கேப் வழங்கப்பட்டது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஜூலை 2023 அன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமானார்.

அதன் பிறகு 7 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் அவர் பேட்டிங் செய்துள்ளார்.

2 இரட்டை சதம், 3 சதம், 2 அரைசதங்களுடன் அவர் 861 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 68.99 ஆகும். 90 பவுண்டரிகளையும், 25 சிக்சர்களையும் ஜெய்ஸ்வால் விளாசியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சேவாக், மஞ்ச்ரேக்கர் ஆகியோரை அவர் சமன் செய்துள்ளார். இவர்கள் மூவரும் ஏழாவது இடத்தில் இருக்கின்றனர்.

வறுமையை வென்று சாதித்தது எப்படி?

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் சூரியவான் கிராமத்தைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை சிறிய ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார்.

கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை 11 வயதில் மும்பைக்கு இழுத்தது. தனியாகப் போராடினார். பால் பண்ணையில் கூட வேலை செய்ய வேண்டியிருந்தது.

பல ஆண்டுகளாக, மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் கிளப் கூடாரத்தில் யஷஸ்வியும் வசித்து வந்தார்.

இங்கு இரவில் உணவு சமைத்துவிட்டு, பகலில் கிரிக்கெட் பயிற்சி செய்து வந்தார். இது தவிர கோல் கப்பாவும் விற்கப்பட்டது.

இவை அனைத்திற்கும் மத்தியில், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்தார். கடின உழைப்பு பலன் தந்தது, மற்றவை வரலாறானது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)