ரஷ்யாவில் புதினுக்கு சவாலாக உருவெடுத்த 'அலெக்ஸே நவால்னி' யார்? சிறையில் அவருக்கு என்ன நடந்தது?

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரசாரகரான அலக்ஸே நவால்னி, அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிரான முக்கிய முகமாகக் கருதப்படுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் தற்போது உடல்நலம் மோசமாகி உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிகார மட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஊழலை வெளிப்படுத்தி இவர் வெளியிட்ட ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இன்று வரையிலும் இவர் கிரெம்ளினுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார். புதினுக்கு எதிராக தேர்தலில் நிற்க முயற்சி செய்து அது முடியாமல் போனாலும், தனது தொடர் இயக்கத்தின் மூலமாகப் பல லட்சம் ரஷ்ய மக்கள் விரும்பும் நபராக அவர் உருவெடுத்துள்ளார்.

யார் இந்த அலெக்ஸே நவால்னி?

அலெக்ஸே நவால்னி ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள பியுடன் எனும் கிராமத்தில் 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர். இவர் தனது சட்டபடிப்பை 1998இல் மாஸ்கோவில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.

கடந்த 2010இல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைகழகத்தில் ஆய்வு உதவியுடன் கூடிய Yale World Fellow திட்டத்தில் மாணவராக ஓராண்டு் ககாலம் கழித்தார். நவால்னிக்கு யூலியா என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

நவால்னி எப்படி பிரபலமானார்?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் தீவிர எதிர்ப்பாளராக அறியப்படும் 47 வயது நவால்னி ரஷ்யாவின் அதிகார மையத்தில் நிலவும் ஊழலை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காகவே மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதுவே அவருக்குப் பல இன்னல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடவும் அவர் முயற்சி செய்தார். அதற்கான பிரசாரப் பணிகளைத் தொடங்கி, பிராந்திய அளவிலான குழுக்களையும் அமைத்தார்.

ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதால், அவரால் அந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனாலும், பல ரஷ்யர்களிடையே அவரது குரல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரஷ்ய அரசுக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தார்.

அவரது ஊழலுக்கு எதிரான குழுவினர் மேற்கொண்ட பிரசாரங்கள், ரஷ்ய அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் இருந்த ஊழல்களை அம்பலப்படுத்தின. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சம் பேரிடம் பிரபலமானார்.

நவால்னி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், யுக்ரேன் போருக்கு எதிராக உள்நாட்டில் எழுந்த குரல்களில் முக்கியமானவராக இருந்தார். 2022ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், யுக்ரேன் போர் குறித்துப் பேசிய இவர், “புதின் ஒரு முட்டாள்தனமான போரை ஆரம்பித்து வைத்திருப்பதாக” கூறினார்.

புதின் மற்றும் ரஷ்ய அரசை நோக்கித் தொடர் விமர்சனம்

நவால்னி 2008ஆம் ஆண்டுதான் ரஷ்ய அரசியலில் பெரிய சக்தியாக வளரத் தொடங்கினார். ஏனெனில் ரஷ்யாவின் ஒரு சில பெரிய மாகாணங்களில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்தது குறித்து அவர் தனது இணையப் பக்கத்தில் எழுதி வந்தார்.

அவருடைய ஓர் உத்தி என்னவெனில், பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒரு சிறு பங்குதாரராக இணைந்துகொள்வார். பின்னர் மேலதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்விக்கு உள்ளாக்குவார்.

இவர் ரஷ்யாவில் 2011இல் நடந்த போராட்டங்கள் மூலம் பிரபரலமானார். அப்போது தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதனால் ரஷ்யா கடந்த சில தசாப்தங்களில் சந்திக்காத மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து நவால்னி கைது செய்யப்பட்டபோது அது இன்னும் அவரை பிரபலமாக்கியது.

மோசடி வழக்கு என்ற பெயரில் அவர் 2013 ஜுலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாவே பார்க்கப்பட்டது.

ஆனால், அதே ஆண்டில் அவர் மாஸ்கோ மேயர் தேர்தலில் பிரசாரம் செய்ய அனுமத்திக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் புதின் கூட்டாளி செர்கே சோபியானியிடம் தோற்றார். அதற்குக் காரணாமாக இவருக்கு தொலைக்காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது கூறப்பட்டது.

வெறும் இணையதளம் மற்றும் வாய்வழிப் பிரசாரமே அவர் செய்ய முடிந்தது. எனவே இவரது ஆதரவாளர்கள் எதிரணியின் வெற்றி ஒரு நாடகம் என்று கூறினார்கள்.

புதின் மீது கடுமையான விமர்சனம்

நவால்னி தொடர்ந்து புதின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சி எடுப்பவர் என்று அதிபரை குற்றம் சாட்டினார்.

இவர் எளிமையான ரஷ்ய மொழியில் பேசியதால், வேகமாக ரஷ்ய இளைஞர்களின் குரலாக உருவெடுத்தார். சமூக ஊடகங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ரஷ்யாவின் செல்வாக்கான பிரபலங்களின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரது யூட்யூப் சேனலில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டது.

அதில் குறிப்பாக இவரது ஊழலுக்கு எதிரான குழு, புதினின் அரண்மனை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. அதில், புதினின் பணக்கார நண்பர்கள் அவருக்கு அரண்மனை ஒன்றைப் பரிசளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வீடியோ மட்டும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

ஆனால் அதை ஒரு போலி விசாரணை வீடியோ என்றும், அந்த வீடியோ போரடிப்பதாகவும் புதின் கூறினார். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து யுக்ரேன் போர், ரஷ்ய அதிகார மட்டத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் அதனோடு அதிபர் புதினுக்கு உள்ள தொடர்பு என அரசு என அதிபரை தீவிரமாக விமர்சிப்பவராகப் பார்க்கப்பட்டார் நவால்னி.

இந்த நிலையில் பலமுறை அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்படி 2020ஆம் ஆண்டு அவர் மீது நடத்தப்பட்ட நச்சுத்தாக்குதலில் அவர் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தொடர் தாக்குதல்கள்

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி, சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் வந்தபோது திடீரென நவால்னி மயங்கி விழுந்தார்.

ஓம்ஸ்க் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டு அவசர உதவி விமானத்தில் ஜெர்மனி அழைத்து வரப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் நச்சு ரசாயன தாக்கத்துக்கு ஆளானதாகக் கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பின்னர் ஜெர்மானிய இதழான டெர் ஸ்பீகலுக்கு நவால்னி அளித்த பேட்டியில், நோவிசோக் எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்குத் தாம் ஆளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இவரது கூற்றானது பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

நோவிசோக் நச்சு ரசாயனத்தைப் பயன்படுத்துவதற்கான உத்தரவை ரஷ்யாவின் மூன்று உளவு அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே பிறப்பிக்க முடியுமென்றும், அவர்கள் அனைவருமே புதினுக்கு கீழே பணிபுரிபவர்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால், நவால்னியின் நேரடி குற்றச்சாட்டு குறித்துப் பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர், நோவிசோக் நச்சு ரசாயன தாக்குதலுக்கு நவால்னி உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று தெரிவித்தார்.

ரஷ்யாவில் அவர் எந்நேரமும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற நிலையிலேயே இருந்தார். அவர் மீது நடத்தப்பட்ட நோவிசோக் நச்சுத் தாக்குதலுக்கு முன்பாகவே, பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். அடிக்கடி கைதும் செய்யப்பட்டார்.

அவர் மீது பலமுறை ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒருமுறை அவர் மீது கிரீன் டை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் கண்களில் கடும் எரிச்சலை அனுபவித்தார் நவால்னி.

சிறைவாசம்

கடந்த 2013ஆம் ஆண்டே மோசடி வழக்கு ஒன்றில் இவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலில் பங்கேற்பதற்காக அவர் சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்.

இந்தத் தண்டனை நிறுத்தத்திற்கான வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அதன் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது. அதாவது 2020 காலகட்டத்தில் வழக்கமான காவல்நிலைய வருகையை அவர் கடைபிடிக்கவில்லை எனக் கூறி மீண்டும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்வாதமாக நவால்னியின் வழக்கறிஞர்கள், அவர் அந்த நேரத்தில்தான் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருந்தார் என்பதை முன்வைத்தனர். ஆனாலும், 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாஸ்கோ திரும்பிய உடனேயே அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நவால்னி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நவால்னிக்கு சிறைத் தண்டனையை 9 ஆண்டுகளாக அதிகரித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர், தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு நவால்னிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இறுதி சிறை

கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி, இறுதியாக ஆர்க்டிக் வட்டத்திலுள்ள ஆர்டிக் பீனல் காலனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சிறையிலேயே இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து யமலோ-நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறைத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்குச் சென்று வந்த நவால்னி உடல் நலமற்றுக் காணப்பட்டதாகவும், திடீரென்று சுயநினைவற்று விழுந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவசர சிகிச்சை மருத்துவர்கள் வந்து உடனே சிகிச்சையளித்தும், பலனின்றி அவர் இறந்துவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள் என சிறைத்துறை கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நவால்னியின் மனைவி யூலியா, “இந்தச் செய்தியை நம்புவதா என்று தெரியவில்லை. இதுவரை அரசுத் தரப்பில் இருந்து மட்டுமே செய்திகள் வந்துள்ளன. புதின் அரசை நம்மால் நம்ப முடியாது. இந்தச் செய்தி மட்டும் உண்மை என்றால் இதற்கும், ரஷ்யாவிற்கு செய்தவற்றுக்கும் புதின் மற்றும் அவரது கூட்டாளிகளே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)