சுன்னத் செய்யும் போது மயக்க மருந்து அவசியமா? வங்கதேசத்தில் அடுத்தடுத்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

    • எழுதியவர், தாரிக் ஸமன் ஷமல்
    • பதவி, பிபிசி பங்களா சேவை

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார்.

அஹ்னாஃப் தஹ்மீத் என்ற அச்சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்களின் அனுமதியைப் பெறாமலேயே 'முழு மயக்க மருந்து' கொடுத்த காரணத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில், அயன் அகமது என்ற சிறுவனும் இதேபோன்று ஆணுறுப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். அப்போதும் இதே குற்றச்சாட்டை அச்சிறுவனின் குடும்பத்தார் எழுப்பினர்.

வங்கதேசத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக, முடிதிருத்துவோர் மயக்க மருந்து இல்லாமல் இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக, மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து எவ்வளவு முக்கியம்? அதில் என்ன ஆபத்து இருக்கிறது?

டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான டாக்டர் ஷா ஆலம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மயக்க மருந்து தேவை என்று பிபிசி வங்க மொழிச் சேவையிடம் கூறினார்.

"ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இச்சம்பவத்தில் மயக்க மருந்து தேவைப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேண்டும்," என்று டாக்டர் ஆலம் கூறுகிறார்.

முறையான உடல் பரிசோதனை செய்யாமல் தவறான நேரத்தில் தவறான மயக்க மருந்து கொடுத்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர் ஷா ஆலம் தெரிவித்துள்ளார்.

அஹ்னாஃப் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு

பத்து வயது அஹ்னாஃப் தஹ்மித், டாக்காவின் மாலி பாக் சௌதரி படாவில் உள்ள ஜே.எஸ். நோயறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையத்திற்கு அறுவை சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டதாக குழந்தையின் தந்தை ஃபக்ருல் ஆலம் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை 8:30 மணிக்கு முடிவடைந்தது, ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் சிறுவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதனால் ஃபக்ருல் ஆலம் கோபமடைந்தார்.

அவர் பிபிசி வங்க மொழிச் சேவையிடம், “எனது மகனுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த உறுதியான பதிலும் கொடுக்கப்படவில்லை. சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பும் என்று கூறினார்கள்,” என்றார்.

பத்து மணியளவில் மகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஆலமிடம் கூறப்பட்டது.

சிறுவனை உடனடியாக மற்றொரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) அழைத்துச் செல்ல வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. எனெனில் அந்த மருத்துவ மையத்தில் ஐ.சி.யூ இல்லை.

இதைத்தொடர்ந்து, சிறுவனை ஐ.சி.யூ-வுக்கு அழைத்துச் செல்ல அருகிலுள்ள தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டனர். இரவு 10:30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் அதற்குள் அஹ்னாஃப் இறந்துவிட்டார்.

ஃபக்ருல் ஆலம் தனது மகனுக்கு அனுமதியின்றி 'முழு மயக்க மருந்து' கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்.

அவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன் 'முற்றிலும் மயக்கமடைந்து' இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால்தான், என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​என் மகனுக்கு 'முழு மயக்க மருந்து' கொடுக்க வேண்டாம் என்று மருத்துவரிடம் சொன்னேன்,” என்றார்.

'என் மகனை கொன்றுவிட்டனர்'

இச்சம்பவத்திற்குப் பிறகு, சிறுவனின் குடும்பத்தார் செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர், அதில் மருத்துவமனை உரிமையாளர் மற்றும் பணியில் உள்ள மருத்துவர் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஃபக்ருல் ஆலம் கூறுகையில், “என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

அஹ்னாஃப் தஹ்மித் டாக்காவில் உள்ள மோதி ஜீல் ஐடியல் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

அஹ்னாஃப்பின் குடும்பம் முன்பு டென்மார்க்கில் வசித்து வந்தது. அஹ்னாஃப் அங்குதான் பிறந்தார். தொழிலதிபர் ஃபக்ருல் ஆலம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 2017-இல் வங்கதேசம் திரும்பினார்.

மயக்க மருந்து எப்போது ஆபத்தானது?

ஒரு காலத்தில் மயக்கமருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.

நவீன மருத்துவ முறையில், மனித உடலில் சிறிய அல்லது பெரிய அறுவை சிகிச்சை செய்யும் முன் மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்கிறார்கள்.

மயக்க மருந்து உடல் அல்லது அதன் ஒரு பகுதியை மரத்துப்போகச் செய்கிறது. எனவே அறுவை சிகிச்சையின் போது நோயாளி எந்த வலியையும் உணர்வதிவில்லை.

டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான ஷா ஆலம், பிபிசி பங்களாவிடம், "இதை எந்த பிரச்னையும் இல்லாமல் செய்ய முடியும்,” என்று கூறினார்.

ஷா ஆலம் கூறுகையில், “மயக்க மருந்துகளில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்யும்போது, ​​​​அந்த பகுதி மட்டுமே மரத்துப்போகும். இது 'லோக்கல் அனஸ்தீசியா’ என்று அழைக்கப்படுகிறது” என்றார்.

பெரிய அறுவை சிகிச்சைக்கு முன், உடல் முழுவதும் மரத்துப் போவதற்கு மயக்க மருந்து செலுத்தப்படும் என்று கூறினார். இந்த நிலையில் நோயாளி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மீண்டும் எழுந்திருப்பார்.

யாருக்கும் மயக்க மருந்து கொடுப்பதற்கு முன், அவரது ரத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பெற பல பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்கிறார் ஷா ஆலம்.

எந்த வகையான மயக்க மருந்து இதற்கு பாதுகாப்பானது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

இதுதவிர, காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், இதய நோய் உள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கக் கூடாது என, டாக்டர் ஷா ஆலம் அறிவுறுத்தினார்.

இதுபோன்ற சமயங்களில் மயக்க மருந்து கொடுப்பது பாதுகாப்பானது அல்ல என்றார். அவரைப் பொறுத்தவரை, அத்தகைய சூழ்நிலை இருந்தால், ஒரு சிறப்பு மருத்துவரின் கருத்துடன் நோய் குணமடைந்தபின் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம்.

ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை என்றால் என்ன?

ஆணுறுப்பின் முன்தோலை நீக்கும் சிகிச்சை மத மரபுகளுக்கு முன்பே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தோல் மென்மையானது மற்றும் அதன் உட்பரப்பு மேலும் மென்மையானது.

அமெரிக்காவைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் அன்னா மரியா பிபிசியுடன் பேசுகையில், இந்த மென்மையான தோலின் செயல்பாடு, ஆணுறுப்பின் நுனிப்பகுதியைப் மூடுகிறது என்று விளக்குகிறார்.

ஆணுறுப்பின் நுனிப்பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், இந்த தோல் சில பாதுகாப்பு செயல்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆரம்ப நாட்களில், காற்று பட்டாலோ, அல்லது துணி பட்டால் கூட வலி ஏற்படுவதற்கு இதுவே காரணம். ஆனால் காலப்போக்கில், இந்தப் பகுதி சற்றுக் கடினமாகி, அதன் உணர்திறனை இழக்கிறது.

இந்த அறுவை சிகிச்சை பொதுவாக இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் அதாவது மென்மையான தோலை கூர்மையான சவரக்கத்தி அல்லது பிளேடால் வெட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது. இரண்டாவது முறை 'ஸ்டேப்பிள் கன்’ எனப்படும் கருவியால் செய்யப்படுகிறது. கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள், வயதான ஆண்களுக்கு ‘லோக்கல் அனஸ்தீசியா’ மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் அதிக வலி இருக்காது.

இந்த அறுவை சிகிச்சையை எப்போது செய்ய வேண்டும்?

மதக் காரணங்களை விட்டுவிட்டு, ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் மட்டுமே பேசினால், இந்தக் கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.

ஒருபுறம், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் குழந்தை பிறந்தவுடன் இந்த அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று கருதுகின்றனர்.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் படி, இந்த அறுவை சிகிச்சை, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், ஆண்குறி புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட பல பால்வினை நோய்களைத் தடுக்க உதவுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் வயதான காலத்தில் ஏற்படும் சிக்கல்களை விட மிகக் குறைவு என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறுகிறது.

எந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது இந்த அமைப்பின் கருத்து.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. எனவே, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று அரச மருத்துவ சங்கம் ஒரு மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு உறுதியான மருத்துவக் காரணம் இருக்கும் போது மட்டுமே செய்யப்பட வேண்டும்.

பரவலான கருத்துக்கு மாறாக, இந்த அறுவை சிகிச்சை மருத்துவ மற்றும் உளவியல் சிக்கல்களின் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று இந்த அமைப்பு கூறுகிறது. இதில் ரத்தப்போக்கு, தொற்று மற்றும் சிறுநீர் பாதை சுருங்குதல் மற்றும் பீதி தாக்குதல்கள் ஆகியவை அடங்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)