You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - அவற்றை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் வகைகளை அரசு உணவுப் பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், ரோடமைன்பி-பி(Rhodaminebe-B) என்ற செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
"இது உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம்- 2006 பிரிவு 3(1)(zx), பிரிவு 3(1)(zz)(iii)(v)(viii) &(xi) மற்றும் பிரிவு 26(1)(2)(i)(ii)&(v)-ன்படி தரம் குறைந்த மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்- 2006-ன் படி ரோடமைன்பி-பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்ட உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-யின் படி தண்டனைக்குரிய குற்றமாகும், " என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வகத்தில் பஞ்சு மிட்டாய் பரிசோதனை
புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்த பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சுமிட்டாயில் மட்டும்தான் ஆபத்தான செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? உணவுப் பொருளில் சேர்க்கப்படும் நிறமிகளின் அளவை கண்காணிப்பது யார்? உணவு பாதுகாப்புத்துறை நிறமிகள் விவகாரத்தில் கூறுவது என்ன?
புதுச்சேரி மாநிலத்தில் வடமாநில இளைஞர்களால் விற்பனை செய்யப்பட்டு வரும் பஞ்சு மிட்டாயின் நிறம் வித்தியாசமாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தைச் சேர்ந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தேடுதல் பணியில் இறங்கி இருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் புதுச்சேரியில் சைக்கிளில் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்த வட மாநில இளைஞரிடமிருந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்து அதனை இந்திரா நகர் பகுதியில் இருக்கும் உணவு மற்றும் மருந்தாய்வுத்துறையில் வைத்து பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறார்.
அதில் அரசு தடை செய்த தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மனிதர்களுக்கு புற்றுநோயை வரவழைக்கக் கூடிய காரத்தன்மை கொண்ட வேதிப்பொருள் பஞ்சுமிட்டாயின் நிறத்தை கூட்டிக் காண்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சுமிட்டாய் வைத்திருந்த வட மாநில இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. குழந்தைகள் சாப்பிடக் கூடிய பஞ்சுமிட்டாயில் உடல் நலத்திற்கு கேடான வேதிப்பொருட்கள் கலப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
'ஊதுபத்தியில் சேர்க்கப்படும் நிறமி பஞ்சுமிட்டாயில் சேர்ப்பு'
புதுச்சேரி மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி எம். ரவிச்சந்திரன் பிபிசியிடம் பேசிய போது, "கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி வட மாநில இளைஞர் ஒருவர் இந்திரா நகர் பகுதியில் விற்பனை செய்து கொண்டிருந்த பிங்க் கலர் பஞ்சுமிட்டாயைக் கைப்பற்றி அதனை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
அதில் உணவுப் பாதுகாப்புத்துறையால் தடை செய்யப்பட்ட ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சு நிறமி குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் கலந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உட்கொண்டால் கேன்சரை உருவாக்கும்.
இந்த நச்சு நிறமி தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நிறமியாகும். குறிப்பாக ஊதுபக்திகளில் பின் பகுதியில் பச்சை, மஞ்சள், பிங்க் ஆகிய நிறங்களில் இருக்கும். அதற்கு இந்த நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன.", என்றார்
'தமிழ்நாட்டில் எல்லையில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு'
"புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் பஞ்சு மிட்டாய் வடமாநில இளைஞர்களால் தயார் செய்யப்பட்டு புதுச்சேரியில் சைக்கிளில் எடுத்து வந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட வட மாநில இளைஞர் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் 30 வடமாநில இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அரசு பரிந்துரை செய்த அளவிலான நிறமிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு அது கண்காணிக்கப்பட இருக்கிறது", என்றார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி.
உணவு பாதுகாப்புத்துறை அனுமதித்த நிறமிகள் என்ன?
"இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்( FSSAI- Food safety and Standards Authority of India) உணவு தரச் சான்றிதழ் பெற்ற நிறமிகளை மட்டுமே உணவுப் பொருளில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அமிலத்தன்மைகள் உள்ள டார்ட்ராசைன் மஞ்சள்( Tartrazine yellow), சன்செட் மஞ்சள்( sunset yellow), கார்மோசைன்(Carmoisine), எரித்ரோசின் (Erythrosine),பொன்சியோ 4 ஆர், இண்டிகோ கார்மைன் (Indigo carmine), ஃபாஸ்ட் கிரீன் ( fast green) ஆகிய நிறமிகளை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ரோடமின் பி என்ற நிறமி காரத்தன்மை கொண்டது. இது தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. இது பயன்படுத்துவது சட்ட விரோதமானது.
மக்கள் உண்ணும் பஞ்சு மிட்டாய், லட்டு, கேசரி, சிக்கன், குளிர்பானம்,பாட்டில் குடிநீர் ஆகியவற்றில்100 பி.பி.எம் (100 PPM ( Parts per million அளவில் மட்டுமே நிறமிகள் சேர்க்க மட்டுமே அரசு அனுமதி அளித்து இருக்கிறது. குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி, ஜெம்ஸ் ஆகியவற்றில் 200 பி.பி.எம் நிறமிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஜெல்லியில் இருக்கும் வேதிப் பொருள் இதன் தாக்கத்தை குறைத்துவிடும் என்பதால் அரசு அனுமதி கொடுத்து இருக்கிறது", என்றார்.
'பஞ்சுமிட்டாய் கொடுப்பதை தவிர்ப்பேன்'
இதுகுறித்து பிபிசி இடம் பேசிய இராமநாதபுரத்தைச் சேர்ந்த 7 வயது குழந்தையின் தந்தையான ஜெ.ஆர். ஜோன்ஸ் அருண்ராஜ் கூறும்போது, "எனது 7 வயது மகளுக்குத் துவக்க காலத்தில் இருந்தே பஞ்சு மிட்டாய் கொடுப்பதை தவிர்த்து வந்து இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அதில் அதிக அளவிலான சீனி, கலர் பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை.
பொருட்காட்சிகள் அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது மட்டும் அதிக நிறமிகள் இல்லாத பஞ்சுமிட்டாய் தென்பட்டால் மட்டுமே வாங்கிக் கொடுப்பேன். அதுதான் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாது", என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "வெளிநாடுகளில் உணவு பாதுகாப்பில் அந்த அரசுகள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றன. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய நிறமிகளை முற்றிலுமாக தடை செய்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாட்டில் அது மிக கடினமான வேலையாக இருக்கிறது. முன்பு கூட ஒரு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் துரித உணவில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது.
ஆனால், அந்த நிறுவனம் அதில் எந்த தடை செய்யப்பட்டப் பொருளும் இல்லை என்று கூறி மீண்டும் சந்தையில் தனது பொருளை விற்கத் துவங்கியது. அரசு மக்கள் உண்ணும் உணவில் இருக்கும் கலப்படத்தை முற்றிலுமாக தடுத்தால் மட்டுமே நலமான வாழ்க்கை மக்களால் வாழ இயலும்" என்றார்.
ஐஸ் கிரீம், பஞ்சு மிட்டாய் குழந்தைகளுக்கு பிடிப்பது ஏன்?
பிபிசியிடம் சுகாதாரத் துறை மதுரை இணை இயக்குநர் குமரகுருபரன் பேசிய போது, "உணவுப் பொருளை மக்களுக்கு பிடித்தவாறு காண்பிப்பதற்காக அதில் நிறமிகள் ( food additives), சேர்க்கப்படுகின்றன. இதன் வழியாக உணவு பார்க்கும் மக்களின் உணர்வைத் தூண்டி வாங்க வைக்கிறது.
குறிப்பாக, குழந்தைகள் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாய், ஐஸ் கிரீம் போன்றவற்றில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. பிங்க் கலர் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையது. எனவே, அதனை அரசு பரிந்துரை செய்த அளவைவிட அதிக அளவிலும், தடை செய்யப்பட்ட நிறமிகளைச் சேர்த்து குழந்தைகளை கவரும் விதமாக தயாரிக்கப்படுகிறது.
இந்த உணவுப் பொருட்கள் உண்பதற்கு மிக எளிதாக இருப்பதால் அதனை குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகின்றனர்", என்றார்.
"இது தவிர பெரியவர்கள் உண்ணக்கூடியக் கேசரி, காரா சேவு, முறுக்கு, சாலையோரம் விற்கப்படும் சிக்கன் போன்றவற்றிலும் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்னைகள், அல்சர் உச்சக்கட்டமாக, புற்றுநோய் வரை கூட வரலாம்.
இது மாதிரியான நிறமிகள் சேர்க்கப்படும் உணவை முடிந்த அளவுக்கு மக்கள் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. அதேபோல் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நிறமிகள் அற்ற பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீமை கவனத்துடன் வழங்குவது அவர்களின் உடலுக்கு பெரிய அளவிலான தீங்கினைக் கொடுக்காது", என்கிறார்.
தமிழ்நாட்டு உணவு பாதுகாப்புத் துறை அந்தந்த மாவட்டங்களில் இருக்கக் கூடிய பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு வேண்டுமென கேட்டுக் கொண்டு இருக்கிறது. அதன்படி அதிகாரிகள் மாவட்டம் தோறும் ஆய்வினை செய்து வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)