இலங்கையில் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மருத்துவமனைகளில் ராணுவம் என்ன செய்கிறது?

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், மருத்துவமனையின் நடவடிக்கைகளை தடையின்றி வழங்க 1000திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

சுகாதார சேவையுடன் இணைந்ததான சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்ட போதிலும், அதையும் பொருட்படுத்தாது இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏன் இந்த பணிப் புறக்கணிப்பு?

சுகாதார சேவையிலுள்ள 72 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப் புறக்கணிப்பை நேற்றைய தினம் (13.2.24) ஆரம்பித்தன.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட டெட் என அழைக்கப்படும் கொடுப்பனவுக்கு ஒத்ததான கொடுப்பனவொன்றை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.

இந்த விசேட கொடுப்பனவுக்கு ஒத்ததான கொடுப்பனவொன்றை வழங்குமாறு கடந்த காலங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்து வந்தன.

இந்த கோரிக்கை தொடர்பில் கடந்த 12ம் தேதி நிதி அமைச்சுடன், சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த பணிப் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

''நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். சுகாதார துறையின் உண்மையாக விடயங்களை மறைத்து, அந்த உண்மையான பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, தமது அரசியல் நிகழ்ச்சி திட்டலுக்கு அமைய தமது இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை பார்க்கின்றது." என அவர் கூறினார்.

நிர்க்கதி நிலையில் நோயாளர்கள்

சுகாதார ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சிப்பாய்கள் சுகாதார சேவைக்கு அமர்த்தியுள்ள போதிலும், முக்கிய சேவைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மாவனெல்ல பகுதியில் மரமொன்றின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கான முதலுதவிகளை ராணுவம் வழங்கிய போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என தெரிய வருகின்றது.

இவ்வாறு நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

''பணிப் புறக்கணிப்பு காரணமாக மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருக்கின்றோம்." என கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகைத் தந்த நோயாளர் ஒருவர் தெரிவித்தார்.

''நாங்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளோம். மயக்கமும் வந்தது. அதிகாலை 6.30 மணிக்கு வருகைத் தந்தேன்." என மற்றுமொரு நோயாளர் குறிப்பிடுகின்றார்.

''அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்து நன்றாக உணவு உட்கொள்கின்றார்கள். அப்பாவி பொதுமக்கள் இங்கு துன்பப்படுகின்றார்கள். இவர்கள் மீது தான் தாக்குதல் நடத்த வேண்டும். மருந்து இல்லை. மருந்து இல்லை என கூறுகின்றார்கள்." என மருத்துவமனைக்கு வருகைத் தந்த பெண் நோயாளர் ஒருவர் கூறுகின்றார்.

கடமைகளில் ஈடுபட்டுள்ள ராணுவம்

இலங்கை முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 1,100 ராணுவ சிப்பாய்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.

சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுத்து செல்லும் நோக்குடன் தாம் இந்த நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், கொழும்பு, கண்டி தேசிய மருத்துவமனைகள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 64 மருத்துவமனைகளில் ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கத்தின் பதில்

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவொன்றை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.

''3,000 ரூபாவே வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கூறுகின்றார். சேவைக்கு சமூகமளிக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார். எமக்கு 3,000 ரூபா பிரச்னை இல்லை. எம்மை சமமாக கருதாத பிரச்னையே எமக்குள்ளது. 35,000 ரூபாவிற்கும், 3,000 ரூபாவிற்குமான கொடுப்பனவு நியாயமான கொடுப்பனவு என்பதை எம்மால் நினைக்க முடியாது. எமக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்" என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் குறிப்பிடுகின்றார்.

இலங்கைவாழ் நோயாளர்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சுகாதார அமைச்சரின் பதில்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை விட்டு சுமார் 1,300 மருத்துவர்கள் வெளியேறியுள்ள நிலையிலேயே, அவர்களுக்கு 35,000 ரூபா கொடுப்பனவொன்று வழங்க முன்வந்ததாக சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

''நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுமார் 1,300 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெட் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமல்படுத்தப்பட்ட வரி திட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைக்கு மத்தியில், அரச ஊழியர்களின் சிரமத்தை கருத்திற் கொண்டு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிப் புறக்கணிப்பு காரணமாக இலங்கை மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்த நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து, மீண்டும் தொழிலுக்கு வருகைத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்." என சுகாதார அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தின் பதில்

சுகாதார ஊழியர்கள் விடுக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் இயலுமை அரசாங்கத்திடம் தற்போது கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

'' அனைத்து கோரிக்கைகளையும் வழங்க முடியும் என்றால், ஜனாதிபதி, நிதி அமைச்சர் மிக விரைவாக அதனை பெற்றுக்கொடுப்பார். இந்த கோரிக்கைகளை வழங்க வேண்டும் என்றால், மேலும் வாட் வரி அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான இயலுமை அரசாங்கத்திடம் கிடையாது. இ

ந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்காக முடியுமானளவு வேலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்ற நிலையில், தொடர்ச்சியாக பணிப் புறக்கணிப்புக்களை மேற்கொண்டால், அது தொடர்பில் பொதுமக்களே சிந்தித்து பார்க்கவேண்டும்." என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)