You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - இதுவரை நடந்தது என்ன?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். உடனிருந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உடல் அடக்கம் செய்ய வழக்கு
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அது அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டுசெல்லப் படுகிறது. அங்க்கிருந்து அவரது உடல், பெரம்பூரிலிருக்கும் பந்தர் கார்டன் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சென்னையிலுள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகதில் அடக்கம் செய்ய அக்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர். இதை எதிர்த்து அக்கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இவ்வழக்கை நீதிபதி அனிதா சம்பத் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) அவசர வழக்காக விசாரிக்கவிருக்கிறார். இவ்வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே ஆம்ஸ்ட்ராங்கின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது தெரியவரும்.
எட்டு பேர் கைது
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னையின் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், “தற்போது 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை குறித்த முழுமையான காரணம் தெரிய வரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆதரவாளர்கள்
வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் கொல்லப்பட்ட பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரி அவரது ஆதரவாளர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து அரை மணிநேரத்திற்கும் மேலாகத் தடைபட்டது. அவர்களுடன் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் இணங்காத நிலையில், அனைவரையும் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான காலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல்கூறாய்வு முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்தனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரணடைந்தவர்களை உண்மைக் குற்றவாளிகளாகக் கருதக்கூடாது. தீர விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
மொத்தம் ஆறு பேர் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்துள்ள காவல்துறை, தனிப்படை அமைத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க செம்பியம், பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?
காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாகக் குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்" என எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவ்ல் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைத்து விட்டு, மு.க.ஸ்டாலின் மாநில முதலமைச்சராகத் தொடரும் தார்மீகப் பொறுப்பு அவருக்கு இருக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்," என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு கட்சியின் மாநிலத் தலைவரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயாவதி மற்றும் திருமாவளவனின் கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவரான ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில்முறை வழக்கறிஞரான அவர், தமிழ்நாட்டின் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். தமிழ்நாடு அரசு குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களைச் சமூக விரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர் என்றும், சென்னை-பெரம்பூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தின் அருகில் பௌத்த விகாரம் ஒன்றை அவர் கட்டியுள்ளார் என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் இத்தகைய படுகொலைகள் நிகழ்த்தப்படுவது மிகுந்த வேதனைக்குரியது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
“தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர்.
இதன் மூலம் அவர்களது நன்மதிப்பையும் பெற்று வந்தார். இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கு. செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளித்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், "அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் கமல் ஹாசன் கூறியது என்ன?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள பதிவில், "ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு என்று கூறிய கமல் ஹாசன், "ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என்றும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இரங்கல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது தொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்றும், குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)