You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே போலீஸ் - என்ன நடந்தது?
மும்பை நகருக்கு அருகே ரயிலில் தனது மூத்த அதிகாரி உள்பட 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக் கொன்றார். அவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேத்தன் குமார் என்ற அந்தக் காவலர், தனது மூத்த ஆர்பிஎஃப் அதிகாரி மற்றும் மூன்று பயணிகளைக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும், இறந்த பயணிகளை அடையாளம் காண முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் உள்ள ரயில்வே பயணிகள், ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்கும் பணியில் ஆர்.பி.எஃப். ஈடுபடுகிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நகரை நோக்கிப் பயணித்த ரயிலில் காலை 5:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
ரயில்வே காவல்துறையின் அறிக்கைப்படி, சேத்தன் குமார் முதலில் ரயில்வே காவல்துறையின் துணை உதவி ஆய்வாளரான திகாரம் மீனா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதன் பிறகு மேலும் மூன்று பயணிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
மாநில தலைநகரான மும்பையில் இருந்து 96 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் நகரை ரயில் கடந்த சிறிது நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு அவசர காலங்களில் ரயில்களை நிறுத்தப் பயன்படும் சங்கிலியை இழுத்துவிட்டு தப்பிக்க முயன்றதாக மேற்கு ரயில்வேயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மும்பையின் புறநகர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
சண்டை காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததா?
சண்டை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை. இந்தச் சம்பவம் குறித்து அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மேற்கு ரயில்வே பொது மேலாளர் நீரஜ் வர்மாவும் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இது குறித்து அங்குள்ள அனைத்து மக்களிடமும் பேசி முழுமையான தகவல்களைப் பெற முயன்று வருகிறோம்,” என்றார்.
“துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு சேத்தன் குமாருக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த வாக்குவாதமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவரது உடல்நிலை சரியில்லை போல் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்