இலங்கையில் மலையகத் தமிழர் மக்கள் தொகை சரிவு - இலங்கைத் தமிழர், முஸ்லிம் நிலை என்ன?

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்க்காக

இலங்கை அரசால் அண்மையில் வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு அறிக்கை தரவுகளின்படி மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளனர்.

இலங்கையில் இறுதியாக 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின் பிரகாரம், 8,39,504 மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) இருந்தனர். ஆனால், 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின்படி, 6,00,360 மலையக தமிழர்களே (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) பதிவாகியுள்ளனர்.

சிங்களர், இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சனத் தொகையில் அதிகரிப்பு காணப்படுகின்ற போதிலும், மலையக தமிழர்களின் சனத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை நாட்டில் பேசுபொருளாகியுள்ளது.

2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் மலையக தமிழர்கள் ஏன் குறைவடைந்துள்ளனர் என்பது உள்ளிட்ட 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கை குறித்து பிபிசி தமிழ் இந்த கட்டுரையில் ஆராய்கின்றது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2024

2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையை, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.

இலங்கையில் 15வது தடவையாக இந்த குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.

15வது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2021-ஆம் ஆண்டு நடாத்தப்படவிருந்த நிலையில், கோவிட் - 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை 2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் இரண்டு கோடியே பதினேழு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து நூற்று எழுபது (2,17,63,170) பேர் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் அறிக்கையிடப்பட்ட மொத்த சனத் தொகையை விட, 2024-ஆம் ஆண்டு சனத் தொகை பதினான்கு லட்சத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று (1,403,731) பேர் அதிகமாக உள்ளனர்.

2001 முதல் 2012-ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சனத் தொகை சராசரியாக வருடத்திற்கு 0.7 வீதத்தினால் காணப்பட்டதுடன், அந்த வளர்ச்சியானது 2012 முதல் 2024ம் ஆண்டு வரை 0.5 வீதமாக பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கையின் சனத் தொகை குறைந்த வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளதாக குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

இலங்கையில் மாகாண ரீதியாக சனத் தொகையை கருத்திற் கொள்ளும் பட்சத்தில், முழு சனத் தொகையில் 28.1 வீதமானோர் மேல் மாகாணத்தில் வசிக்கின்றனர். 5.3 வீதத்தையும் விட குறைவானோர் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் வட மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகளவான சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் (2,433,685) பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிக சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் ( 2,374,461) உள்ளது.

இதேவேளை, சனத் தொகை குறைந்த மாவட்டங்கள் பட்டியலில் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434) மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

எனினும், குறைவான சனத் தொகையை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 2.23 என்ற வீதத்திலான அதியுயர் வளர்ச்சி வீதத்தினை காண முடிகின்றது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0.01 எனும் குறைந்த வளர்ச்சி வீதத்தினை கொண்ட மாவட்டமாக வவுனியா மாவட்டம் பதிவாகியுள்ளது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

1871 முதல் 2024 வரையான சனத் தொகை வளர்ச்சி

இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான சனத்தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சனத் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் 24,00,380 மக்கள் வசித்துள்ளனர்.

ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை சனத்தொகை மதிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டு வந்த பின்னணியில், அந்த செயற்பாடு 1931-ஆம் ஆண்டு வரை முறையாக நடாத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 1946ம் ஆண்டு சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டதுடன், அதன்பின்னர் 1953ம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 1963, 1971, 1981ம் ஆண்டுகளில் முறையாக நடாத்தப்பட்ட நிலையில், 1981-ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்த கணக்கெடுப்பு 20 வருடங்கள் கழித்து 2001-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது.

உள்நாட்டு போர், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சனத் தொகை மதிப்பு 20 வருடங்களுக்கு பிற்போட காரணமாக அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது.

2001-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2012ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் இந்த சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டு நடாத்தப்பட வேண்டிய சனத் தொகை மதிப்பானது, கோவிட் - 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் 2024ம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

சனத் தொகை வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைய காரணம் என்ன?

இலங்கையில் 153 வருட சனத் தொகை மதிப்பீட்டு வரலாற்றில் வருடாந்த வளர்ச்சி வீதம் பெரும்பாலும் படிப்படியாக குறைவடைந்து செல்வதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டில் இதுவரை நடாத்தப்பட்டுள்ள 15 முறையான சனத் தொகை மதிப்பீடுகளில் 1953-ஆம் ஆண்டு வருடாந்த சனத் தொகை வளர்ச்சி அதி உயர்ந்த வீதமாகிய 2.8 வீதமாக பதிவாகியுள்ளது.

அதன்பின்னராக சனத் தொகை மதிப்பு அறிக்கைகளின் பிரகாரம், சனத் தொகையின் வருடாந்த வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது.

2012-ஆம் ஆண்டு சனத் தொகை மதிப்பில் 0.7 வீதமாக காணப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதம், 2024ம் ஆண்டு 0.5 வீதமாக குறைந்துள்ளது.

இலங்கையில் சனத் தொகை வளர்ச்சி வீதம் குறைவடைவதற்காக பல்வேறு விடயங்களை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளது.

நீண்ட காலமாக காணப்படும் குறைந்த பிறப்பு வீதம், அதிகமான இறப்பு வீதம் மற்றும் நாட்டில் வெளிநோக்கிய இடப் பெயர்வு அதிகரித்தல் போன்ற காரணங்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன.

அத்துடன், உரிய காலத்தில் பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய் நிலைமைகள், போர் நிலைமைகள் போன்றவற்றை அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சராசரி வருடாந்த சனத் தொகை வளர்ச்சி வீதத்தில் நேர்மறையான மதிப்பினை காட்டுவதன் மூலம் இலங்கையின் சனத்தொகை குறைந்த வீதத்திலேனும் படிப்படியாக வளர்ச்சியடைந்து நிலைமையை காண முடிகின்றது என சன தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

சிங்களவர்களே நாட்டில் அதிகம்

இலங்கையில் 2024ம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கையின் பிரகாரம், சிங்கள மக்களே அதிகளவில் காணப்படுகின்றனர்.

  • இலங்கையில் சிங்கள மக்களின் தொகை 1,61,44,037ஆக இம்முறை பதிவாகியுள்ளது. 2012ம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம், நாட்டிலிருந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை 1,52,50,081 ஆகும். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 0.4ஆக பதிவாகியுள்ளது.
  • சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 2012ம் ஆண்டு 22,69,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள், 2024ம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம், 26,81,627ஆக பதிவாகியுள்ளனர். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 1.3ஆக பதிவாகியுள்ளது.
  • இலங்கை முஸ்லிம் மக்களின் தொகையானது, 2012ம் ஆண்டு 18,92,638ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 22,83,246ஆக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5ஆக காணப்படுகின்றது.
  • எனினும், மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) சனத் தொகை வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் -2.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) தொகையானது, 2012ம் ஆண்டு 8,39,504ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 6,00,360ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் காணாமல் போன 2,39,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்)

2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு 239,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பை காட்டி நிற்கின்ற நிலையில், அங்கு மலையக மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை காட்டுகின்றது.

மலையக தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளமைக்கான காரணம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்வதற்காக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவரை தொடர்புக் கொண்டு வினவியது.

''நாம் சனத் தொகை மதிப்பீட்டில் முக்கியமாக இனம், மதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே தரவுகளை சேகரிப்போம். ஆவணங்களை பரிசோதனை செய்து, இனம், மதம் குறித்த தகவல்களை நாங்கள் பெற்றுக்கொள்வதில்லை. பிரஜைகள் சொல்கின்ற விடயங்களையே தரவுகளாக பதிவு செய்யுமாறு நாங்கள் எங்களது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். அவர்கள் சொல்கின்ற விதத்திலேயே தரவுகளை பதிவு செய்யுமாறு கூறியிருந்தோம்.

கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட இனங்கள், இம்முறை தரவு சேகரிப்பின் போதும் சேர்த்துக்கொள்வோம். இலங்கை தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்ற விடயத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இன்னுமொரு பெயரை உள்வாங்குமாறு அமைச்சு மட்டம் உள்ளிட்ட உயர் மட்டங்களில் எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நாங்கள் ''மலையக தமிழர்கள்'' என்ற பெயரை உள்வாங்கினோம். உடனடியாகவே இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பதை புறக்கணிக்க முடியாது என்பதனால், இந்திய தமிழர்கள், மலையக தமிழர்கள் என்ற இரண்டு பெயரையும் பயன்படுத்தினோம். இனங்களை தீர்மானிப்பதற்கும், இனங்களை வேறுபடுத்துவதற்கும் எங்களுக்கு அதிகாரம் கிடையாது. இதன்படி, நபர்கள் சொல்கின்ற விடயங்களை நாங்கள் அவ்வாறே பதிவு செய்துக்கொண்டுள்ளோம்.'' என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

மலையக பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமைக்கான காரணம் என்னவென்பது குறித்தும் பிபிசி தமிழ், குறித்த அதிகாரியிடம் வினவியது.

''மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்கள் அதிகரித்துள்ளமைக்கான காரணம் தெரியாது. அது அவ்வாறே பதிவாகியுள்ளது.'' என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2023 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபமொன்று குறித்தும் இதன்போது, குறித்த அதிகாரியினால், எமக்கு தெளிவூட்டப்பட்டது.

''இனங்களை குறிப்பிடும் போது இந்திய தமிழர்கள் அல்லது இலங்கை தமிழர்கள் என குறிப்பிடப்படுவதற்கான நியதிகள் என குறிப்பிடப்பட்டு சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவுகளின் இனங்களை பதிவிடும் போது பதிவாளர் நாயகத்தினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதானது, ஒருவருடைய உரிமையாகும். அவர்களில் இந்திய தமிழர்களை இந்திய தமிழர்கள் என குறிப்பிடுவதுடன், அதற்கு முன்னரான இரண்டு பரம்பரையிலுள்ள பாட்டன், தந்தை ஆகியோர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயின், அவர்களை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த முடியும். இரண்டு பரம்பரையினர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயினும், அவர்கள் தமது விருப்பத்திற்கு அமைய, இலங்கை தமிழர்களாக தம்மை பதிவு செய்துக்கொள்ள முடியும். அத்துடன், நபரொருவர் தனது இனம் மற்றும் மதம் குறித்து அவர் சொல்கின்ற விடயங்களையே நாங்கள் பதிவு செய்துக்கொள்வோம்.'' எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகளின் கருத்தின் படி, "மலையகத்தில் வாழ்கின்ற மலையக தமிழர்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ள விதமே தரவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையகத்தில் வாழ்கின்ற தமிழர்களில் ஒரு தொகுதியினர் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். ஏனையோர் தம்மை மலையக தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். அதனாலேயே, மலையக தமிழர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ம் ஆண்டு குறைவடைந்துள்ளது." என்று தெரியவந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு