'தலைவன்' தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளைக் கைப்பற்றிவிடுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு.
ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா?
“கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் திறன் என்பது மிகவும் முக்கியமானது. தோனி மற்ற எல்லா கேப்டன்களையும் விட அதில் சிறந்தவர்” என்கிறார் இந்திய மகளிர் அணியில் ஆடி வரும் ஹேமலதா.
மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது டி20 உலகக் கோப்பையையும், 50 ஓவர் உலகக் கோப்பையைும் இந்திய அணி கைப்பற்றியது. கூடவே சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி தொடர்கள் எதிலும் கோப்பையைக் கைப்பற்றவில்லை.
2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, இப்போது மீண்டும் ஒரு டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது.
தோனிக்கு பிறகு நீண்ட கால கேப்டன்களாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருந்திருக்கிறார்கள். ஆயினும் கோப்பைகள் கிடைக்கவில்லை. தோனி போன்ற கேப்டன் இல்லாததே இந்திய அணி கோப்பைகளை வெல்ல முடியாமல் போவதற்குக் காரணம் என்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
இப்படியொரு சூழலில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்காக புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தோனி ஏற்கெனவே அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். மீண்டும் அவர் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் செயல்பட்டது போன்றே ஆலோசகர் என்கிற அளவிலான பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது.
உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை.
இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.
“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார்.

பட மூலாதாரம், Getty Images
முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.
“கிரிக்கெட்டில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி பழைய வகையில் இருந்து வெளியே வர மறுக்கிறது” என்று குறிப்பிடுகிறார் விளையாட்டு விமர்சகர் தினேஷ் அகிரா.
"திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் இந்திய அணி பார்க்கிறது.
இங்கிலாந்து போன்ற அணிகள் வீரர்களை வரிசையை மாற்றி களமிறக்குகின்றன. எதிர் தரப்பில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து ரன்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டார்கள் என்றால், அதற்கு ஏற்ற பேட்ஸ்மேனை கொண்டு வரிசையை மாற்றுகின்றன. ஆனால் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களையோ, மிடில் ஆர்டரையோ மாற்றத் தயங்குகிறது. ” என்கிறார் தினேஷ் அகிரா.

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் குறைபாடா?
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.
“நிறைய தருணங்களில் ரோஹித் சர்மா கோபப்படுவதை பார்க்க முடிந்தது. தொடர் முழுக்கவே அவர் அழுத்தத்துடன் இருப்பது போலவே தோன்றியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்த ரோஹித் சர்மாவை சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியவில்லை” என்கிறார் தினேஷ் அகிரா.
ஆயினும் கேப்டன்சியை காட்டிலும் ஒட்டுமொத்த அணுகுமுறையே உடனடியாக மாற்றப்பட வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஒருவர் மீது மட்டும் குறையைக் கூறி தப்பிக்க முடியாது” என்கிறார் அவர்.
அணித் தேர்வில் இருந்து சரி செய்யப்பட வேண்டியது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
தோனியின் தனித்தன்மை என்ன?
தோனி இந்திய அணிக்கு கேப்டனாக வந்தது ஒரு நெருக்கடியான காலகட்டம். தனிப்பட்ட முறையும் தோனிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சோதனைகள் ஏற்பட்டிருந்தன. 2007-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இலங்கையிடமும், வங்கதேசத்திடமும் எதிர்பாராத வகையில் தோல்விகளைச் சந்தித்து வெளியேறியிருந்தது. இந்த இரு போட்டிகளிலும் பூஜ்ஜியம் ரன்களை எடுத்த தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவரது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் சுமார் ஆறு மாத இடைவெளியில் இந்திய கிரிக்கெட் மீதும் தன்மீது இருந்த விமர்சனங்களை தோனியால் துடைத்தெறிய முடிந்தது.
2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட தோனி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கப் பிறகு இந்தியாவுக்கு ஓர் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் திறன் தோனியிடம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
“தோனி ஒரு கற்பனை வளம் மிக்க கேப்டன்” என்கிறார் தினேஷ் அகிரா. மிகக் குறைந்த அளவு திறமை கொண்ட வீரர்களை வைத்தே, பெரிய அளவு சாதிப்பதற்கு இந்தக் கற்பனை வளம் உதவுகிறது என்கிறார் அவர்.
“2015 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரைக்கும் இந்திய அணி சென்றதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்தத் தொடருக்கு முன்பு இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருந்தது. எதிர்பார்ப்பே இல்லாமல்தான் உலகக் கோப்பைக்குச் சென்றது. அத்தகைய அணியை அரையிறுதி வரைக்கும் அழைத்துச் சென்றார் தோனி. இருக்கும் வீரர்களைக் கொண்டு அணியை தோனியால் வெற்றிபெற வைக்க முடியும். அது ஒரு மேதையின் திறன். அந்தத் திறமை அடுத்த வந்த கேப்டன்களிடம் இல்லை” என்கிறார் தினேஷ்.
மைதானத்தில் பதற்றமில்லாமல் இருந்தபடியே சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடிய திறனைப் பற்றி ஹேமலதா குறிப்பிடுகிறார்.
“கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் இவரை பந்துவீச அழைக்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்த வீரரை களமிறக்க வேண்டும் என்பதையெல்லாம் தோனி அற்புதமாகத் தீர்மானிக்கக்கூடியவர்” என்கிறார் ஹேமலதா. இவர் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் ஆடி வருபவர்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு மீண்டும் தோனி வந்தால் என்னவாகும்?
இந்திய அணியின் தொடர் தோல்விகளால், வெற்றிகரமான கேப்டன் என்ற முறையில் தோனியின் பெயர் இப்போது விவாதத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் அணியை அப்படியே வைத்துக் கொண்டு தோனியை வரவழைத்து எதுவும் செய்ய முடியாது என்கிறார் தினேஷ் அகிரா.
இந்த அணியில் ஏற்கெனவே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார். பெரிய அளவு அடையாளம் இல்லாதவர்கள் பயிற்சியாளர்களாக இருக்கும் அணிகளுக்கு ஆலோசகர் போன்ற பொறுப்புகளில் புகழ்பெற்ற ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் ஏற்கெனவே புகழ்பெற்ற வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டால் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.
“அணியைக் கலைத்துப் போட்டு, இளைஞர்களைக் கொண்டு வந்துவிட்டு, தோனியை ஆலோசகராக நியமித்தால் சரியாக இருக்கும்” என்கிறார் தினேஷ் அகிரா.
தோனி இன்னும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்து அறிவித்திருக்கிறது.
"தலைவன் (எம்.எஸ். தோனி) தான் அணியை வழிநடத்தப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் சிறப்பானதைச் செய்வார், அணி சிறப்பாகச் செயல்படும்" என்று அறிவித்தார் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி விஸ்வநாதன்.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனி மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பது அதன் அடுத்தகட்ட அறிவிப்புகளில்தான் அறிய முடியும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












