கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விதான்ஷு குமார்
- பதவி, பிபிசி இந்திக்காக
பொதுவாக இதுபோன்ற படங்கள் அரிதாகவே காணப்படுகின்றன - கேமரா உங்கள் மீது ஃபோக்கஸ் செய்கிறது, நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள்.
டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியபோது ரோஹித் சர்மாவின் நிலை இதுதான்.
ரோஷித் சர்மா, ஒயிட் பால் கிரிக்கெட்டில் அழியாத முத்திரையை பதித்தவர். ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்.
ஹிட்மேன் என்று உலகம் போற்றும் அவர், ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனும் ஆவார். அவரது உணர்ச்சிப் பெருக்கு, சக வீரர்களை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் கோடிக்கணக்கான ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது.
ஆனால், டி20யில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமையேற்று ஒரு வருடம்தான் ஆகிறது.
இந்திய டி20யின் எதிர்காலம் 35 வயதான ரோஹித் சர்மாவின் கேப்டன்சியைத்தான் நம்பியிருக்கிறதா என்ற குரல்கள் உலகக் கோப்பையின் இந்தத் தோல்விக்குப் பிறகு எழுந்துள்ளன.
ரோஹித்தின் கேப்டன்சியில் அணியின் செயல்பாடு
2021 டி 20 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலே இந்தியா வெளியேறியது.அதன் பிறகு கேப்டன்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அணியின் புதிய கேப்டனானார்.
புதிய கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணி இருதரப்பு தொடர்களில் சிறப்பாக விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது.
இதில் சில தொடர்களில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும் முடிவு இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது.
இதன் போது நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளை 3-0 என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இந்தியா வெற்றிவாகை சூடியது.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சொந்த மண்ணில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
இந்த முடிவுகளைப் பார்க்கும்போது இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது, எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது என்பது போலவே தோன்றும்.
ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் மிகப்பெரிய ஐசிசி போட்டியில் இந்தியா வெற்றி பெறத் தவறிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
எங்கே தவறு நடந்தது?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு முதல் பெரிய சவால் ஏற்பட்டது.
குழு நிலையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, பின்னர் பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியடைந்து இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.
ரோஹித் ஷர்மாவின் அணிக்கு இரண்டாவது பெரிய சவாலாக இருந்தது T20 உலகக் கோப்பை 2022. இதிலும் இந்திய அணி ரசிகர்களை ஏமாற்றியது.
கடைசி சில பந்துகளில் பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான கடினமான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் இரண்டு பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் மோதிய போது பந்தயத்தின் முடிவு இந்தியாவுக்கு எதிராக அமைந்தது.
பேட்டிங் பவர்பிளேயை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாமல் போனதுதான், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம்
ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியை டாப் ஆர்டராகக்கொண்ட இந்திய அணியின் பவர்ப்ளே சராசரி ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட மட்டுமே அதிகமாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்திய அணியின் தோல்விக்கு, பயத்தால் வெலவெலத்த அதன் பேட்டிங் தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் உசேன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணி மிகவும் பழைய பாணியில் டி20 கிரிக்கெட்டை விளையாடி வருவதாகவும், அதன் காலம் கடந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை காப்பாற்றி பின்னர் அடித்து நொறுக்குவது இந்திய அணியின் உத்தியாக இருந்தது. ஆனால் இந்த உத்தி தோல்வியடைந்தது, இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பொறுப்பேற்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்பும் மாற்றங்கள் நடந்தன
எந்த ஒரு அணிக்கும் உலகக் கோப்பை ஒரு பெரிய இலக்காக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாட அணிகள் விரும்புகின்றன. அதற்கென நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பை தொடங்குகின்றன.
உலகக் கோப்பையில் ஒரு அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், அணியில் பெரிய மாற்றங்களும் நிகழ்கின்றன.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமே கேளுங்கள்! 1979 உலகக் கோப்பைக்குப் பிறகு 2007 ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது.
1979 இல் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 2007 இல் இந்தியா வங்கதேசம் மற்றும் இலங்கையிடம் தோற்றது. பெர்முடாஸுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அணி வெற்றி பெற்றது.
போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது.
அந்த ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளராக கிரெக் சேப்பல் இருந்தனர்.இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு ராகுல் டிராவிட்டும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
புதிய கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஆக்கப்பட்டார். அவர் இந்திய அணிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2011 இல் உலகக் கோப்பை நம் கைக்கு வந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும், அணியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக குரல் கொடுத்துள்ளனர். தோல்வி அடைந்த அணியின் கேப்டன்கள் இதற்கு முன்பும் நீக்கப்பட்டுள்ளனர், இப்போது அதைச்செய்ய என்ன தயக்கம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதாகிவிடும். அப்போதும் அவர் கேப்டனாக இருப்பாரா, அணியில் இடம் பெறுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
எனவே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால், அதை எவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வது நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
2021 இல் தோல்வியடைந்த அதே அணி தான் 2022 உலகக் கோப்பையில் விளையாடியது
கவனமாகப் பார்த்தால் இந்திய டி20 அணியில் பெரிய மாற்றங்களுக்கான நேரம் சென்ற ஆண்டே வந்துவிட்டது.
2021 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியைப் பார்த்தால், அப்போது அணியில் இடம்பெற்ற எல்லா வீரர்களும் 2022 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடியதை பார்க்கமுடிகிறது.
ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விளையாடாததால், அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
2021ல் மிக மோசமாக விளையாடிய அதே அணி அடுத்த ஆண்டு உலக சாம்பியன் ஆக முடியுமா? அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு வயதாகிவிட்டது. அணிக்கு ' டேடீஸ் ஆர்மி’ என்ற பட்டப்பெயரும் அளிக்கப்பட்டு வருகிறது.
அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் - அனைவரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்களில் பலரும் 34-35 வயதை நெருங்கியவர்கள்.
அணியின் சராசரி வயது அதிகரித்து வருவதும் உடனடி மாற்றத்திற்கான அறைகூவலாக உள்ளது.
எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றி
10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, அணியின் செயல்பாடு எல்லா இடங்களிலும் கண்டிக்கப்பட்டது, இதில் மைக்கேல் வார்ன் முன்னிலையில் உள்ளார்.
உலக கிரிக்கெட்டில் எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த வெற்றி பெற்ற அணிகளில் இந்திய அணியும் ஒன்று என்று வார்ன் கூறினார்.
இவ்வளவு திறமைகள் நிறைந்த அணி டி20 கிரிக்கெட்டில் விளையாடும் விதம் வியப்பளிப்பதாக அவர் கூறினார்.
இந்திய அணியிடம் வீரர்கள் இருக்கின்றனர்,ஆனால் விளையாடும் முறை சரியில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வார்ன், கூறினார். முதல் 5 ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதற்கு எப்படி வாய்ப்பு தருகிறீர்கள் என்று அவர் வினவியுள்ளார்.
வார்ன் இந்திய அணியின் உத்தியை கண்டித்தார். பவர்பிளேயில் அதிக ரன்களை எடுக்காதது பலவீனம். இது திறமையுடன் தொடர்புடையது அல்ல, மனநலம் சம்பந்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
கேப்டன் ரோஹித் ஷர்மா அணியின் உத்திகளை திட்டமிடுவதில் தவறு செய்து வருகிறார். அதன் காரணமாகவே அணி இதுபோன்ற தோல்விகளை சந்தித்து வருகிறது.
பவர்பிளேயில் பலவீனமான பேட்டிங்கைத் தவிர, லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படாத காரணமாகவும் அணி பெரிய விலையை கொடுக்கவேண்டி வந்தது. இந்த உலகக் கோப்பையில் அதில் ரஷீத் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் லெக் ஸ்பின் பந்துவீச்சில் அசத்தினர்.
அரையிறுதி போட்டியிலும்கூட லெக் ஸ்பின்னர் இல்லாத குறையை இந்திய அணி உணர்ந்தது. இந்தியாவிடம் சிறந்த லெக் ஸ்பின்னர் இருக்கிறார், அவர் களத்தில் இல்ல, டக்-அவுட்டில் இருக்கிறார் என்று போட்டியின் நேர் வர்ணனையின் போது ரவி சாஸ்திரி ஏமாற்றத்துடன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் மாற்றப்படவேண்டுமா அல்லது விளையாடும் விதமா?
கேப்டன் பதவி மற்றும் மாற்றம் குறித்த இந்த விவாதத்தில், இர்ஃபான் பதானும் ட்வீட் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மூன்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் வேகமாக விளையாட வேண்டும், அணியில் ஒரு லெக் ஸ்பின்னர் இருக்க வேண்டும், அதிவேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இர்ஃபானின் பரிந்துரைகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 2024 வரை இந்த அணி இதே கேப்டன்சியின் கீழ் தொடருமா என்பது சந்தேகமே.
இந்தியாவின் வெவ்வேறு அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெவ்வேறு கேப்டன்கள் இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
ஹார்திக் பாண்டியா தலைமையில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் மாற்றம் தொடங்கியுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.
புதிய கேப்டன் நியமனம் ஓரளவு உறுதியான ஒன்றுதான்.அது நடக்குமா நடக்காதா என்பது கேள்வி அல்ல.ஆனால் அது எப்போது நடக்கும் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












