டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்குக் காரணமான ‘பழைய உத்தி’; இதை மாற்ற முடியுமா?

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம் மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் பாணி எவ்வளவோ மாறிவிட்ட பிறகும் இந்தியா இன்னும் பழைய பாணியிலேயே ஆடிக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிக மோசமாகத் தோல்வி அடைந்ததற்கு இந்தப் பழைய பாணி ஆட்டமே காரணம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

“இந்தியா இன்னும் பாரம்பரிய முறையிலான கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. கடைசி 10 ஓவர்கள் எப்படியும் காப்பாற்றிவிடும் என்று நம்பினார்கள். ஆனால் உலகக் கோப்பையில் அது போதவில்லை ” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே குறிப்பிடுகிறார்.

இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களில் மிகவும் மெதுவாக ரன் குவிக்கும் வழக்கம்தான் இப்போது விமர்சிக்கப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“முதல் 15 ஓவரில் 15 முதல் 20 ரன்கள் குறைவாக இருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் கடைசியில் 15-20 ரன்களையும் விடக் குறைவாகவே ரன் பெற்றது போலத் தெரிந்தது. இந்த மைதானத்தில் குறைந்தது 180 முதல் 185 ரன்களை எடுத்திருக்கலாம்” என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி வழக்கமாக அடித்து ஆடத் தொடங்கும் 12-ஆவது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 13-ஆவது ஓவரிலும் மூன்று ரன்கள்தான். 13 மூன்று ஓவர்கள் முடிந்திருந்தபோது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தற்காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில்கூட இந்த ரன்கள் குறைவானதாகவே கருதப்படுகிறது. 

இந்தியா நம்பியது என்ன?

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடக்கம் முதலே மிக மெதுவாகத் தொடங்கி அதிரடியாக முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்தியாவின் பவர்பிளே ரன்கள் மற்ற அணிகளை விடக் குறைவாக இருந்த நிலையில், டெத் ஓவர்களாகக் கருதப்படும் கடைசி 4 ஓவர்களில் மற்ற அனைத்து அணிகளின் சராசரியைவிட இந்திய அணியின் சராசரி அதிகமாகவே இருந்தது. 

இந்த உத்தியைத்தான் இந்திய அணி இந்தத் தொடர் முழுவதும் கடைப்பிடித்து வந்தது. இது இந்திய அணிக்கு லீக் போட்டிகளில் பலன் அளித்ததையும் பார்க்க முடிந்தது. 

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இதேபோல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதல் 6 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 12 ஓவர்களில் 101 ரன்களை எட்டியிருந்தது. ஆனால் இன்னிங்ஸ் முடியும்போது 184 ரன்களைக் குவித்திருந்தது. 

உலகக் கோப்பை தொடரில் மற்ற எல்லா அணிகளும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக ரன் குவித்த நிலையில், இந்தியாவின் ரன்கள் மிகவும் மோசம். ஜிம்ப்பாவேக்கு எதிராக 31 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 31 ரன்களை, நெதர்லாந்துக்கு எதிராக 33 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக 37 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 38 ரன்கள். இவைதான் இந்தியா முதல் 6 ஓவர்களில் குவித்த ரன்கள். 

இப்படி தொடக்கத்தில் மெதுவாகவும் கடைசியில் அதிரடியாகவும் ஆடும் இந்த உத்தியை ராகுல் டிராவிட்டும் பாராட்டி இருக்கிறார். ஏன் போட்டிகளில் வெற்றிபெறும்போதெல்லாம் இது ஒரு புதிய கண்டுபிடிப்பு போல மிகவும் சிலாகித்துப் பேசப்பட்டது. ஆனால் அதுவே இன்று விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இதைச் சரியாகச் செயல்படுத்த முடியாமல் போயிருக்கிறது என்பதை ராகுல் டிராவிட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது மெச்சத்தக்க உத்தியா இல்லை தூக்கி எறிந்துவிட்டு புதிய பாணியைக் கொண்டுவருவதா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியைத் தள்ளியிருக்கிறது இங்கிலாந்து அணியுடனான படுதோல்வி.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

வேறு குழப்பங்கள் என்னென்ன?

இந்தியாவின் டி20 கிரிக்கெட் இப்போது 10 விக்கெட் தோல்விகளாலேயே விமர்சிக்கப்படுகிறது. ஒன்று ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி, இரண்டாவது இங்கிலாந்து எதிரான தோல்வி. இந்த இரு இன்னிங்ஸ்களிலும் இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதற்கு பந்துவீச்சில் ஏற்பட்ட குழப்பங்களே காரணம் என்ற விமர்சனங்களும் இப்போது எழுந்திருக்கின்றன. 

இந்தத் தொடரில் இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில் அஷ்வினா, சாஹலா என்ற கேள்வியிலேயே இந்திய அணி கடைசிவரை ஆடி முடித்திருக்கிறது. அதேபோல விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை களமிறக்குவதா, தினேஷ் கார்த்திக்கை இறக்குவதா என்ற குழப்பம் இருந்ததை அணித் தேர்விலேயே காண முடிந்தது.

இன்னும் ஒரு வாரத்திலேயே அடுத்த டி20 தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

காணொளிக் குறிப்பு, டி20 தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: