டி20 உலக கோப்பை: கண் கலங்கிய ரோஹித் ஷர்மா - ட்ரெண்டாகும் ‘கேப்டன்சி’

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது.

சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியா, இந்த முறை ரோஹித் தலைமையில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்தின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தோல்வியே கிடைத்தது.

ஆட்டத்தின் போக்கு இந்தியாவிடம் இருந்து மாறத் தொடங்கியதில் இருந்தே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பரபரப்புடன் காணப்பட்டார்.

முகமது ஷமி ஃபீல்டிங்கின்போது செய்த தவறால் ஆத்திரம் அடைந்தார். டிரிங்க்ஸ் பிரேக்கின் போது வீரர்களுடன் ஆலோசித்த சமயம், அவர் முகத்தில் கோபமும் பதற்றமும் தெரிந்தது.

ஆட்டம் முற்றிலும் இங்கிலாந்து வசம் மாறியபோது, மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.

போட்டி முடிந்ததும் இங்கிலாந்து வீரர்களுடன் கைகுலுக்கிய பிறகு, டக் அவுட்டில் அமர்ந்து கண் கலங்கினார். அவரது முகம் முற்றிலும் வாடிப்போய் இருந்தது. பயிற்சியாளர்கள் அவரை சமாதானப்படுத்திய காட்சிகள் வெளியாயின.

ஐபிஎல் தொடரை சுட்டிக்காட்டிய ரோஹித்

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லருடன் (வலது) கைகுலுக்கும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (இடது)

தோல்விக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, ‘இன்றைய ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்துடன் முடிந்திருக்கிறது. கடைசி நேரத்தில் நன்றாக பேட் செய்தோம், ஆனால் எங்கள் பந்துவீச்சு போதுமானதாக இல்லை. 16 ஓவர்களில் ஒரு அணி வந்து சேசிங் செய்து வெற்றிபெறும் அளவுக்கு ஆடுகளம் அவ்வளவு மோசமாகவும் இல்லை.

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாக் அவுட் சுற்றை பொருத்தவரை, அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.

வீரர்களுக்கு ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தனித்தனியாக நெருக்கடியை சமாளிக்க சொல்லித் தர வேண்டியதில்லை,” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் பந்துவீச்சை தொடங்கிய விதம் சிறப்பாக இல்லை. நாங்கள் கொஞ்சம் பதற்றமாக இருந்தோம். வீரர் புவி வீசிய முதல் ஓவர் ஸ்விங்கானது. ஆனால் சரியான இடத்தில் ஆகவில்லை.

நாங்கள் நெருக்கடி அளிக்க நினைத்தோம். இருப்பினும் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். பெரும்பாலான ரன்கள் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட ஸ்குயர் திசையில் இருந்தே கிடைத்தன,” என்கிறார்.

ரோஹித்துக்கு கேப்டன்சியில் பிரச்னையா?

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

2017ல் எம்.எஸ்.தோனி கேப்டன்சியில் இருந்து விலகியபோது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார்.

அந்த ஆண்டே விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேப்டனாக களம் கண்டார் ரோஹித்.

2021 டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி கேப்டன்சியில் இருந்து விலகியதும் ரோஹித் சர்மா அடுத்த கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனவரி 2022-ல் டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அனைத்து ஃபார்மேட்களிலும் கேப்டனாக அவர் செயல்படத் தொடங்கினார்.

டி20 போட்டிகளில் இதுவரை 51 போட்டிகளை ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ள இந்திய அணி 39 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

டி20 தொடர்களில் பெருவாரியான வெற்றிகளை இந்தியா குவித்திருந்த போதிலும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து தொடர் தோல்வியால் வெளியேறியது.

தற்போது டி20 உலக கோப்பை அரையிறுதியிலும் தோல்வியுடன் வெளியேறியுள்ளது.

“ஒரு அணிக்கு 7 கேப்டன் தேவையா?”

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி எப்போதெல்லாம் மோசமான தோல்விகளை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் கேப்டன்சியும் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில் தற்போது இணையத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பொறுப்பு குறித்து பல விமர்சனங்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பல பேர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா தவிர்த்து, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் அணியை வழிநடத்தியுள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ஒரு அணியை கட்டமைப்பது கேப்டனின் பொறுப்பு. நமக்கு கீழ் உள்ள அணியுடன் தொடர்ந்து ஒரு வருடமாவது பயணிக்க வேண்டும்.

இந்த ஆண்டு இந்தியாவுக்காக எத்தனை தொடரில் ரோஹித் சர்மா விளையாடியுள்ளார்? அணிக்கு ஒரு தலைவர்தான் இருக்க வேண்டும். 7 பேர் இருந்தால் அணியை வழிநடத்துவது கடினம் தான்” என முன்னணி கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல கேப்டன்சி பொறுப்பு எவ்வளவு கடினமானது என்பதை ரோஹித் தற்போது உணர்ந்திருப்பார் என்கிற வாசகத்துடன் விராட் கோலியின் ஷேஷ்டேகும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

காணொளிக் குறிப்பு, டி20 தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: