இங்கிலாந்தை அச்சுறுத்தும் அடிலெய்ட் மைதானமும் விராட் கோலியும் - ஏன் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
‘அடிலெய்டில் ஆடுவது எனக்கு மிகவும் விருப்பமானது’ என்கிறார் விராட் கோலி. அந்த மைதானத்துக்குள் நுழைந்ததும் வீட்டுக்கு வந்தது போல இருக்கும் என்கிறார் அவர். அதற்குக் காரணங்கள் உண்டு.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரராக இருக்கிறார் விராட் கோலி. ஆஸ்திரேலிய ஆடுகளம் என்றால் அவரது ரன் குவிப்பு வேகம் அதிகமாக இருக்கும் என்பது இதுவரையிலான போட்டிகளின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலியின் வேகம் இன்னும் கூட ஆவேசமாக இருக்கும். அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 5 சதங்களை அடித்துள்ளார். இந்த மைதானத்தில் 14 சர்வதேசப் போட்டிகளை அவர் ஆடியுள்ளார். அவற்றில் அவருடைய சராசரி 75.58. மொத்தமாக அவர் எடுத்த ரன்கள் 907.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அடிலெய்ட் மைதானம் அவருக்குச் சொந்த ஊர் ஆடுகளத்தைப் போன்றது என்றே கருதலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதங்களும் ஒரு அரைச்சதமும் அடித்துள்ளார். அதில் சராசரி 63.62. ஒரு நாள் போட்டிகளஇல் இரண்டு சதங்களை அடித்திருக்கிறார். டி20 போட்டிகளில் 154 ரன்களை எடுத்திருக்கும் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 155.55.
அடிலெய்ட் மைதானத்தின் சிறப்பு என்ன?
டி20 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் இதுவரை 6 போட்டிகள் ஆடப்பட்டிருக்கின்றன. முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 157 ரன்களை எடுக்கிறது. ஆனால் பெரும்பாலும் இரண்டாவது பேட் செய்யும் அணியே வெற்றி பெறுகிறது. அதனால் முதலில் பேட் செய்யும் அணி வெற்றி பெற வேண்டுமானால் 180-க்கும் அதிகமான ரன்களை எடுக்க வேண்டியிருக்கும்.
ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மைதானங்களைப் போன்றது இல்லை அடிலெய்டு. ஸ்கொயர் திசையில் எல்லைக் கோடு 65 மீட்டரில் இருக்கும். அதுவே ஸ்ட்ரெய்ட் திசையில் 80 மீட்டர் தொலைவில் இருக்கும். இந்தியா ஏற்கெனவே இந்த மைதானத்தில் ஆடியிருப்பது கூடுதலான சாதகம். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அந்த அணியை இந்தியா வீழ்த்தியது. ஆனால் இங்கிலாந்துக்கு அடிலெய்ட் மைதானத்தில் இது முதல் போட்டி.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பவர் பிளேயும் டெத் ஓவர்களும்
இந்தியாவின் தொடக்க ஜோடியான கேப்டன் ரோஹித் சர்மாவும், கேஎல் ராகுலும் இதுவரை சிறப்பான தொடக்கத்தை அளிக்காததால் பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பு குறைவாகவே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் கடைசி 4 ஓவர்களில் இந்தியா அதிரடியாகவே ஆடியிருக்கிறது. மற்ற எல்லா அணிகளையும் விட டெத் ஓவர்களில் இந்தியாவின் சராசரி அதிகம்.
இந்தியாவின் பலம் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கும் மற்ற எல்லா அணிகளையும்விட சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் 4 போட்டிகளில் வெற்றிபெற்ற ஒரே அணி இந்தியா மட்டும்தான்.
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்தியாவின் வலிமையாக உள்ளது. விராட் கோலியும் சூர்ய குமாரும் 5 ஆட்டங்களில் தலா 3 அரை சதங்கள் அடித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான கோலியின் 82 ரன்களும், ஜிம்பாப்வேக்கு எதிரான சூர்யகுமாரின் 61 ரன்களும் அவர்களுடைய தற்போதைய திறனை விளக்குவதற்குப் போதுமானவை.

பட மூலாதாரம், Getty Images
193-க்கும் அதிகமாக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்துவதை இங்கிலாந்துக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.
இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கும் ஜோஸ் பட்லர், “சூர்யகுமார் அனைத்து வகையான ஷாட்களையும் ஆடுகிறார். ஆனால் எல்லா வீரர்களும் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பைத் தருவார்கள். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வோம்” என்றார்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி தருவதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார்கள்.
இந்தியாவின் பலவீனம் என்ன?
இந்தியாவுக்கு முக்கியமான பலவீனமாக இருப்பது இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களின் நீடித்து ஆடாத ஃபார்ம்தான். கேப்டன் ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் இணையாக சொற்பமான ரன்களையே எடுத்திருக்கின்றனர்.
ஜிம்பாப்வே போட்டிக்கு முன்பாக அந்த இணையின் சராசரி 13 ரன்களாகவே இருந்தது. 50 ரன்களைக் கடந்தது ஜிம்பாப்வே போட்டியில்தான். இது இந்திய அணிக்கு முக்கியமான சிக்கலாக இருக்கிறது. இவர்களில் ரோஹித் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் கவலை தரக்கூடியதாக இருக்கிறது.
இங்கிலாந்து அணி எப்படி?
இங்கிலாந்து அணியின் முக்கிய ஆட்டக்காரரான டேவிட் மலான் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஆயினும் இந்தத் தொடரில் அவர் சிறப்பாக ஆடவில்லை. இதேபோல வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டும் காயம்பட்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












