ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுரேஷ் மேனன்
- பதவி, விளையாட்டு செய்தியாளர்
மிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி.
சேத்தன் சர்மா, அஜித் அகர்கர் முதல் இர்பான் பதான், புவனேஷ்வர் குமார் வரை பலர் இந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் - உதாரணமாக, அகர்கர், லார்ட்ஸில் சதம் அடித்தார், பின்னர் அடிலெய்டில் ஒரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்லத் துனை செய்தார்.
ஆனால் அவர்கள் பந்துவீச்சிற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களில் யாரும் பேட்டிங்கில் மட்டும் தடம் பதிக்கத் தவறிவந்தனர்.
கபில் ஒரு இயல்பாகவே பந்து வீச்சைப் போல, பேட்டிங்கிலும் எதிரணியினருக்கு அச்சத்தை ஊட்டினார். அவர் தனக்கே உரித்தான தனி பாணியில் மிக நேர்த்தியாகத் தனது சாதனைகளைப் புரிந்து வந்தார். அதனால் அவர், தனித்துவம் வாய்ந்தவராக இருந்தார். 16 ஆண்டுகால வாழ்க்கையில், காயம் காரணமாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூடத் தவறவிட்டதில்லை.
கபிலின் இடத்தை நிரப்ப, தேர்வான ஹார்திக் பாண்ட்யா - இலங்கையின் காலேயில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததுடன் அதே தொடரில் ஒரு சதமும் (ஏழு சிக்ஸர்களுடன்) அடித்தார்.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த அடுத்த டெஸ்டில், அவர் 93 ரன்கள் எடுத்தார். நாட்டிங்ஹாம் டெஸ்டில் 28 ரன்கள் கொடுத்து, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தானும் ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்தபோது, உண்மையிலேயே அவர் கபிலின் இடத்தை நிரப்பினார்.
கடந்த ஓராண்டில், 29 வயதான பாண்டியா, டி20 கிரிக்கெட்டில், சுமார் 150 ரன்கள் என்ற சராசரியுடன் இந்தியாவின் தேர்ந்த ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். மேலும் இறுக்கமான சூழ்நிலைகளில் மகேந்திர சிங் தோனி போன்றே, அமைதியை வெளிப்படுத்தினார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அவரது 113 ரன் பார்ட்னர்ஷிப், உலக டி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடிப்பதற்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இது டி-20 ஆட்டங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
நவம்பரின் பிற்பகுதியில் அவர் இந்திய அணி, டி-20 தொடரில் விளையாட நியூசிலாந்திற்கு ஹார்திக் பாண்ட்யா தலைமையில் செல்கிறது. அவரது திறமைகள் மற்றும் உடல் நிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு ஆட்ட வகை இது. பாண்ட்யா, 140 கிலோ மீட்டர் (87 mph) என்ற வேகத்தில் நான்கு ஓவர்கள் பந்து வீசுவது, அது வரை இந்தியாவிற்கு இல்லாத ஒரு ஸ்திரத் தன்மையைக் கொடுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த ஆசியக் கோப்பையில், பந்துவீசும்போது, முதுகு பிடித்துக்கொண்டதால், வெளியேறிய பாண்ட்யா, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்றே பலர் நினைத்தனர். இந்தியா இந்தக் குறுகிய கிரிக்கெட் வடிவத்திற்கு ஒரு ஃபினிஷரை வளர்த்தெடுத்துள்ளது. இப்போது மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை உற்று நோக்கி வருகிறது.
அதே போல பாண்ட்யாவும், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் பந்துவீசவே இல்லை.

பட மூலாதாரம், Getty Images
பாண்ட்யா காயமடைந்தது குறித்து, முன்னாள் தேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "இது தீவிரமானது என்று எங்களுக்குத் தெரியும். மருத்துவ அறையில் அவரால் நகரக் கூட முடியவில்லை, அவர் தனது தலையை மட்டுமே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்து வந்தார். அவர் மிகவும் அதிக வலியால் துன்பப்பட்டார். அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப மிகவும் உறுதி வேண்டும்" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
இந்த ஆண்டு ஆகஸ்டில், பாண்டியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பையில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஒரு சிக்சருடன் இந்தியாவிற்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் காயமடைந்து வெளியேறிய அதே மைதானத்தில், அதே அணிக்கு எதிராக, அதே போட்டியில் பாண்ட்யா இதைச் சாதித்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியுள்ள, இடது கைச் சுழற்பந்து வீச்சாளரான இவரது மூத்த சகோதரர் க்ருனால் பாண்ட்யாவுடன் இணைத்துப் பாண்ட்யா சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இந்த இணை, சிறந்த கிரிக்கெட் வசதிகள் வேண்டி, இளம் வயதிலேயே சூரத்தில் இருந்து குஜராத் மாநிலத்தின் பரோடாவுக்கு இடம் பெயர்ந்தனர்.
இது அவர்களின் தந்தை எடுத்த முன்னெடுப்பு. இது குறித்து இந்த வறிய குடும்பத்தின் புதல்வர்கள் எப்போதும் நன்றியுடன் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரேவின் அகாடமியில் இச்சகோதரர்கள் பயிற்சி பெற்றனர். 2015 ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜான் ரைட், ஹார்திக் பாண்ட்யாவைத் தேர்வு செய்தார்.
அவரது ஆரம்ப விலை $16,000 (£13,841). மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் $1.7 மில்லியனுக்குத் தக்கவைக்கப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் ஐபிஎல் அறிமுக ஆட்டக்காரர்களான குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமை வகித்த அனுபவம் இவரது திறமையைப் பறைசாற்றியதால், இப்போது தேசிய அணிக்குத் தலைமை வகிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
சூழ்நிலைகள் பாண்ட்யாவை இந்த நவீனகால கிரிக்கெட் வீரராக - T20 ஸ்பெஷலிஸ்ட் ஆக நிர்ப்பந்திக்கலாம். சிவப்பு பந்து கிரிக்கெட்டின் போக்கும் அதற்குத் தேவையான உடல் வலிமையும் இதிலிருந்து மாறுபட்டது. அவர் அறிமுகமானதிலிருந்து இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டிகளில் ஆறில் ஒரு பங்கு ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளார். ஆனால் டி20 சர்வதேச போட்டிகளில் கிட்டத்தட்ட 60% ஆடியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மெலிந்த உடல் வாகு கொண்ட இவர், பந்தை அடிக்கும் வேகம் வியப்புக்குரியது. அதே போல், பந்து வீசும் வேகமும் பேட்ஸ்மேனை வியக்கச் செய்யும். ஒரு ஃபீல்டராகவும் அவர் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியா அவரை ஒரு வகை கிரிக்கெட்டிற்கு மட்டுமே பொருத்திப் பார்ப்பது பரிதாபகரமானது. அவர் ஆட்டத்திற்கு ஒரு தனி விறுவிறுப்பைக் கொண்டு வந்து, அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்கிறார்.
தன்னை இரண்டாவது கபில்தேவாக மட்டுமல்ல, முதல் ஹார்திக் பாண்ட்யாவாகவும் உருவாக்கிக்கொண்டுள்ளார். அது மிகச் சிறந்த விஷயம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












