ஹர்திக் பாண்ட்யா மகுடம் சூடும் நேரம் வந்துவிட்டதா?

ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம், Getty Images

ஓர் உலகக் கோப்பை போட்டியில் தோற்றுப்போன இந்திய அணி இதோ நியூஸிலாந்துடன் இன்னொரு டி20 தொடருக்கு தயாராகிவிட்டது. ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியைத் தலைமையேற்று நடத்துகிறார். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் இல்லாத அணி இது.

ரோஹித் சர்மா ஓய்வில் இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அனுப்பப்பட்டிருக்கிறார் என்று தோன்றினாலும், இது புதிய தொடக்கத்துக்கான அறிகுறியாகவே பலராலும் கவனிக்கப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு தருணத்தில்தான் இந்தியக் கிரிக்கெட் கலைத்துப் போடப்பட்டு, புத்தெழுச்சி பெற்றது. அப்போது அது ஓர் அதிரடியான முடிவாகப் பட்டாலும் அடுத்த ஐந்தாறு ஆண்டுகள் உலக அரங்கில் இந்திய அணி ஆட்சி செய்வதற்கு அப்படியொரு முடிவே காரணமாக அமைந்தது.

அது 2007-ஆம் ஆண்டு. மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி மிக மோசமாகத் தோற்று வெளியேறிய பிறகு சில மாதங்களில் தொடங்கிய முதலாவது டி20 உலகக் கோப்பை தொடருக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். நீண்ட காலத்துக்குப் பிறகு ஓர் உலகக் கோப்பையை இந்தியாவுக்காகப் பெற்றுத் தந்தார். அது இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகிவிட்டது.

இப்போது ஹர்த்திக் பாண்ட்யாவுக்கான நேரம். உலகக் கோப்பை தொடரில் தோற்றுப் போனதால் ரோஹித் சர்மா மீது தனிப்பட்ட முறையிலும் கேப்டன் என்கிற வகையிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய கேப்டன் தேவை என்ற விவாதங்களையும் காண முடிகிறது. அந்த விவாதத்தில் இயற்கையாகவே முன்நிற்கும் பெயர் ஹர்திக் பாண்ட்யா.

“ஹர்திக் பாண்ட்யா ஒரு அற்புதமான கேப்டன்” என்கிறார் நியூஸிலாந்து தொடருக்காக இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விவிஎஸ் லக்ஷ்மண். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையைப் பெற்றுத் தந்தது பற்றி விவிஎஸ் லக்ஷ்மண் புகழ்ந்திருக்கிறார்.

உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்துடன் தோற்று வெளியேறியபோதே அடுத்த டி20 கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டார். அவரும் ஐபிஎல் தொடரில் பாண்ட்யாவின் சாதனையை மெச்சினார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் ஹர்திக் பாண்ட்யாவின் பெயரை அழுத்தமாகக் கூறியிருக்கிறார். 

“‘டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பதில் எந்த பாதகமும் இல்லை. ஏனென்றால் கிரிக்கெட்டின் அளவு அப்படி. ஒரே வீரரால் எல்லா வகையான கிரிக்கெட்டிலும் ஆடுவது எளிதல்ல. ரோஹித் சர்மா ஏற்கெனவே ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாக இருப்பதால் டி20 அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பதில் தவறில்லை. அந்தப் பெயர் பாண்ட்யா” என்று பேட்டி ஒன்றில் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

பாண்ட்யா என்ன செய்திருக்கிறார்?

ஹர்திக் பாண்ட்யாவை சிறந்த ஆல் ரவுண்டர்களுள் ஒருவராக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். சிலர் இன்னொருபடி மேலே போய் அவர்தான் ‘அடுத்த கபில்தேவ்’ என்கிறார்கள். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைச் சதமும், முதல் டெஸ்ட் தொடரில் சதமும் அடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் ஹர்திக்.

லட்சுமண்

பட மூலாதாரம், Getty Images

அவரது திறமைக்கு சமீபத்திய உதாரணம், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி. ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அவரது 113 ரன் பார்ட்னர்ஷிப், பாகிஸ்தானை தோற்கடிப்பதற்கு மிகவும் முக்கியமாக இருந்தது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த ஆசியக் கோப்பையில், பந்துவீசும்போது, முதுகு பிடித்துக்கொண்டதால், பாண்ட்யா வெளியேறினார். அத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் இந்த ஆண்டு நடந்த முடிந்த ஆசியக் கோப்பையில் அதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கடைசி ஓவரில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். 

ஐபிஎல் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமையேற்று கோப்பையை வென்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல்.

டி20 உலகக் கோப்பையில் தோல்வியைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்திருந்த ஹர்திக், "யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் நிரூபிக்க வேண்டிய சூழல் இருப்பதாகவே தெரிகிறது.

இந்திய அணியின் என்ன மாற்றம் தேவை?

இந்திய அணி டி20 கிரிக்கெட்டை அணுகும் முறையிலேயே மாற்ரம் தேவை என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ‘பழைய’ உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.

“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே அப்போதே சாடினார். 

ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.

“கிரிக்கெட்டில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி பழைய வகையில் இருந்து வெளியே வர மறுக்கிறது” என்று குறிப்பிடுகிறார் விளையாட்டு விமர்சகர் தினேஷ் அகிரா.

"திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் இந்திய அணி பார்க்கிறது.” என்று அவர் குறிப்பிட்டார். 

இந்திய அணிக்கு புத்துணர்வு ஊட்டுவது என்பது போதுமானதல்ல, கலைத்துப் போட்டு முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று கருத்தை பலரும் முன்வைக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் அதற்கு களமாக இருக்கக்கூடும்.

இந்தியா - நியூஸிலாந்து போட்டி எப்படி இருக்கும்?

இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதும் முதலாவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது. இது ஓர் இரவு நேர ஆட்டம்

ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். 

காஷ்மீர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக் இந்தத் தொடரில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்த்திருக்கிறது. எனினும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமமான பலம் கொண்ட 11 பேரைக் களமிறக்குவது சவாலானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

நியூஸிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் தவிர உலகக் கோப்பையில் பங்கேற்ற மற்ற வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

டி20 உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறிய அணிகள் என்பதால் இரு அணிகளும் புத்துணர்வு பெறுவதற்கு இந்தத் தொடரில் வெற்றியை பெற முயற்சிக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: