சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ப்ராவோ – நிர்வாகம் சொன்ன காரணம் இதுதான்

பட மூலாதாரம், Manjunath Kiran/AFP/GettyImages
இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறக்கூடிய ஐபிஎல் ஏலத்தையொட்டி தங்களின் அணியில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே அறிவித்துள்ளது.
அதன்படி டுவைன் ப்ராவோ, ஆடம் மில்னே, ராபின் உத்தப்பா, கிறிஸ் ஜோர்டான், நாராயண் ஜகதீசன், ஹரி நிஷாந்த், கே.எம். ஆசிஃப் மற்றும் பகத் வர்வா ஆகிய வீரர்களை விடுவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை தக்க வைப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தோனி, ஜடேஜா, டெவான் கான்வே, மொயின் அலி, ருத்துராஜ் கெய்க்வார்ட், ஷிவம் துபே, ராயுடு, ட்வைன் ப்ரீடோரியஸ், மகீஷ் தீக்ஷனா, பிரஷாந்த் சொலன்கி, தீபக் சஹர், முகேஷ் செளத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹன்கர்கேகர், மெஷேல் சாண்டநர், மதீஷா பதிரானா, சுப்ரன்ஷா செனாபதி ஆகியோர் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ராபின் உத்தப்பா அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் கடந்த செப்டம்பர் மாதம் 14 தேதி ஓய்வுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுவிக்கப்பட்ட வீரர்களில் நாராயண் ஜகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள். நாராயண் ஜகதீசன் இதுவரை ஏழு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். ஹரி நிஷாந்த் இதுவரை இரண்டு சீசன்களில் விளையாடியுள்ளார்.
சென்னையை போலவே பிற அணிகளும் தங்களின் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட ப்ராவோ
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15க்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
சென்னை அணியின் நட்சத்திர வீரர் டுவைன் ப்ராவோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் இருக்கும் ப்ரோவோ இதுவரை 116 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்ரவுண்டரான ப்ரோவோ, 137.15 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1004 ரன்களைக் குவித்ததோடு, 140 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணியில் ப்ரோவோ இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2013 மற்றும் 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக நீல தொப்பியை வென்றுள்ளார். 2013ஆம் ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடிய ப்ராவோ 32 விக்கெட்டுகளும், 2015ஆம் ஆண்டில் 17 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஆல்ரவுண்டராக பல முக்கிய போட்டிகளில் ஜொலித்த ப்ராவோ, சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ஓய்வு பெற்ற ராபின் உத்தப்பா
சென்னை அணியின் மற்றொரு பிரபல வீரரான ராபின் உத்தபா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவரை விடுவிப்பதாக சிஎஸ்கே தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் சென்னை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தப்பா, 16 போட்டிகளில் விளையாடி 345 ரன்களைக் குவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு கோப்பை வென்ற சென்னை அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தக்க வைக்கப்பட்ட ஜடேஜா
சென்னை அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா அணியில் தக்க வைக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. கடந்த சீசனில் அணி நிர்வாகத்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு அவர் அணியில் நீடிக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் மதிப்பில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவின் இன்றைய அறிவிப்புக்கு பிறகு டிவிட்டரில் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து“அனைத்தும் நன்றாக உள்ளது.” என பதிவிட்டுள்ளார் ஜடேஜா. மேலும் ஹாஷ்டேக்குடன் ரீஸ்டார்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், AFP
என்ன சொல்கிறது சிஎஸ்கே?
வீரர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே சிஇஓ கே. எஸ். விஷ்வநாதன், கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மால் சென்னையில் விளையாட முடியவில்லை. ஆனால் தற்போதைய சீசனில் நம்மால் சென்னையில் விளையாட முடியும். அதை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதேபோல சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












