கேரள பழங்குடி இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 'நீதி'

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலம் அட்டப்பாடியில் மது என்கிற மனநலம் பாதித்த பழங்குடி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருந்தது. அந்த கொலை வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் மன்னார்க்காட்டில் முக்காளி மற்றும் சிண்டக்கி என்கிற மலைவாழ் கிராமங்கள் உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி மற்றும் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கிராமங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளன.
அதே கிராமத்தில் மது என்கிற 30 வயதான இளைஞர் வசித்து வந்துள்ளார். முதுகா என்கிற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மது மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தையை இழந்த மது தாய் மல்லி மற்றும் சகோதரி சரஸ்வதியுடன் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மது அட்டப்பாடி பகுதிக்கு உட்பட்ட அகலி, முக்காளி போன்ற இடங்களில் சுற்றித்திரிவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அப்போது சில நேரங்களில் கடைகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் உணவுப் பொருட்களை எடுத்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.
இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் மது தான் தொடர் திருட்டுக்கு காரணம் என தீர்மானித்து அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 22.02.2018 அன்று அதே கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் வண்டிக்கடவு தேயிலை தோட்டம் அருகே உள்ள அஜ்முடி வனப்பகுதியில் வைத்து மதுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் மது உணவுப் பொருட்களைத் திருடினார் எனக் காவல்துறையை அழைத்து ஒப்படைத்துள்ளனர். மதுவின் உடலில் கடுமையான காயங்கள் இருந்துள்ளன. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே மது சுய நினைவு இழந்து விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது
மனநலம் குன்றிய பழங்குடி இளைஞர் மதுவின் உயிரிழப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மதுவின் உடற்கூறாய்வு அறிக்கையில் 15 இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மதுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் மீதும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலை வழக்கு மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு 3.000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும் இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் விசாரணை தொடங்காமலே இருந்தது. 31.05.2018 இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
நான்கு வருடங்கள் தாமதமாக தொடங்கிய விசாரணை
மன்னார்காடு சிறப்பு எஸ்.சி/எஸ்/டி நீதிமன்றத்தில் மது கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் இந்த வழக்கில் விசாரணை நடைபெறவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. நிரந்தர நீதிபதி இல்லை, அரசு வழக்கறிஞர் இல்லை எனப் பல தடைகளைக் கடந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 28.04.2022 அன்று வழக்கின் விசாரணை தொடங்கியது.
ரத்து செய்யப்பட்ட பிணை
இந்த வழக்கில் பிணையில் வெளிவந்தவர்கள் சாட்சியங்களை மிரட்ட முற்பட்டார்கள் என்பதற்காக அவர்களின் பிணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவான சிலரை காவல்துறையினர் தேடி கைது செய்தனர். தொடர் விசாரணை 10.01.2023 அன்று நிறைவுற்றது.
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

கொலை செய்யப்பட்ட மது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரும் பழங்குடி சமூகத்தைச் சேராதவர்கள். இந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 பேர் மதுவின் ஆடைகளை கலைந்து கட்டி வைத்து மரக் கட்டைகள் கொண்டு அவரை முகத்திலும் முதுகுப் பகுதியிலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
8வது குற்றவாளியான உபைத், மதுவை தாக்குவதை வீடியோ எடுத்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சிகளாக இருந்துள்ளன. மதுவை கடுமையாக தாக்கிய பிறகு அவரின் கைகளை கட்டி அரிசி மற்றும் பிற பொருட்கள் கொண்ட பை ஒன்றை மதுவின் முதுகில் வைத்துள்ளனர்.
அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு தாக்கப்பட்ட மதுவை அரை நிர்வாண கோலத்தில் கைகளை கட்டி நடக்க வைத்தே அழைத்து வந்துள்ளனர். அப்போது மதுவை தாக்கிய காட்சிகளைப் பதிவு செய்து அவரை அவமானப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
காவல் துறையிடம் ஒப்படைக்கும் முன்பாக ஹுசைன் என்பவர் மதுவின் நெஞ்சில் கடுமையாக மிதித்துள்ளார். இதனால் அமர வைக்கப்பட்டிருந்த மதுவின் தலை அருகில் இருந்த சுவற்றில் மோதியுள்ளது. ஹுசைன் தான் இந்த வழக்கில் முதலாவது குற்றம்சாட்டப்பட்டவர் அங்கிருந்து காவல்துறையினர் அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே மது உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவங்கள் அனைத்துமே 22.02.2018 அன்று நிகழ்ந்துள்ளது.
பிறழ் சாட்சியங்கள்
இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் சாட்சியம் அளித்த வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பின்னர் பிறழ் சாட்சியமாக மாறினர். மொத்தமாக சாட்சியம் அளித்த 122 பேரில் 10 பேர் பிறழ் சாட்சியங்களாக மாறினர் தங்களுடைய வாக்குமூலத்தை திரும்ப பெற்றனர். காவல்துறை அழுத்தத்தினால் தான் முதலில் சாட்சியம் அளித்ததாக சாக்கோ என்பவர் தெரிவித்திருந்தனர்.
தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் எனவும் இருவர் குற்றமற்றவர்கள் எனவும் மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. முழுமையான தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனீஷ், அப்துல் கரீம் என்பவர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுவித்துள்ளது. முனீர் என்பவர் மதுவை தாக்கியதை வீடியோ மட்டும் எடுத்தார் என்று கூறி அவருக்கு மூன்று மாதம் மட்டும் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
ஹுசைன், மரக்கர், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜிப், ஜெய்ஜுமோன், சஜீவ், சதீஷ், ஹரீஷ், பிஜு உள்ளிட்ட 13 பேருக்கும் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் 75% மதுவின் குடும்பத்திற்கும் அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் இழப்பீடாக வழங்க வேண்டு என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் முதல் கும்பல் படுகொலை

மேலும் நீதிமன்றம் மதுவின் கொலை வழக்கை ’கேரளாவின் முதல் கும்பல் படுகொலை’ (First mob lynching case in Gods Own Country) என தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் பிறழ் சாட்சியமாக மாறிய பத்து பேர் மீது 193 ஐபிசி பிரிவின் படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுவின் நெருங்கிய உறவினர் உட்பட பல சாட்சியங்கள் சிசிடிவி காட்சிகள் இருந்தும் மாற்றிப் பேசியதை அருவருப்பான விஷயம் எனக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம் முதன்மை சாட்சியங்கள் இவ்வாறு மாறுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஊடகங்களுக்குப் பாராட்டு
மேலும் தீர்ப்பில், “இந்த வழக்கு பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியிட்ட ஊடகங்களையும் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. இந்த வழக்கிற்கு ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை என்றால் முடிவு இவ்வாறாக இருந்திருக்காது. ஊடகங்கள் கொடுத்த வெளிச்சம் தான் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தது. மதுவுக்கு நீதியைப் பெற்றுத்தருவதில் ஊடகங்களின் பங்கை இந்த நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












