ஜாதிவாரி கணக்கெடுப்பு: சமூக நீதி கூட்டணி வலியுறுத்துவதும், பாஜக எதிர்ப்பதும் ஏன்? இதன் வரலாறு என்ன?

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சமீபத்தில் நடந்து முடிந்த அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் இணைய வழி மாநாட்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது பின்தங்கிய பிரிவினருக்கு பலனளிக்குமா அல்லது புதிய பிரச்சனைகளை உருவாக்குமா?

அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு திங்கட்கிழமையன்று இணைய வழியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தினர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான டெரிக் ஓ ப்ரையன், மதம் மாறியவர்களையும் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அவரைத் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆகியோரும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென எப்போது பேசப்பட்டாலும், அது புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துபவர்கள், பட்டியலின மக்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் எந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்றபடி இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்கிறார்கள். இந்தப் பிரச்சனையைப் புரிந்துகொள்ள இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், TWITTER/PWILSONDMK

மக்கள் தொகை கணக்கெடுப்பு

கி.பி. 1,800ல் இங்கிலாந்தில் முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், அதன் குடியேற்ற நாடுகளில் அதுபோன்ற கணக்கெடுப்புகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. கி.பி. 1824வாக்கில் அலகாபாத் நகரில் முதன் முதலில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது.

பிறகு, வாரணாசியில் 1827-28ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. ஆனால், மிகச் சரியான வகையில் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பு, 1830ல் டாக்காவில் ஹென்ரி வால்டரால் நடத்தப்பட்டது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாலினம், வயது, வீடுகளில் உள்ள வசதி ஆகியவை கணக்கெடுக்கப்பட்டன.

அடுத்ததாக சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் 1836-37ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, விவரங்களை அனுப்ப மாகாண அரசுகளுக்கு 1849ல் உத்தரவிடப்பட்டது.

அதன்படி அன்றைய சென்னை மாகாணத்தில் 1851-52, 56-57, 61-62, 66-67 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1856ஆம் ஆண்டுவாக்கிலேயே வீடுவீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால், 1857ல் வெடித்த முதல் இந்திய விடுதலைப் போரால், கணக்கெடுப்பைத் தொடங்குவது தாமதமானது.

பிறகு முதல் முறையாக நாடு தழுவிய அளவில் 1872ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் வசமுள்ள பகுதிகள் அனைத்திலும் இது நடக்கவில்லை. 1881ல் தான் பிரிட்டிஷ் இந்தியப் பகுதி முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1881ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களாக இருந்தால் அவர்களது ஜாதி என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டு, விவரம் சேகரிக்கப்பட்டது. மற்ற மதத்தினரிடம் அவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், TWITTER/PWILSONDMK

இதற்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆறாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டு பிப்ரவரியில் துவங்கி நடத்தப்பட்டது. ஏழாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 1941ல் நடத்தப்பட்டபோது, முந்தைய முறைகளைப் போல விரிவாக நடத்தப்படவில்லை.

1947ல் இந்தியா விடுதலையடைந்த பிறகு, 1948ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் அதற்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகள் அனைத்தும் இந்த சட்டப்படியே நடத்தப்பட்டன.

சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, ஜாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. பட்டியலினத்தினர், பழங்குடியினர் ஜாதி தொடர்பான தகவல் மட்டுமே சேகரிக்கப்பட்டது.

அப்போதிலிருந்து இந்திய அரசு ஒரு கொள்கை முடிவாக ஜாதி வாரி கணக்கெடுப்பை தவிர்த்து வருகிறது. 1948ஆம் ஆண்டின் சட்டத்தில், பொதுவாக ஜாதி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் விதிமுறைகள் ஏதும் கிடையாது. ஆகவே, இது தொடர்பாக தொடரப்படும் வழக்குகளில், இந்தச் சட்டத்தை மேற்கோள்காட்டி, ஜாதி தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உத்தரவிட நீதிமன்றம் மறுத்துவருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1980களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாகக் கொண்ட கட்சிகள் வலுப்பெற்றபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் எழத் துவங்கின. இறுதியாக 2011ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி குறித்த கேள்வியை வைத்துக்கொள்ள மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

ஆனால், அதில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. 2021ல் நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில். '2011ல் நடத்தப்பட்ட சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல குறைபாடுகள் உள்ளன. இதில் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தவறுகள் நிறைந்ததாகவும் பயனற்றதாகவும் உள்ளது” என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

1931ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது நாட்டில் மொத்த ஜாதிகளின் எண்ணிக்கை 4,147ஆக இருந்தது. இதேபோல் கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதில் பெறப்பட்ட தரவுகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சமூகத்தின் மிகவும் தேவைப்படும் பிரிவினருக்கு நீட்டிக்கப்படலாம் என்பது அதற்கு ஆதரவாக கொடுக்கப்படும் மிகப்பெரிய வாதம்.

ஜாதிக் கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் மூலம், யாருக்கு என்ன எண்ணிக்கை உள்ளது, சமூகத்தின் வளங்களில் யாருக்கு என்ன பங்கு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதில் சமத்துவமின்மை இருந்தால் அது தெரியவருவது நல்லது.

ஜாதி அமைப்பால் அதிகம் பயனடைந்த ஜாதியினர் குறிப்பாக ஆதிக்க ஜாதியினர் பொதுவாக இதுபோன்ற ஜாதிவாரி கணக்கெடுப்புகளை விரும்புவதில்லை. மேலும் ஆதிக்க ஜாதி பிரிவினர் சிறுபான்மையாக இருப்பது தெரிந்துவிடும் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து பெறப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் இடஒதுக்கீட்டுக்கான புதிய கோரிக்கைகள் எழத் தொடங்கும் என்பது முக்கிய கவலைகளில் ஒன்றாகும்.

" ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் எடுக்கப்பட வேண்டும். அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீட்டு அளிப்பதில் ஒரு தெளிவு கிடைக்கும். உதாரணமாக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. ஆனால், அப்படிக் கொடுக்கப்பட்டபோது, எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது எனக் கேள்வியெழுப்பப்பட்டு, நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

அதேபோல, இட ஒதுக்கீட்டினால் ஒரு சில சமூகங்களே அதிகம் பலன் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதை நிரூபிக்கவும் ஜாதி சார்ந்த புள்ளிவிவரங்கள் தேவை.

மேலும், ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது, இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். அவர்களுக்கு எத்தனை சதவீதம் கொடுப்பது என்று அரசினால் முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்தப் புள்ளிவிவரமும் கிடையாது. இதனால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறது.

இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமல்ல, அரசின் நலத் திட்டங்களுக்கும் புள்ளிவிவரங்கள் தேவை. ஜாதிவாரியாக அளிக்கப்படும் நலத் திட்டங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது?

2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஜாதி ரீதியான தகவல்களைத் திரட்டும் பணி கிராமப்புற மேம்பாட்டுத் துறைக்குக் கொடுக்கப்பட்டது. அந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. கேட்டால், நிறைய பேர், ஒரு ஜாதியில் உள்ள துணைப் பிரிவுகளைக் குறிப்பிட்டுச் சொன்னதால் அவற்றைத் தொகுக்க முடியவில்லை என்கிறது மத்திய அரசு. முதலில் மக்கள் தொகைக்கு என தனியாக ஒரு துறை மத்திய அரசில் உள்ளபோது, இந்த வேலையை ஏன் ஊரக மேம்பாட்டுத் துறையிடம் கொடுக்க வேண்டும்?

பல வழக்குகளில் எண்கள் அடிப்படையிலான புள்ளிவிவரங்களைக் கோருகிறது நீதிமன்றம். ஆனால், அப்படி விவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை. ஆகவே, ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்" என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Facebook/Narayanan Thirupathy

ஆனால், ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பா.ஜ.க. பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "இது போன்ற கணக்கெடுப்பை நடத்துவது ஜாதி ரீதியான புதிய மோதல்களுக்கே வழிவகுக்கும். ஆகவே, உறுதியாக அம்மாதிரி கணக்கெடுப்பை நடத்தக்கூடாது. உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இதுதான் எங்கள் நிலைப்பாடு என்பதை மத்திய அரசு சொல்லியிருக்கிறது. அந்த நிலைப்பாடு தொடர்கிறது" என்றார்.

அப்படியானால், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மத ரீதியில் கணக்கெடுப்பது எதற்காக எனக் கேள்வி எழுப்புகிறார் கருணாநிதி. "ஏனென்றால், மத ரீதியில் மக்கள் பிளவுபட்டால் அது தங்களுக்கு உதவும் என நம்பும் இவர்கள், ஜாதி ரீதியான கணக்கெடுப்பு தங்களுக்கு பாதிப்பாக அமையும் என கருதுகிறார்கள். அதனால்தான் வேண்டாம் என்கிறார்கள்" என்கிறார் அவர்.

ஒரு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஆரம்பித்தால், அவர்களைப் பற்றிய புள்ளிவிவரம் கண்டிப்பாக தேவைப்படும்; ஆகவே ஜாதி ரீதியான கணக்கெடுப்பு அவசியம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார். "இந்தியா சுதந்திரமடைந்த சமயத்தில் பட்டியலினத்தோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது.

ஆகையால், அவர்கள் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆகவே, அது தொடர்பான புள்ளிவிவரங்கள் தேவை. இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில், எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு தரப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது" என்கிறார் அவர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Ravi kumar

எண்ணிக்கைப் பெரும்பான்மை ஜாதியினர் இந்தப் புள்ளிவிவரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களில் எண்ணிக்கை பெரும்பான்மை ஜாதியினர் தங்களுக்கென அரசியல் கட்சிகளை ஆரம்பித்துவிட்டனர். ஆகவே, இனிமேலும் அதனைச் சுட்டிக்காட்டி ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் எனச் சொல்ல முடியாது" என்கிறார் அவர்.

ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்பட்டால்தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பட்டியலினப் பிரிவினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டும் ரவிக்குமார், "தற்போது பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவினர் என்ற பெயரில் முன்னேறிய ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு கொடுத்துவிட்டது.

அதன்மூலம் 50% உச்சவரம்பு உடைக்கப்பட்டுவிட்டது. எனவே எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் தமது இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்துமாறு கோரவேண்டும். அதற்கு, அவர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை ஆதரித்ததுபோல இந்த கோரிக்கையையும் தலித் அமைப்புகள் ஆதரிப்பது அந்த ஒற்றுமையை மனதில் கொண்டுதான்" என்கிறார் ரவிக்குமார்.

மேலும், 2011 இல் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட சமூக - பொருளாதார ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் ( Socio Economic Caste Census - SECC) எல்லா விவரங்களையும் வெளியிட்ட மத்திய அரசு ஜாதி வாரி மக்கள் தொகை விவரங்களை வெளியிடவில்லை. முதலில் அதை வெளியிட வேண்டும் என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் ஜாதிவாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்று 2020ஆம் ஆண்டின் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு காலக்கெடு விதித்தது. இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால், குலசேகரன் ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்படாததால், அது செயலிழந்தது.

இதற்கு முன்பாக, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் குறித்து ஆராய 1969ல் ஏ.என். சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், பழைய புள்ளிவிவரங்களின்படியே தனது பரிந்துரைகளை அளித்தது. 1983ல் ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாதிரி கணக்கீடு முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பரிந்துரைகளை அளித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: