திருமணத்தன்று 16 உறவினர்களை புதைக்கும் நிலை இவருக்கு வந்தது ஏன்?

    • எழுதியவர், ரஜினி வைத்தியநாதன்
    • பதவி, வங்கதேசத்திலிருந்து

தன் திருமணத்தைக் கொண்டாடுவோம் என நினைத்திருந்த நாளில் மமூன், தன் உறவினர்கள் 16 பேரின் சடலங்களை புதைக்கும் நிலைக்கு ஆளானார்.

அவர்கள் அனைவரும் மமூனின் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

அழகான புடவைகள், உடைகளை அணிந்திருந்த அவர்கள் மமூனின் திருமணத்திற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை கடும் புயல் தாக்கியது. மழை பெய்ததால், படகு இழுத்துச் செல்லப்பட்டது. அதனால், அவர்கள் ஆற்றங்கரையில் ஒரு தகர கொட்டகையின் கீழ் தஞ்சம் புகுந்தனர். அப்போதுதான் அந்த மின்னல் அவர்களை தாக்கியது.

கடுமையான வானிலை மற்றும் கடும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 300 பேர் மின்னல் தாக்கி உயிரிழப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

சோகமான திருமண வீடு

வங்கதேசத்தைவிட இருமடங்கு மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவில் இந்த இறப்பு எண்ணிக்கை 20-க்கும் குறைவாக உள்ளது.

ஆகஸ்ட் 2021-இல் என்ன நடந்தது என்பதைப் பற்றி முதன்முறையாகப் பேசுவது, மமூன் போன்ற பலருக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் பெரும் சுமையாகும்.

21 வயதான மமூன், வங்கதேசத்தின் வடமேற்கில் உள்ள ஷிப்கஞ்ச் பகுதியில் மணமகள் வீட்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அந்த சோகமான செய்தியை மமூனை வந்தடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இடி சத்தம் கேட்டது.

தன் குடும்பத்தினரை காண சென்ற அவர், அங்கு குழப்பமான காட்சிகளை எதிர்கொண்டார்.

"சிலர் உடல்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தனர்," என நினைவுகூர்ந்த அவர், "காயமடைந்தவர்கள் வலியால் கதறினர், குழந்தைகள் அலறினர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் யாரிடம் முதலில் செல்ல வேண்டும் என்று கூட என்னால் தீர்மானிக்க முடியவில்லை" என்றார்.

இந்த சம்பவத்தில், மமூன் தனது தந்தை, தாத்தா, பாட்டி, உறவினர்கள், மாமாக்கள் மற்றும் அத்தைகளை இழந்தார். அவரது தாயார் அந்த படகில் இல்லாததால், மின்னல் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார்.

"எனது தந்தையின் சடலத்தைக் கண்டபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்ததால், என் உடல்நிலை பாதிக்கப்பட்டது" என்று மமூன் கூறுகிறார்.

அன்று மாலை, அவரது உறவினர்களின் இறுதிச் சடங்குகள் நடந்தன. அவர்கள் அனுபவிக்க வேண்டிய திருமண விருந்து வீடற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

மமூன் பின்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், வேதனையான நினைவுகளைத் தூண்டுவதால் தன் திருமண நாளைக் கொண்டாடுவதில்லை என்று கூறுகிறார். "அந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு, இப்போது நான் மழை மற்றும் இடியைக் கண்டு மிகவும் பயப்படுகிறேன்" என்கிறார் அவர்.

மின்னலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

வங்கதேசத்தில் ஆண்டுதோறும் வெள்ளத்தை விட அதிகமான உயிரிழப்புகளுக்கு மின்னல் ஒரு காரணமாக இருக்கிறது.

1990-களில் ஓராண்டுக்கு 10-க்கும் மேலானோர் என்ற கணக்கில் இருந்து, மின்னல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை செங்குத்தாக உயர்ந்து வருகிறது.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் புயல்கள் காரணமாக இத்தகைய மின்னல் தாக்குதல்கள் அதிகரிப்பதாக, நாசா, ஐ.நா மற்றும் வங்கதேச அரசாங்கம் குறிப்பிடுகின்றன.

காரணம் என்ன?

"புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வாழ்க்கை முறை ஆகியவை மின்னல் காரணமாக அதிகரித்து வரும் இறப்புகளுக்கான காரணங்கள்" என்று வங்கதேச பேரிடர் மேலாண்மைப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் முகமது மிஜானூர் ரஹ்மான் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெள்ளம், சூறாவளி, பூகம்பம் மற்றும் வறட்சி ஆகியவற்றுடன் இயற்கை பேரிடர்களின் அதிகாரபூர்வ பட்டியலில் மின்னல் தாக்குதல்களை அந்நாட்டு அரசாங்கம் சேர்த்துள்ளது.

விவசாயிகள் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் பருவமழை மாதங்களில் வயல்களில் வேலை செய்வதால், மின்னலால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.

வங்கதேசத்தின் சத்கிரா பகுதியில் உள்ள ஒரு மைதானத்தைக் கண்டும் காணாத வகையில், தளர்வான வேலியில் தொங்கிக் கொண்டிருக்கும் கால்பந்து சட்டை, மின்னலால் பாதிக்கப்பட்ட ஒருவரை நினைவூட்டுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, அப்துல்லா தனது அன்றாட வேலைகளைச் செய்ய தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்றபோது அந்தச் சட்டை அணிந்திருந்தார்.

சுவடை விட்டுச் சென்ற மின்னல்

அந்த மர வேலியில் சுற்றப்பட்டிருக்கும் பார்சிலோனா கால்பந்தாட்ட ஆடையானது, நெருப்பினால் பொசுங்கியிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மின்னல் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றதை நூலின் எரிந்த விளிம்புகள் காட்டுகின்றன.

30 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்த மனைவி ரெஹானா, தன் கணவரை இழந்த அன்று என்ன நடந்தது என்பதை சொல்ல அந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அப்துல்லாவும் விவசாயிகளும் நெல் அறுவடை செய்யச் சென்றபோது பிரகாசமாகவும் வெயிலாகவும் இருந்தது. பிற்பகலில் கடுமையான புயல் ஏற்பட்டபோது, ஒரு மின்னல் அவள் கணவரைத் தாக்கியது.

"அங்கிருந்த மற்ற விவசாயிகள் சிலர், அவரை இந்த சாலையோரக் கடைக்கு அழைத்து வந்தனர்," எனகூறும் ரெஹானா, பாதையில் இருந்த ஒரு சிறிய குடிசையை சுட்டிக்காட்டுகிறார். "ஆனால், அதற்குள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்" என்கிறார் அவர்.

இறப்பதற்கு ஒருநாள் முன்பு அப்துல்லா அறுவடை செய்த அரிசி, ரெஹானாவின் வீட்டில் ஒரு சிறிய அறைக்கு வெளியே குவியலாக கிடக்கிறது.

சமீபத்தில் தங்களுடைய சாதாரண வீட்டை விரிவுபடுத்துவதற்காக இரண்டாவது அறையை கட்ட இத்தம்பதி கடன் வாங்கியிருந்தனர்.

உள்ளே அவர்களின் 14 வயது மகன் மசூத் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் முதன்மையாக சம்பாதிப்பவர் யாரும் இல்லாததால், தான் வாழ்நாள் முழுவதும் கடன் சுமைக்கு ஆளாகிவிடுவோமோ என ரெஹானா அஞ்சுகிறார். மேலும், தன் மகனின் படிப்புக்கு எப்படி பணம் செலுத்துவது என்றும் அவர் கவலைகொள்கிறார்.

"இப்போது வானத்தில் ஒரு மேகத்தைக் கண்டால்கூட, என் மகனை வெளியில் அனுப்புவதற்கு நான் துணியவில்லை. அந்தளவுக்கு பயம் என்னை பிடித்துக்கொண்டது," என கண்ணீருடன் கூறுகிறார்.

எப்படி தடுப்பது?

மின்னல் மற்ற நாடுகளிலும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகளில் சமீபத்திய ஆண்டுகளில் மின்னல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆனால், பல முயற்சிகள் காரணமாக இறப்பு எண்ணிக்கை இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

வங்கதேசத்தில் மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்னல் தாக்கத்தை மட்டுப்படுத்த, கிராமப்புற தொலைதூர பகுதிகளில் அதிகளவில் உயரமான மரங்களை நட வேண்டும் எனவும் குறிப்பாக காடழிப்பின் காரணமாக இழப்பை சந்தித்துள்ள இடங்களில் அதிகளவில் உயரமான மரங்களை நட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மின்னல் தாக்காத வகையிலான கொட்டகைகளை உருவாக்குவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, மின்னல் ஏற்படும்போது விவசாயிகள் அங்கு பாதுகாப்பாக இருக்கலாம். மேலும், புயல்கள் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க மேம்பட்ட வகையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகளை ஏற்படுத்தவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மின்னல் எப்படி இருக்கும்?

மக்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மோசமான போக்குவரத்து இணைப்பு மற்றும் மொபைல் பயன்பாடு இல்லாதது ஒரு சவாலாகும்.

விழிப்புணர்வு இல்லாததும் சவாலாக உள்ளது. மின்னல் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாட்டில் பலர் உணரவில்லை. உலகில் எங்காவது ஒருசிலர் தான் இடி, மின்னலால் தாக்கப்படுவதாக பலரும் கருதுகின்றனர்.

அப்துல்லா இறந்த தினத்தன்று உடன் இருந்த விவசாயி ரிப்பன் ஹொசேன், மிக நெருக்கமாக இருக்கும்போது மின்னல் எப்படி இருக்கும் என்பதை, அது தாக்கும் முன்பு வரை நான் கற்பனை கூட செய்துபார்த்ததில்லை என்கிறார்.

"ஒரு பெரிய உரத்த ஒலி ஏற்பட்டது. பின்னர் நான் நிறைய ஒளிரும் விளக்குகளைப் பார்த்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். “எங்கள் மீது நெருப்பு வட்டு விழுந்தது போல் இருந்தது. எலெக்ட்ரிக் ஷாக் அடித்தது போல் இருந்தது. பின்னர் நான் தரையில் விழுந்துவிட்டேன்” என்றார்.

”சிறிது நேரம் கழித்து, நான் கண்களைத் திறந்து பார்த்தபோது அப்துல்லா ஏற்கனவே இறந்துவிட்டார்” என்கிறார் அவர்.

தான் உயிர் பிழைத்ததை ரிப்பனால் நம்ப முடியவில்லை. இச்சம்பவத்திற்கு பின்னர் விவசாய நிலத்தில் வேலை செய்ய தான் பயப்படுவதாக கூறுகிறார். ஆனால், இந்த ஏழ்மையான விவசாய பகுதியில் விவசாயம் மட்டுமே அவருக்கு வாழ்தாரமாக உள்ளது.

"என் நண்பர் அப்துல்லாவை நினைக்கும் போதெல்லாம் நான் அழுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

"இரவில் நான் கண்களை மூடிக்கொண்டால், அந்த நாளின் நினைவுகள் அனைத்தும் ஒரு ஃப்ளாஷ்பேக் போல திரும்பும். என்னாலேயே எனக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை" என்கிறார்.

கூடுதல் தகவல்கள் மற்றும் படங்கள்: நேஹா ஷர்மா, அமீர் பீர்சாதா, சல்மான் சயீத், தாரேகுஜாமான் ஷிமுல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)