You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2024-இல் சூப்பர் எல்-நினோ இந்தியாவை தாக்கப் போகிறதா?
- எழுதியவர், ஸ்ரீகாந்த் பங்களே
- பதவி, பிபிசி தெலுகு
2024-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் ஒரு சூப்பர் எல் நினோ உலகைத் தாக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA - National Oceanic and Atmospheric Administration) சில நாட்களுக்கு முன்பு சூப்பர் எல் நினோ ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
சூப்பர் எல் நினோ என்பது என்ன? இந்தியாவில் மழைப்பொழிவை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
NOAA என்ன சொன்னது?
மார்ச் முதல் மே மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. இந்த காலகட்டத்தில்தான் எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது.
NOAA-இன் முன்னறிவிப்பின்படி, சூப்பர் எல் நினோ மார்ச் மற்றும் மே 2024-க்கு இடையில் ஏற்படலாம். கடுமையான எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்பு 70 முதல் 75 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடல் மேற்பரப்பு வெப்பநிலை அந்த நேரத்தில் சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்.
உலக வெப்பநிலை வெறும் 2 சதவிகிதம் அதிகரிப்பது என்பது, 30 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்புக்குச் சமம்.
1972-73, 1982-83, 1997-98 மற்றும் 2015-16-ஆம் ஆண்டுகளில், பல நாடுகள் கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற நிலைமைகளை சந்தித்தன.
2024-ஆம் ஆண்டிலும் அத்தகைய நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் எல் நினோ என்றால் என்ன?
சூப்பர் எல் நினோ பற்றி அறிந்துகொள்வதற்கு முன் உண்மையில் எல் நினோ என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.
பசிபிக் பெருங்கடலில் நிலவும் வானிலைக்கு 'எல் நினோ' என்று பெயர். பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது எல் நினோ எனப்படும்.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
சாதாரண வரம்பான 32 முதல் 34 டிகிரி செல்சியஸைவிட வெப்பநிலை அதிகமாக இருந்தால், அந்த வானிலை சூப்பர் எல் நினோ எனப்படும்.
எல் நினோவால் இந்தியாவில் வறட்சி
உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் பலத்த காற்று, அவற்றின் திசை மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகள் ஒட்டுமொத்த உலக வானிலையையே பாதிக்கிறது.
எல் நினோ காலநிலையில் தாக்கம் ஏற்படும் போதுதான் இந்தியாவில் வறட்சி நிலவுகிறது என்பதை கடந்த கால அனுபவம் காட்டுகிறது.
அதேபோன்று, இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் மழைப்பொழிவுக்கும் எல் நினோவுக்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு இருப்பது ஊடகச் செய்திகளிலிருந்து தெளிவாகிறது. ஏனெனில், 1981 முதல் தற்போது வரை, நாட்டில் ஏற்பட்ட வறட்சி நிலை, ஆறு எல் நினோ தாக்கங்களின் போதுதான் ஏற்பட்டது. இறுதியாக, 2002 மற்றும் 2009-ஆம் ஆண்டு வறட்சியின் போது எல் நினோ ஏற்பட்டது.
ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் எல் நினோ விளைவு இருக்கும். ஆனால், எல் நினோ ஏற்படும் போதெல்லாம் இந்தியாவில் வறட்சி ஏற்படும் என்பதில்லை.
உதாரணமாக, 1997 - 98-இல் எல் நினோவின் தாக்கம் கடுமையாக இருந்தாலும் நாட்டில் வறட்சி நிலவவில்லை.
சூப்பர் எல் நினோ மழையை பாதிக்குமா?
சூப்பர் எல் நினோவின் தாக்கம் காரணமாக, வட அமெரிக்க நாடுகளில் சராசரியைவிட அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த சூப்பர் எல் நினோ இந்தியாவை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து விவசாயம் மற்றும் காலநிலை மூத்த விஞ்ஞானி டாக்டர். ராமச்சந்திர சேபிளிடம் பிபிசி பேசியது.
“கடுமையான பஞ்சம் ஏற்படும் என்று பயப்படத் தேவையில்லை. ஏனெனில் வறட்சிக்கு எல் நினோ மட்டுமே காரணம் அல்ல. அதற்கு மற்றொரு முக்கிய காரணம் காலநிலை மாற்றம்" என்கிறார் அவர்.
காலநிலை மாற்றம் என்பது காற்றில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் வாயுக்கள் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு அளவு அதிகரிப்பதாகும். இதன் காரணமாக, உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. வெப்பநிலை உயரும்போது, காற்றழுத்தம் குறைகிறது. அழுத்தம் குறையும் இடங்களில் பலத்த காற்று வீசும். இதனால் ஓரிடத்தில் கனமழையும், மற்ற இடங்களில் வறட்சியும் நிலவுகிறது. காலநிலை மாற்றத்தால் இது நிகழும்” என்று அவர் மேலும் கூறினார்.
"எல் நினோ மார்ச் வரை நீடிக்கும் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது ஜூன் வரைதான் என்கிறார்கள். நம் நாட்டில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயில் காலம் என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும். எல் நினோ தொடர்ந்தால், வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும். இந்த மூன்று மாதங்களின் வெப்பநிலை ஜூன் மாதத்தில் பருவமழையை பாதித்தால், அது எல் நினோ விளைவு என்று கருதலாம்" என்று மூத்த வானிலை ஆய்வாளர் மாணிக் ராவ் கூலே கூறினார்.
இருப்பினும், சூப்பர் எல் நினோ ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மாணிக் ராவ், “இந்திய வானிலை ஆய்வு மையம் அதன் முதல் பருவமழை கணிப்பை ஏப்ரல் மாதம் தெரிவிக்கும். அன்றிலிருந்து கண்காணிப்பு தொடரும். இது, உலகெங்கிலும் உள்ள பதிவுகள் பரிசீலிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன. எனவே, சூப்பர் எல் நினோ ஏற்படுமா, இல்லையா என்பது குறித்து ஏப்ரலில் தெளிவு பெற வாய்ப்புள்ளது,'' என்றார்.
வரும் நாட்களில் எல் நினோ, சூப்பர் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் தாக்கத்தை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)