You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளின் உயிரைக் காத்த புதுக்குடி கிராம மக்களின் தற்போதைய நிலை என்ன?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
'புதுக்குடி மேலூர் கிராம மக்களின் உதவி கிடைக்காமல் போயிருந்தால் நாங்கள் உயிர் பிழைத்திருப்போமா என்பது சந்தேகம்தான்,' இதுவே திருச்செந்தூர் விரைவு ரயிலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ரயில் பயணிகள் பலரின் கருத்து.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய சாலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் 100 வீடுகளை மட்டுமே கொண்ட ஒரு சிறிய கிராமம் புதுக்குடி மேலூர்.
மழை நின்று 4 நாட்களை கடந்த பிறகும் கூட மின்சாரம் இன்றி இந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தங்களது கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும், உணவின்றி தவித்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு இரண்டு நாட்களாக உணவு சமைத்து வழங்கியுள்ளனர் கிராம மக்கள்.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பாதையில் இருந்த தண்டவாளம் இரண்டு புறமும் தண்ணீரில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கியதால் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
ரயிலின் இருபுறத்திலும் வெள்ள நீரால் பாய்ந்ததால் ரயில் பயணிகள் கீழே இறங்கித் தப்பித்துச் செல்ல வழி இன்றி தவித்தனர். ரயிலில் பயணிகள் உணவின்றி சிக்கியிருப்பதை அறிந்த புதுக்குடி கிராம மக்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.
புதுக்குடியை சூழ்ந்த கழுத்தளவு வெள்ளம்
"கனமழையால் எங்கள் கிராமத்தில் பல இடங்களில் கழுத்தளவு வெள்ளம் தேங்கியது. சுற்றிலும் இருந்த வாழைத் தோட்டங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமத்தில் எங்கும் இருள் சூழ்ந்தது. விடியும் வரை வீடுகளுக்குள் முடங்கி கிடந்தோம். திங்கட்கிழமை காலையில் ரயிலில் பயணிகள் சிக்கி இருப்பதை அறிந்து, எங்கள் கஷ்ட்டத்தையும் மீறி அவர்களுக்கு உதவ முடிவு செய்தோம்," என்கிறார் புதுக்குடி மேலூர் கிராமவாசி சுரேஷ்.
"ரயிலில் இருந்த பயணிகள் குழந்தைகளுக்கு பால் வேண்டுமென கிராமத்தை நோக்கித் திங்கள்கிழமை காலையில் வெள்ளத்தில் நடந்து வரத் துவங்கினர். இதனையடுத்து கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் ரயிலில் இருந்த குழந்தைகளுக்குத் தேவையான பால், வெந்நீர், சத்துமாவு உருண்டை உள்ளிட்டவற்றை முதலில் கொடுத்தோம்," என்கிறார் புதுக்குடியைச் சேர்ந்த பாஸ்கர்.
தொடர்ந்து பேசிய அவர், "பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளில் சமைத்து ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கினர். ஆனால் 700க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததால் கொடுப்பதற்கு உணவு குறைவாக தான் இருந்தது. எனவே, ஊரின் மையத்தில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோயிலில் கிராம மக்களிடம் இருந்த அரிசி பருப்பு, காய்கறி போன்ற பொருட்களை பெற்று உணவு சமைத்து பயணிகள் பசியை போக்கினோம்," எனக் கூறினார்.
மேலும், "நாளை தங்களுக்கு உணவு இருக்குமா இருக்காதா என்பதைப் பற்றி கிராம மக்கள் யோசிக்கவில்லை. இன்று மக்களின் பசியை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி செயல்பட்டனர். கிராம மக்களின் வீடுகள் இடிந்த போதும் கூட அதனையும் பொருட்படுத்தாமல் மக்கள் ரயில் பயணிகளுக்குத் தேவையான உணவை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
"ரயில் பயணிகளும் கிராம மக்கள் கூறியபடி கேட்டு, வரிசையாக கோயிலுக்குள் காத்திருந்து சாதி, மதங்களைக் கடந்து வசதி படைத்தவர், இல்லாதவர் என்ற வேற்றுமையை தவிர்த்து வரிசையில் நின்று கொடுக்கும் உணவை வாங்கி உண்டனர்," என்று நம்மிடம் கூறினார் பாஸ்கர்.
"கிராமத்தில் இருக்கக்கூடிய பொருட்களை ஒருங்கிணைத்து கோயிலில் மூன்று வேளையும் சமைத்து ரயில் பயணிகளுக்கு பரிமாறியதைக் கண்ட ரயில் பயணிகள் சிலர் எங்களது காலில் விழுந்தனர். ரயில் பயணிகளின் பாராட்டு தான் எங்களுக்குத் தொடர்ந்து வேலை செய்யும் தெம்பைக் கொடுத்தது," என்கிறார் புதுக்குடியைச் சேர்ந்த தேவகி.
சமைக்க உதவிய 81 வயது மூதாட்டி
"எனது இடிந்த வீட்டை சரி செய்வதை விடுத்து, ரயில் பயணிகள் பட்ட வேதனையை காண முடியாமல் சமையல் செய்யும் பணிக்கு உதவினேன்," எனக் கூறுகிறார் 81 வயது மூதாட்டி லெட்சுமி.
"எனது அண்ணன் மகன் சரவணன் ஸ்ரீ வைகுண்டத்திற்கு அரிசி வாங்கச் சென்றார். 2 மணி நேரத்திற்கு மேலாக திரும்ப வராமல் இருந்தார், எப்படியோ ஒரு வழியாக அவர் அலைந்து திரிந்து வெள்ளத்தில் அரிசி மூட்டையை வாங்கி வந்து கொடுத்தான். அதன் பின்னர் ரயில் பயணிகளுக்கு உணவு சமைத்து வழங்கினோம்.
"பயணிகளுக்கு சமைத்து கொடுக்க அரிசி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை, மக்களுக்கு தொடர்ச்சியாக உணவை கொடுத்துக் கொண்டே இருந்தோம். வீட்டில் இருக்கும் உப்பு, புளி மிளகாய் கொண்டு ரயிலில் வந்த நான்கு சமையல் மாஸ்டர்கள் ரயில் பயணிகளுக்கு தேவையான உணவுகளை சமைத்ததால் பெரும் பிரச்சனை இல்லாமல் போனது," என்கிறார் லெட்சுமி.
அதே கிராமத்தைச் சேர்ந்த சாரதா, "ரயிலில் இருந்த குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை கிராமத்தில் தயார் செய்து நேரடியாக ரயிலில் சென்று வழங்கினோம். மின்சாரம் இல்லாததால் குடிநீர் குழாயில் தண்ணீர் அடித்து அதனை சமையலுக்கு பயன்படுத்த தொடர்ச்சியாக கிராம மக்கள் உதவி செய்தனர். நாங்கள் பட்டினியாக கிடந்தாலும் பரவாயில்லை ரயில் பயணிகளுக்கு உணவை கொடுக்க வேண்டும் என வீட்டில் இருந்த அனைத்து பொருள்களையும் எடுத்து வந்து ரயில் பயணிகளின் பசியை போக்கினோம்," என்கிறார்.
பயணிகளுக்கு உணவு சமைத்த சமையல் மாஸ்டர்கள்
தொடர்ந்து பேசிய சாரதா, "திருச்செந்தூர் ரயிலில் வந்த 5 சமையல் மாஸ்டர்கள் பொருட்களை மட்டும் எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் உணவு சமைத்து கொடுக்கிறோம் என கூறினர். இதனையடுத்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் சமையலுக்குத் தேவையான பொருட்களை வழங்கினர்,” என்றார்.
"சமையல் மாஸ்டர்கள் குறைந்த அளவிலான பொருள்களை பயன்படுத்தி அனைத்து பயணிகளுக்கு தேவையான உணவினை ஓய்வின்றி சமைத்து கொடுத்தனர்" என்கிறார்.
"ரயில் பயணிகள் உணவு கேட்டு கிராமத்தை நோக்கி வந்தவுடன் வீட்டிலிருந்த இட்லி மாவு, பால் உள்ளிட்டவற்றை கொண்டு முதற்கட்டமாக உணவை கொடுத்தோம், பின்பு அரிசி உள்ளிட்ட பொருட்கள் தீர்ந்தவுடன் வெள்ளத்தில் சென்று நான் அரிசி வாங்கி வந்து வழங்கினேன்" என்று நம்மிடம் கூறினார் புதுக்குடியைச் சேர்ந்த சரவணன்.
ரயில் பயணிகளும் கிராம மக்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால் உரிய நேரத்தில் உணவை பிரச்சனையின்றி செய்து கொடுக்க முடிந்தது என்கிறார் சரவணன்.
'எங்கள் உயிரைக் காத்த கிராம மக்களுக்கு அரசு உதவ வேண்டும்'
மழை பாதிப்புகள் குறைந்து வெள்ள நீர் வடிந்தது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு மீட்பு குழுவினர் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
அதன் பிறகு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மீட்பு குழுவினர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை அடைந்து அங்கு சிக்கி இருந்த 700க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டு பேருந்தில் அழைத்துச் சென்றனர், என கிராம மக்கள் தெரிவித்தனர்.
ரயில் பயணிகள் பத்திரமாக மீட்டுச் செல்லப்பட்டனர். ஆனால் புதுக்குடி மேலூர் கிராமத்தில் 5 நாட்களைக் கடந்தும் மின்சாரம் இன்றி ஊர் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கிராம மக்கள் தங்களுக்கு தேவையான உணவை பத்திரகாளி அம்மன் கோவிலில் வைத்து சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
தங்கள் உயிரைக் காத்த புதுக்குடி மேலூர் கிராம மக்களுக்கு அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டுமென்றும், அவர்களுக்கு தாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக மீட்கப்பட்ட ரயில் பயணிகள் செய்தியாளர்களிடம் கூறினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)