You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிலுவை நடப்பட்டதால் இடுகாட்டில் சடலத்தைத் தோண்டி எடுக்க கோரிய பாஜகவினர்
- எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருப்பூர் நொய்யல் ஆற்றின் அருகே செல்லாண்டியம்மன்துறை இடுகாட்டில் சிலுவை நட்டு புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து அதன் நெற்றியில் அணிவித்த திருநீற்றைக் காட்ட வேண்டும், இல்லாவிட்டால் வேறு இடத்துக்கு சடலத்தை மாற்றவேண்டும் என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சிலுவையை அகற்றி கற்பூரம், ஊதுபத்தியோடு இந்துமுறைப்படி குடும்பத்தினர் வழிபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்யல் வீதியில் உள்ள செல்லாண்டியம்மன்துறை இடுகாட்டை பல ஆண்டுகளாக இந்துக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உடல்களை எரிக்க விரும்பாத இந்துக்கள் பயன்படுத்தும் இடுகாடாகும் இது. இந்த பகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கும் தனித்தனி இடுகாடு, சுடுகாடுகள் உள்ளன.
பெரும்பாலும் இந்துக்களே பயன்படுத்தி வந்த இடுகாட்டில் திடீரென சிலுவை நடப்பட்டிருப்பதைக் கண்டதும், கிறிஸ்தவரைப் புதைக்க அனுமதித்ததாக மாநகராட்சியைக் கண்டித்து, பாஜகவினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து புதைக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதைத்த இடத்தில் சிலுவை வைத்ததால் அது பெரும் சர்ச்சையாகிவிட்டது என்றும், உடனடியாக செல்லாண்டியம்மன்துறை இடுகாட்டுக்கு வருமாறும் கூறியிருக்கின்றனர். அங்கு வந்த அவர்களை சூழ்ந்த பாஜகவினர், இந்துக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகள் மிதிக்கப்படுவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.
“திருநீற்றைக் காட்டு, இல்லாவிட்டால் சடலத்தைத் தோண்டு”
சம்பவம் பற்றி அறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் செல்லாண்டியம்மன் துறை இடுகாட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு கேட்ட போதும், சமாதானம் செய்ய முயன்ற போதும் பலன் இல்லாமல் போனது. இதையடுத்து, இறந்தவர் இந்துதான் என குடும்பத்தினர் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. இந்துமுறைப்படி புதைத்திருந்தால் நெற்றியில் விபூதி வைத்திருப்பீர்கள் அல்லவா? அதைக் காட்டுங்கள், கிறிஸ்தவராக இருந்தால் சடலத்தைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதையுங்கள், எனக் கூறினர்.
இது இறந்தவரின் குடும்பத்துக்கு அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. அவரது கடைசி ஆசையைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து போலீசாரும் மாநகராட்சி அதிகாரியும் இருதரப்பிலும் சமாதானம் பேசினர்.
புதைத்த சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கு பதில், சிலுவையை அகற்ற குடும்பத்தினர் சம்மதித்தனர். பின்பு, சடலம் புதைத்த இடத்தில், கற்பூரம் கொளுத்தி, ஊதுபத்தி காண்பித்து, இந்துக்களின் முறைப்படி வழிபட்ட பின்பே பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருதரப்பிலும் புகார் ஏதும் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என திருப்பூர் வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.
அம்மாவின் அருகே இளைப்பாற கடைசி ஆசை
இறந்தவர் காரமடை அருகே தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வந்த ரவி. அவர் ஒரு இந்துதான் என்றபோதும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்றுள்ளார். உடல் நலனில் முன்னேற்றமும் நம்பிக்கையும் ஏற்படவே, தன்னை புதைக்கும் இடத்தில் சிலுவையை நட வேண்டும் எனவும் தன் அம்மாவுக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதன்படியே, அவரது தாயாரைப் புதைத்த இடமான செல்லாண்டியம்மன் துறை இடுகாட்டில், அதே சமாதிக்கு அருகில் மகனான ரவியையும் புதைத்து, சிலுவையையும் நட்டுள்ளனர்.
பிற மதத்தினர் அனுமதிப்பார்களா? - பாஜக கேள்வி
சிலுவை நட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன்? என பாஜகவின் திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்வேலிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் கட்சியைச் சேர்ந்தவரின் தந்தையைப் புதைக்க செல்லாண்டியம்மன்துறை இடுகாட்டுக்குச் சென்றோம். அங்கு, ஒரு புதைமேட்டின் மீது சிலுவை நடப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கூறியபோது, அவர்கள் அதனை ஒரு பொருட்டாக மதித்து உரிய பதிலளிக்கவில்லை.
இதுவே ஒரு கிறிஸ்தவ இடுகாட்டிலோ, இஸ்லாமியருடைய இடுகாட்டிலோ ஒரு இந்துவின் சடலத்தைப் புதைக்க முயன்றால், அந்த மதத்தினர் இதை அனுமதிப்பார்களா? திருப்பூரின் காவல்தெய்வம் செல்லாண்டி அம்மன். அம்மன் எல்லைக்குள் இருக்கும் இந்த இடுகாடு காலம் காலமாக இந்துக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்தது பற்றி கேள்வி எழுப்பினோம். சரியான பதில் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது” எனக் கூறினார்.
புனிதமான இடத்தில் முகம் சுழிக்க வைக்கும் எலும்புக்கூடுகள்
பிற சமூகத்தினர் பயன்படுத்தும் மயானத்தில் ஒருவரை புதைப்பது சட்டப்படி குற்றம் இல்லாதபோது, ஏன் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என்று பாஜக கோரியது என மாவட்ட தலைவர் செந்தில் வேலிடம் கேள்வி எழுப்பினோம்.
இதற்கு பதிலளித்த அவர், “இந்துக்களின் மத நம்பிக்கை, பாரம்பரியத்தின் தீவிரத்தன்மையை அதிகாரிகளுக்கும், காவலாளிக்கும் உணர்த்தவும், இனி இதுபோல் நடக்காத வகையிலும் இருக்க ஒரு விவாதத்துக்கு வேண்டி நாங்கள் சடலத்தை எடுத்து வேறு இடத்தில் புதைக்குமாறு கூறினோம். ஒரு வேளை அவர்களே சடலத்தை அகற்ற முற்பட்டிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் நாங்களே அதைத் தடுத்திருப்போம். ‘இந்துவாக இருந்தால் சடலத்தை பார்க்க வேண்டும் இந்து முறைப்படி திருநீறு வைத்து தானே அடக்கம் செய்திருப்பீர்கள். தோண்டிக் காட்டுங்கள்’ என்று நாங்கள் கூறியது அனைத்துமே ஒரு விவாதத்துக்காக சொன்னதுதான். இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதே நேரத்தில் இந்துக்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்” என அவர் விளக்கமளித்தார்.
இதுகுறித்து உயிரிழந்த ரவியின் குடும்பத்தினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்ட போது, ஏற்கனவே தந்தை இறந்த துக்கத்திலும் அதைத்தொடர்ந்து நடந்த பிரச்சனைகளிலும் இருந்து மீள முடியாமல் இருப்பதாகவும், இனியும் அதைப்பற்றி நினைவுகூர்ந்து பேச விருப்பமில்லை எனவும் கூறிவிட்டனர்.
பாரம்பரியத்தை சட்டம் மதிக்கிறது - வழக்கறிஞர்
சட்டத்தின் பார்வையில் மயானம் மதம் சார்ந்ததல்ல என்று தெளிவுபடுத்தினார் மூத்த வழக்கறிஞர் நாகராஜ்.
“சட்டத்தின் பார்வையில் ஒரு சமுதாயத்தினர் பயன்படுத்தும் மயானத்தில் பிற சமுதாயத்தினரைப் புதைப்பது குற்றமாகாது. அதேசமயம், 30 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் போது அது சமூக வழக்கமாக மாறிவிடும். அந்த நம்பிக்கையில் சட்டம் தலையிடாது."
"உதாரணத்துக்கு தென் மாவட்டங்களில் மொய் நோட்டில் எழுதி கோடிக்கணக்கில் பணம் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால், அது வருமான வரிக்கு உட்பட்டு வராது. ஏனெனில் சமூக பண்பாட்டு வழக்கப்படி அது அவர் திருப்பிச் செலுத்தக் கூடிய ஒன்றாக மாறிவிடும். அதுபோன்றுதான், இதுவும். பிற மதத்தினர் இதில் தொந்தரவு செய்வதில்லை என்பது அவர்களுக்குள் இருக்கும் ஒரு எழுதப்படாத சமூக நல்லிணக்க ஒப்பந்தம்” என்றார்.
மயானம் மதம் சார்ந்ததல்ல – மாநகராட்சி ஆணையர்
இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமாரிடமும் பிபிசி தமிழ் விளக்கம் கோரியது. அப்போது பேசிய அவர், “இறந்தவர் ஒரு இந்துதான். அவரது கடைசி ஆசை கிறிஸ்தவ மத சிலுவையை தனது சமாதியில் வைக்க வேண்டும் என்பதேதான். குடும்பத்தினரின் விளக்கத்தை அடுத்து இருதரப்பும் சமாதானம் அடைந்தனர்.” என்றார்.
இது இந்துக்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஒரு மதத்துக்கு மட்டுமே சொந்தமான இடுகாடா? என்ற கேள்விக்கு பதிலளித்த பவன்குமார், “அரசாங்க ஆவணங்களின் படி இது ஒரு மயானம் என மட்டும்தான் குறிப்பிடப் பட்டிருக்கும். இந்துவுடையது இஸ்லாமியர்களுடையது என அதனை குறிப்பிட்டிருக்க மாட்டோம். மயானத்தில் புதைக்க அனைவருக்குமே உரிமை உள்ளது. எனினும், அவரவர் வழக்கப்படி, அந்தந்த மதத்தினரின் சடலங்கள் பெரும்பாலும் எங்கு வழிவழியாகப் புதைக்கப்படுகிறதோ அங்கு புதைக்கின்றனர்” என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
மயானங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை – பாஜக
மயான பராமரிப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்வேல் சுட்டிக்காட்டினார்.
“இடுகாடு, சுடுகாடு என்பது சுடலை சிவன் வாழும் புனிதமான இடமாகப் பார்க்கிறோம். அங்குதான் தர்ப்பணங்களும், ஆடி மாத வழிபாடுகளும் முன்னோர்களுக்கு நடத்தப்படுகிறது. அப்படி இந்துக்கள் தங்களது மறைந்த முன்னோர்களை இளைப்பாற வைக்கும் புனிதமான இடத்தில், சடலங்கள் சரிவர புதைக்கப்படாமல், எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் ஆகியவை ஆங்காங்கே வெளியே தெரிகின்றன. தர்ப்பணத்துக்கோ, சடலத்தைப் புதைக்கவோ வருவோர் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. மது அருந்திய பாட்டில்களும், பிளாஸ்டிக் கப்புகளும் நிறைந்து உள்ளன. கஞ்சா, மதுபோதை ஆசாமிகள் நடமாட்டமும் சமூக விரோத செயல்களும் அதிகம் நடக்கிறது. மாடுகளை வெட்டுவது, இறைச்சிக் கழிவுகளை அங்கேயே போடுவது என இடுகாட்டையே பராமரிப்பு இன்றி மாநகராட்சியினர் வைத்துள்ளனர்.” என்றார்.
மேலும், “பிணங்களைப் புதைத்தற்கான பதிவேடு முறைப்படி கையாளப்படாமல் உள்ளது. புதைத்தவரின் குடும்பத்தினருடைய செல்போன் எண்கள்கூட குறிப்பிட்டு வைத்திருக்கவில்லை. வாயில் கூட இல்லை. இதுபற்றி நாங்கள் ஏற்கெனவே மாநகராட்சியில் கூறியும் நடவடிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டினார்.
அதிகம் பதிவாகும் மயான வழக்குகள்
தமிழகத்தில் 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 50000 சிற்றூர்கள் உள்ளன. தமிழகத்தில் பதிவாகும் சிறு குற்ற வழக்குகளில் கிட்டத்தட்ட 30-40% வழக்குகள் சுடுகாடு, இடுகாடு குறித்து, அதற்கான பாதை இல்லை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது தொடர்பானவை என்று என பிபிசி தமிழிடம் கூறியிருந்தார், முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும், ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி.
ஏற்கனவே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த மயானங்கள் மேம்படுத்தப்பட்டு எரிமேடைக் கொட்டகைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஊருக்கு பொதுவாக இருந்தாலும் அது தலித்துகள் அணுக முடியாத வகையிலேயே பல இடங்களில் உள்ளன. தலித்துகளின் உடல்களை எடுத்துச் செல்லும் போது அவர்களுக்கான பாதைகள், ஆதிக்க சாதியினர் வசிக்கும் ஊர் தெரு வழியாகவோ அல்லது வயல்வெளி வழியாகவோ அனுமதிக்க மறுக்கப்படுவது இன்றும் பல இடங்களில் தொடர்கதையாக தான் உள்ளது.
இது குறித்து விளக்கமளித்த மாநகராட்சி ஆணையர் பவன்குமார், “பாஜகவினர் கோரிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருகிறோம். மின்மயானத்தைப் போன்றே மயானங்களிலும் யாரைப் புதைக்கிறார்கள், அவர்களின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் ஒரு பதிவேடாக பராமரிக்கப்படும். அது மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டு இன்னாரை இந்த இடத்தில் புதைத்திருக்கிறோம் எனக் கூறி அவர்கள் இறப்புச் சான்று வாங்கிக் கொள்ள உதவும்” என கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)