ஆன்னா மணி: இந்திய வானிலை அறிவியலில் பல புரட்சிகளைச் செய்த கேரள பெண்

    • எழுதியவர், செரிலன் மோலன்
    • பதவி, பிபிசி செய்திகள், மும்பை

காலநிலை மாற்றம். இது பரவலாகப் பேசப்படும் ஒரு வார்த்தையாக மாறுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே சுற்றுச்சூழலை நன்கு புரிந்துகொள்ள உதவும் சாதனங்களை உருவாக்க ஒரு இந்தியப் பெண் பல முரண்பாடுகளுடன் போராடினார்.

உலகின் மிக முக்கியமான வானிலை விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்னா மணி, அவரது சொந்த நாட்டில்கூட பலருக்கும் அறிமுகமில்லாத ஒரு நபராகவே இன்றும் இருக்கிறார்.

இப்போது கேரளாவின் ஒரு பகுதியாக இருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1918இல் பிறந்தார் ஆன்னா மணி. அப்போது புதிதாக சுதந்திரம் பெற்ற நாடான இந்தியா வானிலை ஆய்வு செய்வதற்குப் பிற நாடுகளைச் சார்ந்திருக்காமல் தனது சொந்த கருவிகளை உருவாக்க உதவியதில் மிகவும் பிரபலமானவர் ஆன்னா மணி.

விஞ்ஞானிகள் ஓசோன் படலத்தைக் கண்காணிக்கும் செயல்முறையை எளிதாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். 1964ஆம் ஆண்டில், அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஓசோன்சோன்டை (Ozonesonde) உருவாக்கினார். இது தரையில் இருந்து வானை நோக்கி 35 கிமீ (22 மைல்கள்) வரை ஓசோன் இருப்பதை அளவிடுவதற்காக காற்றில் அனுப்பப்படும் பலூன்.

அண்டார்டிகாவுக்கான இந்தியப் பயணங்களில் 1980களில் மணியின் ஓசோன்சோன்ட் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால்தான் இயற்பியலாளர் ஜோசப் ஃபார்மன் 1985இல் ஒரு பெரிய 'துளை' தென் துருவத்தின் மேல் உள்ள ஓசோன் படலத்தில் இருப்பதாக உலகிற்கு எச்சரிக்கை செய்தபோது (அதற்காக அவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசைப் பெற்றார்), இந்திய விஞ்ஞானிகள் மணியின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி அவர்கள் சேகரித்த தரவுகள் மூலம் ஃபர்மானின் கண்டுபிடிப்பை உடனடியாக உறுதிப்படுத்த முடிந்தது.

துணிச்சலான ஒரு விஞ்ஞானி

இந்தியா பசுமைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான ஓர் உறுதியான அடித்தளத்தை அவர் உருவாக்கினார். 1980கள் மற்றும் 90களில், காற்றாலை ஆற்றலை ஆய்வு செய்ய சுமார் 150 தளங்களை அமைத்தார்.

அவற்றில் சில தொலைதூரப் பகுதிகளில் அமைந்திருந்தன. ஆனால் இந்தத் துணிச்சலான விஞ்ஞானி தனது சிறிய குழுவுடன் காற்றை அளவிடுவதற்கான நிலையங்களை நிறுவ அங்கு பயணம் செய்தார்.

அவரது கண்டுபிடிப்புகள் நாடு முழுவதும் ஏராளமான காற்றாலைகளை அமைக்க இந்திய விஞ்ஞானிகளுக்கு உதவியுள்ளன என்று ஆன்னா மணி பற்றிய தனது கட்டுரையில் கூறுகிறார் வானிலை ஆய்வாளர் சி.ஆர்.ஸ்ரீதரன்.

மேலும் அந்தக் கட்டுரையில், "அப்போது பெண்கள் உயர்கல்வி படிப்பது கஷ்டம் என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞானியாக ஆசைப்படுவது அதுவும் வழக்கத்திற்கு மாறாக காலநிலையைப் பற்றி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மணி தைரியமாகப் பின்பற்றினார்.

சிறு வயதிலிருந்தே அவருக்கு அதிகமான அறிவுப் பசி இருந்தது, வெற்றிக்கான பாதையில் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தினார்," என்கிறார் ஸ்ரீதரன்.

நகைகளை விடுத்து புத்தகங்களை விரும்பியவர்

"ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆன்னா மணி, எட்டு பிள்ளைகளில் ஏழாவது குழந்தை. அவருடன் பிறந்தவர்கள் ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள். தனது எட்டாவது பிறந்தநாளில் அவரது பெற்றோர்கள் பரிசாக அளித்த ஒரு ஜோடி வைர காதணிகளை வேண்டாமென்று நிராகரித்துவிட்டு, அதற்குப் பதிலாகப் படிப்பதற்காக கலைக் களஞ்சியங்களின் தொகுப்பைக் கேட்டார்.

பதின்பருவத்தில், மணி தன் சகோதரிகளைப் போல் திருமணம் செய்துகொள்ளாமல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். அவர் எடுத்த முடிவு குடும்பத்தினரிடம் இருந்து தீவிர எதிர்ப்பையும் பெறவில்லை, அதே வேளையில் ஊக்கத்தையும் பெறவில்லை," என்று விஞ்ஞானி அபா சூர், ஆன்னா மணி தொடர்பான தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒரு முன்னோடி வானிலை நிபுணராக மாறுவதற்கு மணியின் பயணம் சுலபமானதாக இல்லை. அவரது குடும்பத்தில் ஒரு தொழில் வாழ்க்கையைத் தொடர ஊக்குவிக்கப்பட்டவர்கள் ஆண்கள்தான், பெண்கள் அல்ல. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு, ஆனால் அது முடியாமல் போனதால், தனக்கு நன்றாக வரும் இயற்பியலைத் தொடர முடிவு செய்தார்.

அவர் மெட்ராஸில்(இப்போது சென்னை) உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமனின் ஆய்வகத்தில் அடுத்த ஐந்தாண்டுகள் வைரங்களின் பண்புகளை ஆய்வு செய்தார். பின்னர் வெளிநாட்டில் படிப்பதற்கு அரசாங்க உதவித்தொகை பெற்றார்.

இங்கிலாந்து பயணம்

உதவித்தொகையானது இயற்பியலைப் படிப்பதற்காக அல்ல. ஆனால் வானிலை ஆய்வுக் கருவிகள் குறித்துப் படிக்க. ஏனெனில் இந்தியாவிற்கு அந்த நேரத்தில் வானிலை ஆய்வுத் துறையில் நிபுணத்துவம் தேவைப்பட்டது. அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட மணி, துருப்புக் கப்பலில் இங்கிலாந்துக்கு பயணம் செய்தார் என்று ஸ்ரீதரன் எழுதுகிறார்.

அவர் அடுத்த மூன்று வருடங்களுக்கு எவ்வாறு தயாரிக்கப்பட்டன, சோதிக்கப்பட்டன, அளவீடு செய்யப்பட்டன மற்றும் தரப்படுத்தப்பட்டன போன்ற வானிலை கருவிகளின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்தார். 1948இல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு அதாவது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் பெற்று ஒரு வருடம் கழித்து, அவர் வானிலைத் துறையில் சேர்ந்தார்.

அங்கு அவர் வெளிநாட்டில்தான் பெற்ற அறிவைப் பயன்படுத்தி இந்தியா தனது சொந்த உபகரணங்களைத் தயாரிக்க உதவினார். அதுவரை உபகரணங்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

100க்கும் மேற்பட்ட கருவிகளை உருவாக்கியவர்

மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தம் ஆகியவற்றை அளவிடுவது உட்பட, புதிதாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கருவிகளை உருவாக்க ஒரு பட்டறையை அமைத்தார். அவற்றுக்கான விரிவான பொறியியல் விவரக்குறிப்புகள், வரைபடங்கள் மற்றும் கையேடுகளையும் அவர் தயார் செய்தார்.

துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியத்திற்கான (Accuracy and precision) ஓர் எடுத்துக்காட்டாக இருந்தவர் ஆன்னா மணி. கருவிகள், உயர்ந்த தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய மணி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

"தவறான அளவீடுகள் எந்த அளவீடுகளையும்விட மோசமானவை என்று நான் நம்புகிறேன்," உலக வானிலை அமைப்புக்கு (WMO) அளித்த ஒரு நேர்காணலில் 1991இல் இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஆராய்வதற்கான திட்டத்தின் மற்றொரு படியாக, சூரிய கதிர்வீச்சை அளவிடுவதற்கான கருவிகளை உருவாக்குவதிலும், நாடு முழுவதும் கதிர்வீச்சு நிலையங்களின் வலையமைப்பை அமைப்பதிலும் மணி ஒரு முக்கியப் பங்கை ஆற்றினார்.

"இந்த உயர் துல்லியமான கருவிகள், அதுவரை மேற்கத்திய நாடுகளில் ஏகபோகமாக இருந்தன. ஆனால் பெரும்பாலான வடிவமைப்பு அளவுருக்கள் ரகசியமாக வைக்கப்பட்டன. எனவே ஒருவர் அடிப்படைகளில் இருந்து தொடங்கி முழு தொழில்நுட்பத்தையும் தானே உருவாக்க வேண்டிய நிலை இருந்தது," என ஸ்ரீதரன் எழுதுகிறார்.

மணி தனது வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைந்தாலும், அவர் பாகுபாடுகளை எதிர்கொண்டார்.

பெண் விஞ்ஞானியாக எதிர்கொண்ட சவால்கள்

அவரது வழிகாட்டியான சி.வி. ராமன், ஒரு சில பெண்களை மட்டுமே தனது ஆய்வகத்தில் அனுமதிப்பவர். அவர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தார். "ராமன் தனது ஆய்வகத்தில் பணிபுரிபவர்களைக் கண்டிப்பான முறையில் பிரித்து வைத்திருந்தார்," சுர் தனது "Dispersed Radiance: Caste, Gender, and Modern Science in India" என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்.

அதனால் பெரும்பாலும் மணியும் மற்றொரு பெண் மாணவியும் தனியாகப் பணிபுரிந்தனர், தங்கள் சகாக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர், அறிவியல் கருத்துகள் பற்றிய ஆரோக்கியமான விவாதத்தில் அவர்களால் ஈடுபட முடியவில்லை.

மணி அங்கு சில ஆண்களிடம் இருந்தும் பாகுபாடுகளை எதிர்கொண்டார். சுர் தனது புத்தகத்தில், "பெண் திறமையின்மை"க்கான அறிகுறியாக ஒரு பெண் கருவிகளைக் கையாள்வதில் அல்லது ஒரு பரிசோதனையை மேற்கொள்வதில் செய்யும் சிறிய தவறைக்கூட உடனடியாக சக ஊழியர்கள் சுட்டிக்காட்டியதைப் பற்றி அவர் பேசுகிறார்.

கோட்பாட்டு இயற்பியல் பாடத்தை ஆன்னா மணி தணிக்கை செய்தபோது, ​​அந்தத் தணிக்கைப் பனி அவரது தகுதிக்கு மீறியது என்ற அங்கு கருத்து நிலவியது.

ஆன்னா மணிக்கு 1960களின் முற்பகுதியில், சர்வதேச இந்தியப் பெருங்கடல் பயணக் குழுவில் இடம்பெற ஒரு வாய்ப்பு கிடைத்தது. பருவங்களை ஆய்வு செய்ய இரண்டு கப்பல்களை கருவிகள் கொண்டு இணைக்க வேண்டும். ஆனால் அவரால் தரவுகளைச் சேகரிக்க கப்பல்களில் செல்ல முடியவில்லை.

"நான் செல்ல விரும்பினேன், ஆனால் அந்த நாட்களில் இந்திய கடற்படையின் கப்பல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை," மணி தனது 1991 பேட்டியில் WMOக்கு கூறினார். ஆனால், தன் தலைமுறையைச் சேர்ந்த பல பெண்களைப் போலவே ஆணாதிக்க மனப்பான்மைக்குப் பலியாகும் ஒரு பெண்ணாக மாற மணி மறுத்துவிட்டார்.

தொழில்முறைப் பயணத்தில் தனது பாலினம் என்பது ஒரு தடையில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். "பெண் என்பதற்காக மட்டுமே நான் தண்டிக்கப்பட்டதாகவோ அல்லது சலுகை பெற்றதாகவோ நான் உணரவில்லை," என அன்னா மணி சுரிடம் கூறுகிறார்.

கடந்த 2001ஆம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் மறைந்தார் ஆன்னா மணி. அவர் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கிடைத்த தகவல்களின்படி, அந்த முடிவுக்காக அவர் ஒருபோதும் வருத்தப்படவில்லை. அவரது பணியும் வாழ்க்கையும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள இளைய தலைமுறையினருக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)