You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குவைத்: பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த ஷேக் நவாப் அல்-சபா சக்திவாய்ந்த தலைவர் ஆனது எப்படி?
வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
குவைத் நாட்டை 263 ஆண்டுகளாக ஆண்டு வரும் சபா குடும்பத்தின் தொடர்ச்சியாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத். இவர் யார்? அவரது வரலாறு என்ன?
இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
ஷேக் நவாஃப் பிறப்பு
குவைத்தில், “அமைதியான அதே நேரம் தேவையான நேரத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பவர்,” என்று அழைக்கப்படும் சக்திமிக்க தலைவர்தான் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா.
கடந்த 1937ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி குவைத்தின் 10வது ஆட்சியாளரான ஷேக் அஹ்மத் அல்-ஜபர் அல்-சபாவுக்கு 5வது மகனாக பிறந்தவர் ஷேக் நவாஃப்.
இவரின் இளமைக் காலத்தில் குவைத்தில் உள்ள தாஸ்மன் அரண்மனையில் வளர்ந்த இவர் பள்ளிக்கல்வி மட்டுமே பெற்றவர்.
அரசு மற்றும் அரசியல் பொறுப்புகள்
இவர் அரசியல் பொறுப்புகளை வகிப்பதற்கு முன்னதாகவே மிக இளம் வயதிலேயே அரசாங்க ரீதியான பொறுப்புகளைக் கையாண்டவர்.
தனக்கு 25 வயதாகும்போது 1961ஆம் ஆண்டு ஹவாலி பிராந்தியத்தின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியில் 1978ஆம் ஆண்டு வரை இருந்தார் ஷேக் நவாஃப்.
மேலும் இரண்டு முறை உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சமூக விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சர், தேசிய காவல் படையின் துணைத் தலைவர் உள்ளிட்ட மூன்று அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.
கால வரிசைப்படி, 1988ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சர், 1991ஆம் ஆண்டு சமூக விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் இலாகாவின் பொறுப்பாளர், 1994ஆம் ஆண்டு துணை தேசிய பாதுகாப்பு தளபதி, 2003ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர், அதே ஆண்டு துணைப் பிரதமர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் இவர்.
அரசியல் ஆற்றல்
கடந்த 1990ஆம் ஆண்டில் குவைத் மீது இராக் போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்தபோதும், வளைகுடாப் போரின் தொடக்கத்திலும் ஷேக் நவாஃப்தான் குவைத்தின் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட்டார்.
பிறகு உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவரது சகோதரரின் ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது இவரின் மூன்றாடு கால ஆட்சி மிகவும் சொற்பமானது.
அதிகம் தன்னை பொதுவெளிகளில் வெளிப்படுத்தி கொள்ளாத இவரை அல்-சபா குடும்பமே ஒருமித்த கருத்துடன் குவைத்தின் தலைவராக தேர்வு செய்துள்ளது. குடும்பத்திற்குள்ளும் சரி, மக்கள் மத்தியிலும் சரி நற்பெயரை பெற்றவராகவே அறியப்படுகிறார் ஷேக் நவாஃப்.
குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகள் கொரோனா தாக்கத்தால் எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சி கண்டிருந்த சமயத்தில் குவைத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று தற்போது வரை அந்நாட்டை வழிநடத்தி வந்துள்ளார் அவர்.
எண்ணெய் வளம் மிக்க குவைத்
நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு குவைத். இதில் 60 சதவீதத்திற்கும் மேல் வெளிநாட்டு தொழிலாளர்கள்.
இருப்பினும் கல்ஃப் நாடுகள் வரிசையில் உச்சியில் இருக்கும் எண்ணெய் வளம் மிகுந்த செல்வ செழிப்பான நாடாக இருந்து வருகிறது குவைத்.
இதன் அரசியல் வரலாற்றில் வளைகுடா நாடுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளில் மத்தியஸ்தம் செய்வதில் தொடங்கிப் பல்வேறு சூழல்களில் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது குவைத்.
புதிய அமீர் அறிவிப்பு
தற்போது ஷேக் நவாஃப் மரணத்தைத் தொடர்ந்து குவைத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் நாட்டின் தலைவரின் மரணத்திற்குத் துக்கம் அனுசரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா புதிய அமீராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த புதிய அமீர்?
2020ம் ஆண்டு ஷேக் நவாஃப் குவைத்தின் புதிய அமீராக பொறுப்பேற்று கொண்ட சில நாட்கள் கழித்து புதிய பட்டத்து இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா.
அல்ஜசீரா செய்தி முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி, மறைந்த முன்னாள் அமீரின் சகோதரரான ஷேக் மெஷால், இங்கிலாந்தின் ஹெண்டன் போலீஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். குவைத்தின் தேசிய காவல்படையை சீர்திருத்த உதவியவர் என்று போற்றப்படுபவர்.
இவர் 2004 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புப் படையின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு 13 ஆண்டுகள் அரசு பாதுகாப்புத் தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போது முந்தைய அமீர் ஷேக் நவாஃப் மரணமடைந்ததை அடுத்து குவைத் அதிகார மட்டம் கூடி இவரை குவைத்தின் 17வது அமீராக அறிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)