You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கை இறந்தது தெரியாமல் சடலத்தை ஏந்திக்கொண்டு தத்தளித்த பெண் - தூத்துக்குடியில் நடந்த துயரம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
"அம்மாவை பாதுகாப்பாக முன்னே அனுப்பிவிட்டு, நான், தங்கை, அப்பா மழையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். திடீரென அதிகளவு வெள்ளம் பாயத் தொடங்கியது. எங்களை காப்பாற்ற முயன்ற அப்பாவை தண்ணீர் ஒரு பக்கம் இழுத்துச் சென்றது.
"நீரில் விழுந்த என் தங்கையை தூக்கி, தோள்களில் ஏந்திக் கொண்டு இரண்டரை மணிநேரம் மரக்கிளையை பிடித்தவாறு வெள்ளத்தில் நின்றிருந்தேன். அப்போது எனக்கு தெரியாது, நீரில் விழுந்த சில நிமிடங்களில் அவள் இறந்து விட்டாள் என்று," மேற்கொண்டு பேச முடியாமல் தவிக்கிறார் ஆன்சி.
ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது அப்பா அமலன், மற்றும் தங்கை அக்ஷிதாவை ஒரே சமயத்தில் இழந்துள்ளார் ஆன்சி.
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல இடங்கள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை எத்தனை உயிர்கள் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வெள்ள பாதிப்புகள் மற்றும் கள நிலவரங்களைத் தெரிந்துகொள்ள பிபிசி செய்திக் குழு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பயணித்து வருகிறது. அமலன் மற்றும் அவரது மகள் அக்ஷிதாவுக்கு என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அவர்களின் வீட்டிற்கு சென்றோம்.
'சில நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது'
தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் அமலன், எலெக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்சி, அக்ஷிதா என இரு மகள்கள். ஞாயிற்றுக் கிழமை இரவு தன் குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவர் முயற்சித்த போது தான் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கிறது.
நடந்தது என்னவென்று நம்மிடம் விவரித்தார் அமலனின் மூத்த மகள் ஆன்சி, "ஞாயிற்றுக் கிழமை இரவு, என்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்கள் தொலைபேசியில் அழைத்து, கனமழை பெய்யப் போகிறது, வெள்ளம் அதிகமாக வரும், உங்கள் வீடு இருக்கும் பகுதி தாழ்வான பகுதி, எனவே எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள் அக்கா என்று கூறினார்கள்," என்றார்.
"எனது மாணவர்களின் வீடு சற்று மேடான பகுதியில் உள்ளது. நான், தங்கை அக்ஷிதா, அப்பா மற்றும் அம்மா அனைவரும் பயத்தில் வீட்டைப் பூட்டாமல், எதுவும் எடுக்காமல் வேகமாக நடக்கத் தொடங்கினோம். அப்போது தெருக்களில் வெள்ளம் இல்லை," எனக் கூறுகிறார் ஆன்சி.
தொடர்ந்து பேசிய அவர், "அம்மா சற்று முன்னே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் பாயத் தொடங்கியது. என்ன நடக்கிறது என புரிவதற்குள் எங்களை வெள்ளம் இழுத்துச் சென்றது. அம்மா முன்னே சென்றதால் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஏறி நின்றுக் கொண்டார்," என்றார்.
"அப்பா எங்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முயன்றார், ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் வேறு பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டார்," என்றார்.
"எனது தங்கை நீரில் மூழ்கி விட்டாள். நான் அவளை ஒரு கையில் இழுத்து பிடித்துக் கொண்டு மறுகையால் ஒரு மரக்கிளையை பற்றிக்கொண்டேன்," என்று கூறிய ஆன்சி, தொடர்ந்து பேசினார்.
'இரண்டரை மணிநேரம் வெள்ளத்தில் நின்றிருந்தேன்'
"வீடுகளுக்கு மேலிருந்தவர்கள் தங்கையை மேலே தூக்கு எனக் கத்தினார்கள், மரக்கிளையை பற்றிக்கொண்டு கஷ்டப்பட்டு அவளைத் தூக்கி என் தோளின் மேல் போட்டுக்கொண்டேன். அதற்குள்ளாகவே அதிகளவு தண்ணீர் அவள் மூக்கில் ஏறிவிட்டது. மூன்று முறை அப்பாவின் அலறல் மட்டும் எனக்கு கேட்டது, ஆனால் அவரைக் காணவில்லை," நடந்ததை தொடர்ந்து கூற முடியாமல் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் ஆன்சி.
"இரண்டரை மணி நேரம் மரக்கிளையை பிடித்தவாறும், பேச்சு மூச்சின்றி கிடந்த என் தங்கையை தோள்களில் ஏந்திக்கொண்டும் வெள்ளத்தில் நின்றிருந்தேன். அம்மா ஒன்றும் செய்ய இயலாத நிலையில் கதறிக் கொண்டிருந்தார். வீடுகளுக்கு மேல் இருந்தவர்கள் சேலைகளை கயிறு போல கட்டி தூக்கிப் போட்டார்கள், அதைப் பற்றிக்கொண்டேன்."
"நீரில் இருந்து என்னையும் தங்கையையும் மேலே தூக்கினார்கள். அப்போது கூட எங்களுக்கு தெரியாது என் தங்கை இறந்து விட்டாள் என. யாருக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை, எந்த அவசர எண்களும் வேலை செய்யவில்லை. போலீஸ், ஆம்புலன்ஸ் என எந்த உதவியும் கிடைக்கவில்லை" என்கிறார் ஆன்சி.
"மூன்று நேரம் கழித்து ஒரு போட் வந்தது, அதில் ஏறி பிரதான சாலைக்கு சென்று, அங்கு வந்த ஒரு பால் வண்டியை மறித்து, தங்கையை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள் எனக் கூறினார்கள். அவள் நீரில் விழுந்து நான்கு மணிநேரம் ஆகியிருந்தது," என்று கண்ணீருடன் கூறினார் ஆன்சி.
இரண்டு நாட்களுக்கு பிறகு கிடைத்த தந்தையின் உடல்
அப்பாவின் உடல் இரண்டு நாட்களாக கிடைக்கவில்லை என்றும் பின்னர் அருகில் உள்ள இடத்தில் கண்டெக்கப்பட்டதாகவும் கூறுகிறார் ஆன்சி. ஆனால் வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால், உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அமலனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
"அப்பாவின் உடல் அங்கே கிடக்கிறது எனத் தெரிந்தும், இரண்டு நாட்களாக எந்த உதவியும் அரசிடமிருந்து வராமல் தவித்து போய்க் கிடந்தோம். பின்னர் இங்கிருந்தவர்களே அப்பாவின் உடலை மீட்டார்கள். எப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
"இன்று நான்காவது நாள், இன்னும் எனது அப்பா மற்றும் தங்கையின் உடலைத் தரவில்லை. ஒரேநாளில் குடும்பத்தில் இருவரை இழந்துவிட்டு நானும் அம்மாவும் நொறுங்கிப் போய் கிடக்கிறோம். தயவு செய்து அவர்களின் உடல்களை சீக்கிரமாக கொடுங்கள்," என கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார் ஆன்சி.
பிபிசி செய்திக் குழு முத்தம்மாள் காலனிக்கு சென்ற போது, அங்கிருந்த பல பகுதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது
இயல்பு நிலை திரும்ப பல நாட்களாகும்
திருநெல்வேலி, தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்கள் பலவும் இதேபோல மழை நீரால் சூழப்பட்டிருப்பதால், இந்தக் கிராமங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவின் ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் ஆறு பேர் புதன்கிழமையன்று பார்வையிட்டனர்.
தூத்துக்குடி நகரில் மழையின் பாதிப்பு நீடிப்பதால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி நகருக்கு ரயில் சேவையும் தூத்துக்குடிக்கு விமான சேவையும் துவங்கப்பட்டுவிட்டன என்றாலும் கூட, இந்தப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல நாட்கள் தேவைப்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)