You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்: ஆம் ஆத்மி vs பாஜக அரசியல் மோதல்
டெல்லி அரசின் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சத்யேந்திர ஜெயினுக்கு திகார் சிறையில் 'மசாஜ்' செய்யப்படும் இரண்டு காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சத்யேந்திர ஜெயின் பணமோசடி வழக்கில் மே 30ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டார்.
திகார் சிறையில் உள்ள சத்யேந்தர ஜெயின் அறையின் சிசிடிவி காட்சிகளில், சத்யேந்திர ஜெயின் படுக்கையில் படுத்துக்கொண்டு சில காகிதங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையும், ஒரு நபர் அவரது கால்களை பிடித்து மசாஜ் செய்வதையும் தெளிவாகப்பார்க்க முடிகிறது.
சத்யேந்திர ஜெயினை விஐபி போல நடத்தியதற்காக டெல்லி திகார் சிறையின் கண்காணிப்பாளர் இந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சத்யேந்திர ஜெயினின் வீடியோ வெளியானதை அடுத்து பாஜக, ஆம் ஆத்மி கட்சியை தாக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு பிசியோதெரபி செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தபோதிலும் இந்தத் தாக்குதல் தொடர்கிறது.
திகார் சிறையை மசாஜ் நிலையமாக கேஜ்ரிவால் மாற்றியுள்ளார் என்று பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறினார்.
"அரவிந்த் கேஜ்ரிவால் திகாரை மசாஜ் பார்லராக மாற்றியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் சத்யேந்தர ஜெயின், டெல்லி முதல்வருக்கு நெருக்கமானவராக இருப்பதால் அவருக்கு மசாஜ் செய்பவர் கிடைப்பார். சிறை விதிகளை மீறி அவருக்கு மசாஜ் சேவை அளிக்கப்படுகிறது. திகார் சிறையின் நிர்வாகம் டெல்லி அரசின் கீழ் உள்ளது. இவர்கள் ஊழல் அரசியலை மாற்ற வந்தார்கள்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியாவும், டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாவும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
ஆம் ஆத்மி கட்சி மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை கெளரவ் பாட்டியா அப்போது முன்வைத்தார். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் அவர் தாக்கிப்பேசினார்.
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இது ஆம் ஆத்மி கட்சியல்ல, ’பெயர் மோசமான பணக்கட்சி’ என்றே சொல்லவேண்டும் என்றார் கௌரவ் பாட்டியா.
“இன்று சத்யேந்திர ஜெயின் சிறையில் உள்ளார். பலத்த பாதுகாப்பையும் எல்லா விதிமுறைகளையும் மீறி, சிறையில் உள்ள ஊழல் அமைச்சருக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படுகிறது. சிறையில் கைதிக்கு மசாஜ் செய்யப்படுகிறது. சிறையில் இருக்கும் ஊழல்வாதியும், நேர்மையற்றவருமான அந்த அமைச்சருக்கு சிறையில் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. கேஜ்ரிவால் அவர்களே, வி.வி.ஐ.பி. கலாசாரத்தை ஒழிப்பேன் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பல்வேறு வசதிகளை கொடுக்கிறீர்கள். அது ஏன்?” என்று கெளரவ் பாட்டியா வினவினார்.
ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஃஸாத் பூனாவல்லா, ”சத்யேந்தர ஜெயின் சிறையில் மகிழ்ச்சியாக இருக்கிறார், அவர் தண்டனையை அனுபவிக்கவில்லை,” என்றார்.
"தண்டனைக்கு பதிலாக சத்யேந்திர ஜெயினுக்கு வி.வி.ஐ.பி. வசதி கிடைக்கிறது. திகார் சிறையில் மசாஜ்? ஐந்து மாதங்களாக ஜாமீன் கிடைக்காத நிலையில் பணமோசடி செய்த அவருக்கு தலை மசாஜ் கிடைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி சிறை விதிகளை மீறுகிறது. மிரட்டி பணம் பறிப்பதற்கும் மசாஜ் செய்வதற்கும் பதவி தவறாக பயன்படுத்தப்படுகிறது. நன்றி கேஜ்ரிவால்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஏமாற்று பேர்வழி - காங்கிரஸ்
சத்யேந்திர ஜெயின் வீடியோ குறித்து காங்கிரஸ் தலைவர் அல்கா லாம்பாவும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ட்விட்டரில், "டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஏமாற்று பேர்வழிக்கு அளிக்கப்படும் விவிஐபி வசதிகள் இவை,” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் அந்த வீடியோவை வெளியிட்ட அல்கா லாம்பா, ஆம் ஆத்மி கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சிறையில் ஐந்து நட்சத்திர வசதிகளை சத்யேந்திர ஜெயின் பெற்று வருகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
கேஜ்ரிவால் உடனடியாக சத்யேந்திர ஜெயினை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மனீஷ் சிசோடியா கொடுத்த பதிலடி
பாஜக கடந்த 6 மாதங்களாக சதி செய்து சத்யேந்தர ஜெயினை பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
”பிரதமராக இருந்தாலும் சரி, சிறையில் இருக்கும் நபராக இருந்தாலும் சரி, யாருக்குமே உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சிகிச்சை தேவைப்படலாம். ஒருவரின் உடல்நலம் குறித்து பாஜக அரசியல் செய்வது மிகவும் மோசமான செயல்,” என்று அவர் கூறினார்.
”சத்யேந்திர ஜெயின் சிறையில் கீழே விழுந்துவிட்டார். அதனால் அவரது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அறுவைசிகிச்சைக்குப் பிறகு nerve block பொருத்தப்பட்டது. அவருக்கு முறையான பிசியோதெரபி தேவை என்று மருத்துவர்கள் அறிக்கையில் எழுதியுள்ளனர்,” என்று மனீஷ் சிசோடியா தெரிவித்தார்.
"பாஜக, தில்லி மாநகராட்சி மற்றும் குஜராத் தேர்தல்களில் தோல்வி அடையப்போகிறது. அதனால் சத்யேந்திர ஜெயினின் நோயை கேலி செய்து தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது. இதைவிட மோசமான செயல் வேறு எதுவுமே இருக்காது. முதலில் சத்யேந்திர ஜெயின் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டார்கள். அவரை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்துள்ளார்கள். எல்லா தந்திரங்களும் தோல்வியடைந்த நிலையில் தற்போது சிகிச்சை அளிக்கும் வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் எந்த சிறையின் வீடியோவையும் நீங்கள் பாருங்கள். நோய்வாய்ப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என சட்டத்தில் விதிமுறை உள்ளது என்று டெல்லி துணை முதல்வர் கூறினார். ”அந்த வீடியோவை வெளியிடக் கூடாது என்று அமலாக்க இயக்குநரகத்துக்ககு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பாஜகவின் சதியால் அமலாக்க இயக்குநரகம் வீடியோவை கசியவிட்டுள்ளது. இந்த வீடியோ சட்டவிரோதமான முறையில் கசிந்துள்ளது,” என்று மனீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை இயக்குநரகம் நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைப்பதாக கடந்த விசாரணையின்போது குற்றம்சாட்டியிருந்தார்.
"அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயினின் கால்களுக்கு மசாஜ் செய்கிறார்கள். ’சந்திப்பு நேரம்’ இல்லாத சமயத்தில் அவர்கள் காணப்பட்டனர். ஜெயினுக்கு சிறப்பு உணவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டது," என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
அமலாக்க இயக்குநரக வழக்கறிஞர் சத்யேந்திர ஜெயினின் சில வீடியோக்களையும் நீதிமன்றத்திடம் அளித்தார். இந்த வீடியோக்களை அமலாக்கத்துறையிடம் இருந்து எடுத்து பாஜக வெளியிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சத்யேந்திர ஜெயின் விவகாரம் என்ன?
டெல்லியில் சத்யேந்திர ஜெயின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய பிறகு, மே 30 ஆம் தேதியன்று அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
டெல்லியின் உள்துறை மற்றும் சுகாதாரத் துறையைத் தவிர, எரிசக்தி, பொதுப்பணித் துறை, தொழில்துறை, நகர்ப்புற வளர்ச்சி, வெள்ளம், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளம் போன்ற துறைகளின் பொறுப்பும் சத்யேந்திர ஜெயினிடம் உள்ளது.
2017 ஆகஸ்ட் 25ஆம் தேதி, சத்யேந்திர ஜெயின் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை சிபிஐ பதிவு செய்தது. இந்த எப்ஐஆரின் அடிப்படையில் ஜெயின் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. 2018ஆம் ஆண்டில், இந்த வழக்கு தொடர்பாக ED அவரிடம் விசாரணையும் நடத்தியது.
சத்யேந்திர ஜெயின் நான்கு நிறுவனங்களில் பங்குகள் வாங்குவதற்காக முதலீடு செய்த பணம் எங்கிருந்து வந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை என்று அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்