You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் -ஆறு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியின் மெஹ்ரோலி பகுதியில் நடந்த கொலை வழக்கில் துப்பு துலக்கப்பட்டுவிட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்ததான குற்றச்சாட்டின்பேரில் அஃப்தாப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 18 ஆம் தேதி அஃப்தாப் தனது லின் இன் பார்ட்னரான ஷ்ரத்தாவை கொன்றுவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வெவ்வேறு இடங்களில் வீசியதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப்பும் , ஷ்ரத்தாவும் மும்பையில் வேலை செய்யும் போது நெருக்கமானார்கள். அவர்கள் இருவரும் காதலித்தனர். ஆனால் இந்த உறவு குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் அந்தப்பெண்ணின் குடும்பம் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் கோபம் காரணமாக இருவரும் டெல்லி வந்து சத்தர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா, அஃப்தாப்பை வற்புறுத்தத் தொடங்கியதால், அவர்களுக்குள் தகராறு அதிகரிக்கத் தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த மே 18ம் தேதி திருமணம் தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் அஃப்தாப் அந்தப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார்.
“கொலை செய்த பிறகு தனது காதலியின் உடலை பல துண்டுகளாக வெட்டியதாக அஃப்தாப் வாக்குமூலம் அளித்துள்ளார். உடலில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க, புதிய பெரிய சைஸ் ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி அதில் சடலத்தின் துண்டுகளை வைத்துவிட்டார்.
பிறகு படிப்படியாக இரவு நேரத்தில் உடலின் துண்டுகளை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காடுகளில் வீசினார்,”என்று டெல்லி காவல்துறையின் கூடுதல் டிசிபி (தெற்கு) அங்கித் செளஹான் கூறினார்.
எப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது என்ன?
பிபிசி மராத்தி சேவையின் செய்தியாளர் மயங்க் பாகவத் காவல்துறையிடம் இருந்து பெற்ற எப்ஐஆர் நகலில், இது தொடர்பான பல முக்கிய விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஷ்ரத்தாவின் தந்தை போலீசில் அளித்த புகாரில், தனது மனைவியும் தானும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும், ஷ்ரத்தா தனது தாயுடன் மகாராஷ்டிராவின் பால்காரில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவரது மகள் ஷ்ரத்தா 2018 ஆம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார், அங்கு அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞரை சந்தித்தார்.
"2019 ஆம் ஆண்டில், ஷ்ரத்தா தனது தாயிடம் அஃப்தாப்புடன் லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவதாக கூறினார். ஆனால் நாங்கள் வேறு மதத்திலும், வேறு சாதியிலும் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதால் என் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்தார். நாங்கள் மறுத்தபோது தனக்கு 25 வயது ஆகிவிட்டதாகவும், சொந்த முடிவுகளை எடுக்க தனக்கு உரிமை இருப்பதாகவும் என் மகள் கூறினார்.”
தாயுடன் தகராறு செய்த ஷ்ரத்தா வீட்டை விட்டு வெளியேறி அஃப்தாப்புடன் வாழத் தொடங்கினார்.
“ஷ்ரத்தாவும் அஃப்தாப்பும் நயா கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்து பின்னர் வசாய் பகுதியில் வசிக்கத் தொடங்கினர். என் மகள் இடையிடையே தன் அம்மாவை அழைத்து அஃப்தாப் அடிப்பதாக கூறினாள்,”என்று எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
ஷ்ரத்தா தன்னை சந்திக்க வந்ததாகவும், தன் பிரச்னையைச் சொன்னதாகவும் தந்தை கூறுகிறார். அதன் பிறகு அவர் அஃப்தாப்பை விட்டுவிடுமாறு ஷ்ரத்தாவிடம் கூறினார். ஆனால் அஃப்தாப் மன்னிப்புக்கேட்டதால் ஷ்ரத்தா மீண்டும் அவருடன் சென்றுவிட்டார்.
ஷ்ரத்தா தன் அறிவுரையை கேட்டு நடக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக ஷ்ரத்தாவின் தந்தை போலீசில் தெரிவித்தார். ஆனால் செப்டம்பரில் ஷ்ரத்தாவின் தோழி ஒருவர் தனது மகளுக்கு போன் செய்து, ஷ்ரத்தாவின் போன் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஷ்ரத்தா பற்றிய விவரம் எதுவும் கிடைக்காததால், அவரது தந்தை மகாராஷ்டிராவில் உள்ள மாணிக்பூர் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார். எஃப்ஐஆரில், அஃப்தாப் உடனான ஷ்ரத்தாவின் உறவையும் குறிப்பிட்டு, ஷ்ரத்தா காணாமல் போனதில் அஃப்தாப்பின் பங்கு இருக்கலாம் என்று தான் அஞ்சுவதாகவும் கூறியுளார்.
தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவக்கி அஃப்தாப்பை தேடி வந்தனர்.
பின்னர் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். திருமணம் தொடர்பாக தங்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும், கோபத்தில் தான் கொலை செய்ததாகவும் விசாரணையின் போது, அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்தனர்
“மகளை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் காணாமல் போய்விட்டதாக உணர்ந்த தந்தை, மும்பை காவல்துறையில் புகார் அளித்தார். ஷ்ரத்தா கடைசியாக இருந்த இடம் டெல்லி என்று மும்பை போலீசாரின் விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள மெஹ்ரோலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,”என்று டெல்லி காவல்துறையின் கூடுதல் டிசிபி (தெற்கு) அங்கித் செளஹான் தெரிவித்தார்.
இருவரும் ஒரு டேட்டிங் ஆப் மூலம் சந்தித்தது விசாரணையின்போது தெரிய வந்தது. மும்பையில் இருவரும் ஒன்றாகவே வசித்து வந்தனர். டெல்லியிலும் அது தொடர்ந்தது. டெல்லியில் வசிக்கும் போது இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பல சமயங்களில் இந்த சண்டை கைகலப்பில் முடிந்தது.
எல்லா டிஜிட்டல் மற்றும் அறிவியல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு, அவை ஆராயப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்., உடல் துண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாகக்கூறப்படும் குளிர்சாதன பெட்டியையும் போலீசார் மீட்டுள்ளனர்.
அஃப்தாப் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், மெஹ்ரோலி காட்டில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஷ்ரத்தா கொலை வழக்கில் போலீசார் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு ஷ்ரத்தாவின் கைபேசியை அஃப்தாப் தூக்கி எறிந்துவிட்டார். அதை மீட்கும் பொருட்டு மொபைல் போன் கடைசியாக செயல்பட்ட இடத்தை கண்டுபிடித்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மே மாதம் ஷ்ரத்தாவை கொன்ற பிறகும், ஜூன் மாதம் வரை ஷ்ரத்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அஃப்தாப் பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் ஷ்ரத்தா உயிருடன் இருப்பதாக அனைவரையும் நம்பவைக்கவே இதை அவர் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஷ்ரதாவின் உடலை துண்டுகளாக்குவதற்கு அஃப்தாப் பயன்படுத்திய ஆயுதத்தை இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அஃப்தாப் உடலின் துண்டுகளை வீசிய டெல்லியில் உள்ள காட்டிற்கு, செவ்வாய்கிழமையன்று போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்