மானம் காத்த ரஹானே, ஷர்துல்: இந்திய பவுலர்களின் பதிலடி: வலுவான முன்னிலைக்கு நகருமா ஆஸ்திரேலியா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

லண்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், 3வது நாளான நேற்று, அஜின்க்யா ரஹானே, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் துணிச்சலான போராட்ட அரை சதம் இந்திய அணியைப் பெரும் சரிவிலிருந்து காப்பாற்றியது.

ரஹானே சதத்தைத் தவறவிட்டு 89 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இந்திய ரசிகர்களின் ஹீரோ அவர்தான். இந்திய அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களத்துக்கு வந்த ரஹானே, தனது அனுபவமான பேட்டிங் திறமை, நிதானம், பொறுமை ஆகியவற்றை வெளிப்படுத்தி, கிளாசிக்கான பேட்டிங்கை வெளிப்படுத்திவிட்டார்.

ரஹானேவுக்கு துணையாக பேட் செய்த ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து, மீண்டும் ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்துவிட்டார். இருவரின் கூட்டணியில் 109 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய சரிவிலிருந்து மீண்டது.

இருவரும் பேட்டிங் செய்ய வந்தபோது இந்திய அணி 318 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஆனால் இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் ரன் பற்றாக்குறை 173 ஆகக் குறைந்தது. இருவரும் ஆடாமல் இருந்திருந்தால் இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருண்டு பாலோ-ஆன் பெற்றிருக்கும்.

இந்திய பந்துவீச்சாளர்கள் பதிலடி

இந்திய அணியின் பந்துவீச்சு முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தைக் கொடுத்தது.

முதல் இன்னிங்ஸில் லைன், லென்த்தையும், பவுன்ஸரையும், ஷார்ட் பாலையும் துல்லியமாக வீச சிரமப்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 2வது இன்னிங்ஸில் அனாசயமாக வீசி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை 2வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் சுருட்டி, இந்திய அணிக்கு 400 ரன்களுக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், அதை எளிதாக இந்திய அணி சேஸிங் செய்யவும் வாய்ப்பு உண்டு. இந்திய பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சைப் பார்க்கும்போது எது வேண்டுமானாலும் கிரிக்கெட்டில் நடக்கலாம்.

அதேநேரம், இந்திய அணிக்கு 400 ரன்களுக்கு மேல் இலக்கு உயரும்போது, ஆட்டம் எந்தக் கோணத்திலும் பயணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

கோட்டைவிட்ட ஆஸ்திரேலய வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் ஏராளமான ஃபீல்டிங் தவறுகளையும், கேட்சுகளையும் கோட்டைவிட்டனர்.

கேப்டன் கம்மின்ஸ் மட்டும் 6 நோபால்களை இதுவரை வீசி அதில் 3 நோபால்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தவறியது. 3வது நாள் ஆட்டத்தில் மட்டும் லட்டு போலக் கிடைத்த 3 கேட்சுகளை ஆஸ்திரேலிய வீரர்கள் கோட்டைவிட்டனர்.

அதிர்ஷ்டக்கார ரஹானே, தாக்கூர்

இரண்டாவது நாள் ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பந்து ரஹானே பேட்டில் பட்டு கேட்ச் ஆகிய நிலையில், அதற்கு நடுவர் அவுட் வழங்கினார். ரஹானே டிஆர்எஸ் அப்பீல் செய்யவே, மூன்றாவது நடுவர் நோபால் என அறிவித்தார்.

3வது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூருக்கும் அதிர்ஷ்டம் அடித்தது.

கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷர்துல் தாக்கூர் கால் கேப்பில் வாங்கியதை களநடுவர் அவுட் என அறிவித்தார். ஆனால், தாக்கூரின் அப்பீலில் கம்மின்ஸ் நோபால் வீசியது தெரிய வந்தது.

இதனால் நடுவர் வழங்கிய முடிவு ரத்து செய்யப்பட்டது. 2வது நாளில் ரஹானேவுக்கும், 3வது நாளில் தாக்கூருக்கும் அதிர்ஷ்டம் அடித்தது.

296 ரன்கள் முன்னிலை

மூன்றாவவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 173 ரன்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில், 44 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்து, 296 ரன்கள் முன்னிலையுன் ஆடி வருகிறது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

ரஹானேவும் சதம் சென்டிமென்ட்டும்

முதல் இன்னிங்ஸில் ரஹானே 89 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் சதத்தைத் தவறவிட்டாலும் நிஜ ஹீரோவாக ரசிகர்களிடம் உருவாகியுள்ளார்.

ஆனால், ரஹானே சதத்துக்கும், இந்திய அணி வெற்றிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இதுவரை ரஹானே 12 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். அதில் ரஹானே 9 முறை சதம் அடித்தபோதெல்லாம் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. மூன்று முறை ஆட்டத்தை டிரா செய்துள்ளது.

ஆதலால், ரஹானே 2வது இன்னிங்ஸில் சதம் அடித்தால் நிச்சயம் வெற்றி இந்தியாவின் பக்கம்தான் என்று சென்டிமென்ட்டாக ரசிகர்கள் உணர்கிறார்கள்.

இது தவிர ரஹானே நேற்றைய ஆட்டத்தில் 69 ரன்களை எட்டியபோது, டெஸ்ட் அரங்கில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய எலைட் வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்தில் ஒரு இந்திய பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்கவில்லை. முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரஹானே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

டீவில்லியர்ஸ் பாராட்டு

ரஹானேவின் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்த தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

வர்ணனையாளர் ஹர்சா போக்லேவுக்கு பதில் அளித்து ட்வீட் செய்த டி வில்லியர்ஸ், “ரஹானே இவ்வளவு அற்புதமாக பேட் செய்து நான் பார்த்ததில்லை. பந்துகளை தாமதாக அடிக்கும் அவரின் நுணுக்கம், பேட்டிங்கில் அவரின் நுட்பம் பிரமாதமாக இருக்கிறது” எனப் பாராட்டியுள்ளார்.

பிராட்மேன் சாதனையை சமன் செய்த தாக்கூர்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள், ஷார்ட்பாலில் கொடுத்த அடிகளை உடலில் வாங்கிக்கொண்டு அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை அரைசதம் அடித்த வீரர் எனும் சாதனையை ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஷர்துல் தாக்கூர் பகிர்ந்து கொண்டார்.

இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் இரு இன்னிங்ஸ்களிலும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

அதைத்தொடர்ந்து 2வது முறையாக ஓவல் மைதானத்தில் களமிறங்கிய ஷர்துல் 3வது முறையாக அரைசதம் அடித்துள்ளார். டான் பிராட்மேனுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்த பேட்ஸ்மேன்கள் யாருமில்லை என்ற நிலையில் இப்போது 2வது பேட்ஸ்மேனாக ஷர்துல் தாக்கூர் தன் பெயரையும் பதிவு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

ரஹானே, ஷர்துல் போராட்டம்

ரஹானே 29 ரன்னிலும், பரத் 5 ரன்னிலும் 3வது நாள் ஆட்டத்தை நேற்று தொடங்கினர். போலந்து வீசிய 2வது பந்திலேயே பரத் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து, ஷர்துல் தாக்கூர் வந்து, ரஹானேவுடன் சேர்ந்தார்.

போலந்து, கம்மின்ஸ் இருவரும் ஷார்ட்பால், பவுன்ஸர்களை வீசி தாக்கூரையும், ரஹானேவையும் ‘டார்ச்சர்’ செய்தனர். ஆனால், இருவரும் எந்தவிதமான சலனமும் இல்லாமல் பேட் செய்து, மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பினர். அதிலும் கம்மின்ஸ் வீசிய பந்து தாக்கூருக்கு கையில் தாக்கி வலியால் துடித்தார். பின்னர் வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக்கொண்டு, பேட் செய்ய வந்தார்.

நிதானமாக ஆடிய ரஹானே, கம்மின்ஸ் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். போலந்து, கம்மின்ஸின் மிரட்டல் பந்துவீச்சுக்குப் பழகியபின் ரஹானே, தாக்கூர் இருவரும் அநாசயமாக ஆடத் தொடங்கி ரன்களை சேர்த்தனர். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்திருந்தது.

ரஹானே சதம் அடிக்க 11 ரன்கள் தேவைப்பட்டது. உணவு இடைவேளைக்குப்பின் பேட் செய்த வந்த இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரஹானே 89 ரன் சேர்த்திருந்தபோது, கம்மின்ஸ் பந்துவீச்சில் 3வது ஸ்லிப்பில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடிப்பதற்குள் ஆஸ்திரேலிய வீரர்கள் 3 முறை அவரது கேட்சை கோட்டைவிட்டனர். அதன்பின் இந்திய அணியின் கடைசிவரிசை வீரர்கள் மளமளவென விக்கெட் இழக்கவே, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

ஆரம்பமே அதிர்ச்சி

ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்தியது. வார்னர், உஸ்மான் கவாஜா ஆட்டத்தைத் தொடங்கினர்.

முதல் இன்னிங்ஸை போல் இல்லாமல் 2வது இன்னிங்ஸில் சிராஜ், ஷமி, உமேஷ் ஆகியோர் லைன் லெத்தில் துல்லியமாக வீசினர்.

அதிலும் சிராஜ்ஜின் மிரட்டல் வேகப்பந்துவீச்சு, வாப்லிங் சீமிங், லைன் லென்த் வார்னருக்கு பெரிய குடைச்சலைக் கொடுத்தது. சிராஜ் ஓவரை விளையாட சிரமப்பட்ட வார்னர் ஒரு ரன்னில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் துணிச்சலான பந்துவீச்சுக்குப் பலன் கிடைத்தது.

கொஞ்சநேரம்கூட தூங்கவிடமாட்டிங்களே!

வார்னர், உஸ்மான் கவாஜா சிறிது நேரம் தாக்குப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில், லாபுஷேன் கால்காப்புகளை கட்டிக்கொண்டு தாயாராகிய நிலையிலேயே பெவிலியனில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.

ஆனால், ஆட்டம் ஆரம்பித்த 4வது ஓவரிலேயே அரங்கில் பலத்த கரவொலி கிளம்பி, வார்னர் விக்கெட்டை இழந்தார். இதனால், தூங்கிக்கொண்டிருந்த லாபுஷேனை எழுப்பிய சக வீரர்கள் அவரை களத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கெனவே தாக்கூர், சிராஜ் பந்துகளில் கையில் அடி வாங்கியதை உணர்ந்த லாபுஷேன், இந்த முறை கவனமாகப் பந்தை எதிர்கொண்டார். இருமுறை பேட்டையும் தவறவிட்டார்.

உஸ்மான் கவாஜாவுக்கு பந்தை விலக்கி வீசி பொறுமையைச் சோதித்தார் உமேஷ் யாதவ். ஆனால் திடீரென ஒரு பந்தை கவாஜாவுக்கு நெருக்கமாக வீச, பந்து பேட்டில் பட்டு கீப்பர் பரத்திடம் தஞ்சமடைந்தது. கவாஜா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

ஸ்மித், ஹெட் நிலைக்கவில்லை

இந்திய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுக்க, 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்குத் தொல்லை கொடுத்த ஸ்மித், டிராவிஸ் ஹெட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் 2வது இன்னிங்ஸில் நிலைக்கவிடவில்லை. முதல் இன்னிங்ஸை போல் இல்லாமல் ஸ்மித் வேகமாக ரன் சேர்ப்பதில் குறியாக இருந்தார். முதல் 7 பந்துகளில் 12 ரன்களை சேர்த்து ரன் சேர்ப்பை வேகப்படுத்தினார்.

ஆனால், ஸ்மித்தின் வேகம் அவரை விக்கெட் இழக்க வைத்தது. ஜடேஜா பந்துவீச்சில் ஸ்மித் பெரிய ஷாட்டை ஆட முயன்றபோது பாயின்ட் திசையில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக 2 சிக்ஸர்களை விளாசி ரன்களை சேர்த்தாலும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய ஸ்லோ பாலை கவனிக்காமல் அவரிடமே கேட்ச் கொடுத்து ஹெட் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார். லாபுஷேன் 41 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அமைதியான ஹீரோ ரஹானே

பேட்டிங்கில் எந்த அற்புதங்களை நிகழ்த்தினாலும், சதம் அடித்தாலும் ஆர்பாட்டமில்லாமல் அமைதியான போக்கோடு செல்லக்கூடியவர் ரஹானே.

இந்திய அணியில் ராகுல் திராவிட் சென்றபின், “இந்திய அணியின் அடுத்த சுவர்” என்று ரசிகர்களால் ரஹானே வர்ணிக்கப்பட்டார். ரஹானேவின் பேட்டிங் ஸ்டைல், கவர் ட்ரைவ் ஷாட் போன்றவை டிராவிட்டை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். ஆனால், சிஎஸ்கேவில் ரஹானேவின் விஸ்வரூபம் வேறு விதத்தில் இருந்தது.

டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை ரஹானேவின் பேட்டிங், மரபுவழி ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த ஒழுக்கத்துடன் ஷாட்கள் இருக்கும். தவறான ஷாட்களை ஆடாமல்தான் ரஹானேவின் பெரும்பகுதி பேட்டிங் அமைந்திருக்கும்.

ரஹானே தனது பேட்டிங்கால் சில நேரங்களில் பெரிய அற்புதங்களை களத்தில் நிகழ்த்திவிட்டு ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்துவிடுவார். அது 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக டெஸ்ட் தொடர் விளையாட பயணம் செய்திருந்தது. கேப்டன் கோலி, மனைவிக்குப் பிரசவம் ஏற்படப் போகிறது எனக் கூறிவிட்டு முதல் டெஸ்ட் போட்டியோடு தாயகம் சென்றுவிட்டார். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான தோல்வியுடன் பெரிய அவமானப்பட்டது.

இரண்டாவது போட்டியிலிருந்து ரஹானே கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக அணியை வழிநடத்தி 2-1 என்ற கணக்கில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று கொடுத்தார். மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்டில் ரஹானே அடித்த சதம் வரலாற்றுச் சிறப்புடையது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

பிரிஸ்பேனில் ரிஷப் பந்தின் ஆட்டம் காரணமாக இந்திய அணியால் தொடரைக் கைப்பற்ற முடிந்தது. அந்த வெற்றியை ஒவ்வோர் இந்தியரும் கொண்டாடினர். அப்போது ரஹானே அமைதியாக பவுண்டரிக்கு அப்பால் நின்று வேடிக்கைப் பார்த்தார். திறமையானவர்கள் சத்தமிடமாட்டார்கள், அவர்களின் செயல்தான் அரங்கில் அதியசங்களை நிகழ்த்தும் என்பதைப் போல் ரஹானேயின் கேப்டன்ஷிப்பும், பேட்டிங்கும் அமைந்திருந்தது.

தென்னாப்பிரிக்க பயணம் மேற்கொண்ட 2018ஆம் ஆண்டின்போது இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி, 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானேவை களமிறக்காமல் நிராகரித்தார். இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதுகுறித்து கோலியை அப்போது பல்வேறு முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், துணை கேப்டனாக இருந்தாலும், தனக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லையே என்ற சலனத்தை ரஹானே சிறிதும் வெளிப்படுத்தவில்லை. மூன்றாவது டெஸ்டில் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தென்னாப்பிரிக்காவில் எகிறும் ஆடுகளங்களில் அந்நாட்டு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர்.

அப்போது, ரஹானே தனது கிளாசிக்கான பேட்டிங்கால் 48 ரன்களைக் குவித்து இந்திய அணியை வெல்ல வைத்தார். ரஹானே குவித்த 48 ரன்கள்தான் இந்திய அணியில் பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

4வது நாளில் என்ன நடக்கும்

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வேகமாக ரன்களை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியைக் கையாண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.

இதேபோக்கில் 2வது இன்னிங்ஸை ஆடினால் 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்தாலும் வியப்பேதும் இல்லை.

இதில் லாபுஷேன், அலெக்ஸ் காரே, கேமரூன் க்ரீன் மட்டுமே தொல்லை தரக்கூடிய பேட்ஸ்மேன்கள். இவர்களை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் இந்திய அணியின் கைக்குள் ஆட்டம் வந்துவிடும்.

நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளைக்குப் பிறகு வரும் தேநீர் இடைவேளை வரை பேட்டிங் செய்துவிட்டு, இந்திய அணிக்கு 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து டிக்ளேர் செய்யவும் வாய்ப்புள்ளது.

பெரிய இலக்கை நிர்ணயிக்க, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முயல்வார்கள். அப்போது விரைவாக விக்கெட்டுகளை இழக்கவும் வாய்ப்புள்ளது. இரண்டாவது இன்னிங்ஸை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வைத்துவிட்டால், ஆட்டத்தின் முடிவை சாதகமாக மாற்றவும் வாய்ப்புள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: