மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதம்: தமிழ்நாடு அரசு எதிர்ப்பது ஏன்? - முழு பின்னணி

பட மூலாதாரம், MK Stalin FB/Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மேகேதாட்டு அணை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு. இது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தின் பின்னணி என்ன?
கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்த பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு ஓய்ந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், தமிழக எல்லையில் இருந்து நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதால், இரு மாநிலங்களிலும் விவசாயிகள், அரசியல்வாதிகளிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை பிரச்னையின் பின்னணி என்ன?
மேகேதாட்டு என்பதற்கு கன்னடத்தில் 'ஆடு தாண்டக்கூடிய' என்று பொருள். கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் இருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மேகேதாட்டு.
இங்கு ஓர் அணையைக் கட்டி, பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதோடு, மின்சார உற்பத்தியிலும் ஈடுபட விரும்புகிறது கர்நாடகா.
மேகேதாட்டுவில் அணை கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்முதலாக 1948இல் முன்வைக்கப்பட்டது. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால், காவிரி நீரை எப்படி பிரித்துக்கொள்வது என்பதில் கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் 70களில் மோதல் மூண்ட நிலையில் மேகேதாட்டு விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அதற்குப் பிறகு தேசிய நீர் மின் கழகம், காவிரியின் குறுக்கே நான்கு மின் திட்டங்களை உருவாக்க ஒரு யோசனையை முன்வைத்தது. அதன்படி மேகேதாட்டுவில் 400 மெகாவாட்டிற்கும் சிவசமுத்திரத்தில் 345 மெகாவாட்டிற்கும் ராசிமணலில் 360 மெகாவாட்டிற்கும் ஒகேனக்கலில் 120 மெகாவாட்டிற்கும் நீர்மின் நிலையங்களை உருவாக்கலாம் எனப் பேசப்பட்டது.
ஆனால், இந்த மின் திட்டங்களை உருவாக்குவதிலும் இரு மாநிலங்களுக்கு இடையில் எந்தக் கருத்து ஒற்றுமையும் ஏற்படவில்லை. ஆகவே, சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் மேகேதாட்டு அணை விவகாரத்தை கர்நாடகா கையில் எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி மேகேதாட்டுவில் 9,000 கோடி ரூபாய் செலவில் ஓர் அணை கட்டப்படும். இதில் 67.16 டிஎம்சி நீர் தேக்கப்படும். இந்த அணை கட்டப்படுவதால் 6,996 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கும்.
இந்தத் திட்டத்தில் சேகரிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு பெங்களூருவுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப் போவதாக கர்நாடக அரசு கூறுகிறது.
இந்த அணையில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒரு நீர் மின் நிலையமும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணையைக் கட்டினால், நடுவர் மன்றம் அளித்த ஆணையில் உள்ளதுபோல ஒவ்வொரு மாதமும் அணையைத் திறந்து நீரைச் சரியாக வழங்க முடியும் எனவும் கர்நாடகா கூறுகிறது.
இந்தத் திட்டத்திற்கு Mekedatu Balancing Reservoir cum Drinking Water Project என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என கர்நாடக மாநிலத்தின் இரு அவைகளும் கடந்த ஆண்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றின. இதற்கு கடந்த ஆண்டு மே 30ஆம் தேதியன்று கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, 'நம்ம நீரு, நம்ம ஹக்கு' (நமது நீர், நமது உரிமை) என்ற கோஷத்தை முன்வைத்து டி.கே.சிவக்குமார் தலைமையில் பெங்களூருவிலிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதிவரை 10 நாட்கள், பல ஊர்கள் வழியாகச் சென்று 19ஆம் தேதியன்று மேகேதாட்டுவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்குப் பிறகு 2022 -23ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் பாஜக அரசு ரூ.1000 கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில்தான் புதிய அரசு அமைந்த பிறகு, டி.கே. சிவகுமார் இந்தத் திட்டத்தில் வேகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
காவிரி நீர் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1990இல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 1991இல் தனது இடைக்கால உத்தரவை வழங்கியது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு காவிரி மூலம் 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி இறுதி உத்தரவு வழங்கப்பட்டது.
நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய அந்த இறுதி உத்தரவில் காவிரியின் மொத்த நீர் 740 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மொத்த நீரில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டது. ஆனால், அந்த 419 டிஎம்சியில், கர்நாடக மாநிலம் வழங்க வேண்டியது 192 டிஎம்சி நீர் மட்டும்தான். மீதமுள்ள 227 டிஎம்சி நீரானது தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியது.
தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டிஎம்சியை புதுவைக்குத் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த இறுதி ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீர், 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. இதற்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டங்கள் கட்டப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீரின் அளவு மாறக்கூடாது எனக் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் இதில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.
இதைச் சுட்டிக்காட்டும் கர்நாடக அரசு, தமிழ்நாட்டிலிருந்து பெருமளவு காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும் மேகேதாட்டுவில் அணையைக் கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் தடுக்கப்படும் என்றும் கூறுகிறது.
ஆனால், மழை பெய்யாமல் நீர் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் கர்நாடகம், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை சரியான அளவில் தருவதில்லை என்பதால், கர்நாடகத்தின் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய தென்மேற்குப் பருவமழை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குப் போதுமான நீரைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசுக்கு எப்போதுமே இருக்கிறது.
இத்தனைக்கும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் அளிக்க வேண்டிய 177.2 டிஎம்சியில் 123.1 டிஎம்சியை இந்த நான்கு மாதங்களில்தான் தர வேண்டும் என நடுவர் மன்ற உத்தரவு கூறுகிறது.
இந்த உத்தரவு 2013இல் பதிப்பிக்கப்பட்ட பிறகு கடந்த பத்தாண்டுகளில் நான்கு ஆண்டுகளில் மட்டுமே இது சரியாக நடந்திருக்கிறது. இதன் காரணமாக, புதிதாக உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகேதாட்டு அணை குறித்து எந்த விவாதத்தையும் நடத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு ஒப்புதல்பெற கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில் விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்ய மத்திய நீர் ஆணையம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இருந்தபோதும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்த கர்நாடக அரசு அதை மத்திய நீர் ஆணையத்திடம் 2019 ஜனவரியில் சமர்ப்பித்தது.
இந்தத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பீடு செய்ய விதிகளை வகுக்க அனுமதி தரும்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை கர்நாடக அரசு நாடியது. ஆனால், இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும் வழக்குகள் இருப்பதாலும் இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மேகேதாட்டு திட்டத்தில் மீண்டும் தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு காங்கிரஸ் அரசு, மேகேதாட்டு திட்டத்தில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் நீர் பாசனத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவக்குமார், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார்.
மே 30ஆம் தேதியன்று நீர் பாசனத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டி.கே. சிவக்குமார், இந்தத் திட்டத்திற்கு என முந்தைய பா.ஜ.க. அரசு ஒதுக்கிய 1,000 கோடி ரூபாய் நிதியை ஏன் செலவு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
ஜூன் 1ஆம் தேதியன்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், "எங்களுக்கு தமிழ்நாடு மீது எந்த விரோதமும் இல்லை. அவர்களோடு போரிடும் எண்ணமும் கிடையாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நமது சகோதரர்கள். மேகேதாட்டு திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் ஏற்படும்.
கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அதை காவிரி படுகையில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவோம். காவிரியில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?
தமிழ்நாட்டிற்கு எப்போது எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கிறது. ஆகவே இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்," எனக் கூறினார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்குவதால் தமிழ்நாட்டிற்கு என்ன பிரச்னை?
நாம் சண்டை போட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்தது போதும்," என்று டி.கே. சிவகுமார் பேசினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்வினைகள் எழுந்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய திமுக அரசின் நீர்வளத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மூத்த அமைச்சர் துரைமுருகன் கொஞ்சல், கெஞ்சல், தாஜா செய்து கண்துடைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகாமல் தடுக்க அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும்," என்று அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்று, முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றபோது அந்தப் பதவியேற்பு விழாவுக்கே நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் அவரது ஆட்சிக்கும் கர்நாடக அரசின் இந்த முயற்சிகள் பெரும் சங்கடத்தை உருவாக்கியிருக்கின்றன.
இருந்தபோதும், காவிரியின் குறுக்கே புதிதாக அணையைக் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது எனக் கூறியிருக்கிறார் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.
மு.க.ஸ்டாலின் ஜூன் 9ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் அதையே வலியுறுத்தினார்.
அப்போது பேசியவர், "மேகேதாட்டூவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு ஒருபோதும் விடமாட்டோம். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும்,” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "காவிரிப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் தங்களது தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை.
மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியான (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்," என்று கூறியிருக்கிறார்.
இதற்கு வேறு ஒரு தீர்வை முன்வைக்கிறார் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பி.ஆர்.பாண்டியன்.

"தமிழ்நாடு எல்லைக்குள் உள்ள ராசிமணலில் ஓர் அணையைக் கட்டலாம். அதிலிருந்து நீரை எடுத்து பெங்களூருவுக்கு கொடுக்கலாம். தமிழ்நாட்டுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும் கர்நாடக அரசு பயன்படுத்தலாம்.
கர்நாடகத்திற்குள் அணை கட்ட அனுமதித்தால், அது நிச்சயம் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் நீரின் அளவைக் கடுமையாகப் பாதிக்கும்," என்கிறார் பி.ஆர். பாண்டியன்.
நீண்ட காலமாக காவிரி நீர் பிரச்னை குறித்து தொடர்ந்து எழுதி வந்த மூத்த பத்திரிகையாளரான கணபதி, இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்.
"கர்நாடகம் அணை கட்டினால் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் நீரின் அளவு குறையும். மழை அதிகமாக உள்ள ஆண்டுகளில் பிரச்னை இருக்காது. ஆனால், பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் கர்நாடகம் கூடுதலாக நீரைச் சேமிக்கும். இந்த ஆண்டே தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும்," என்கிறார் கணபதி.
இந்த ஆண்டு எல்-நினோ ஆண்டாக இருப்பதால், மழைப் பொழிவு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, காவிரி விவகாரம் இந்த ஆண்டு இன்னும் சூடுபிடிக்கக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












