மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சாதிய பாகுபாடு காட்டுகின்றனரா? ககன்தீப் விவகாரத்தில் என்ன நடந்தது?

ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் மீது மனீஷ் ஐஏஎஸ் புகார்

பட மூலாதாரம், Dr. Manish Narnaware

படக்குறிப்பு, மனீஷ் நரனவாரே- ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர்

தமிழ்நாடு சுகாதாரச் செயலாளரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ககன் தீப் சிங் பேடி தன்னை சாதிரீதியாகத் துன்புறுத்தினார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனீஷ் நரனவாரே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மூத்த அதிகாரிகளால் இளம் அதிகாரிகள் சாதியரீதியாக துன்புறுத்தப்படுகின்றரா என்ற விவாதத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்தபோது சுகாதாரத்துறையின் இணை ஆணையராக இருந்தவர்தான் மருத்துவர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ்.

இந்தக் காலகட்டத்தில் ககன் தீப் சிங் பேடியால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் இதனால் தற்கொலை செய்யலாம் என்றுகூட தான் முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ள மனிஷ் நரனவாரே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மனீஷ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் என்ன?

  • 14/06/2021 முதல் 13/06/2022 வரை நான் சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகப் பதவியில் இருந்தபோது அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி என்னை சாதியரீதியாகப் பாகுபாடு காட்டி துன்புறுத்தினார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டே என்னை வெகுவாக அடக்குமுறைக்கு ஆளாக்கினார்.
  • கல்லறை மூடி இருக்கும் என்று தெரிந்தே இரவு 8.30 மணியளவில் கல்லறைக்குச் சென்று ஆய்வு செய்யும்படி என்னை அனுப்பினார்.
  • சீனியர் இன்ஜினியரான எஸ்.இ.வீரப்பன் என்பவரைப் பணி மாறுதல் செய்து, என்னுடைய திடக்கழிவு மேலாண்மை குழுவை மிகவும் பலவீனமாக்கினார். இதேபோல் எனது சுகாதாரக் குழுவையும் பலவீனப்படுத்தினார்.
  • எனக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார்.
  • ஒவ்வொரு ஆய்வுக்கூட்டத்திலும் தேவையில்லாத விஷயங்களுக்காக எல்லாம் திட்டி என்னை அவமானப்படுத்தினார். (அறையில் இவ்வளவு கொசு இருக்கிறதே, இணை ஆணையர் என்ன செய்கிறார் என்று கூறிவிட்டு சத்தமாகச் சிரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்)
  • இந்தூர் மாநகராட்சியில் நடந்த அலுவல்ரீதியான பணியின்போது, என் சாதியையும் நம்பிக்கையையும் குறிப்பிட்டு, நீ ஏன் உஜ்ஜெய்ன் கோயிலுக்கு செல்கிறாய் (புத்த மதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டு) எனக் கேட்டார்.
ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் மீது மனீஷ் ஐஏஎஸ் புகார்

பட மூலாதாரம், Dr. Manish Narnaware

படக்குறிப்பு, மனீஷ் நரனவாரே- ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர்
  • பணி நிமித்தமாக என்னைத் துன்புறுத்தினார். கோப்புகளில் கையெழுத்திடுவதைத் தாமதப்படுத்தினார். ஒரு கையெழுத்துக்காக இரவு வெகுநேரம் காத்திருக்கச் செய்வார். ஒரு வழியாக இரவில் காத்திருந்து அவரைப் பார்க்கச் சென்றால், 'தம்பி இப்போ லேட் ஆயிடுச்சு நாளை பார்த்துக்கலாம்' என்பார். இதுவே தினமும் நடந்தது.
  • இதுபோன்ற அடக்குமுறைகள் காரணமாகப் பலமுறை நான் அழுதுள்ளேன். மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதுகுறித்து ககன் தீப் சிங்கிடம் கூறினேன். ஆனால், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
  • அடுத்தடுத்த நாட்களிலும் இது தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் என் தந்தை ஊரில் இருந்து கிளம்பி வந்து என்னை தைரியப்படுத்தினார்.
  • ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்துகொண்டு அவர் செய்த இந்தச் செயல்கள் அனைத்துமே எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று கோருகிறேன்.

இப்படியாக குற்றச்சாட்டுகளை ககன் தீப் சிங் பேடி மீது வைத்ததோடு, "என் துயர்மிகு காலத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா உற்ற துணையாக இருந்து என்னைத் தேற்றினர்" என்றும் மனீஷ் நரனவாரே குறிப்பிட்டுள்ளார்.

ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் மீது மனீஷ் ஐஏஎஸ் புகார்

பட மூலாதாரம், Gagandeep Singh Bedi

படக்குறிப்பு, ககன் தீப் சிங் பேடி- சுகாதாரச் செயலாளர்

ககன் தீப் சிங் பேடியின் பதில் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக ககன் தீப் சிங் பேடியை பிபிசி தமிழ் சார்பில் தொடர்புகொண்டு பேசியபோது, "நிச்சயமாக இது ஆச்சரியம் அளிக்கிறது. மனீஷ் மிகவும் நல்ல அதிகாரி. பிறகு ஏன் இப்படியொரு புகாரை கூறியுள்ளார் என்பது தெரியவில்லை. ஒருபோதும் சாதியரீதியாக நான் பாகுபாடு காட்டியது கிடையாது," என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என்றும் அவர் நம்மிடம் தெரிவித்தார்.

21ஆம் ஆண்டு கொரோனா நேரத்தில் சென்னையில் மாபெரும் தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்ததற்காக மனீஷுக்கு தான் வழங்கிய பாராட்டு நற்சான்றிதழின் நகலையும் ககன் தீப் சிங் பேடி நமக்கு அவர் அனுப்பினார்.

ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் மீது மனீஷ் ஐஏஎஸ் புகார்

பட மூலாதாரம், Dr D.Ravikumar

படக்குறிப்பு, ரவிக்குமார் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மனீஷ் தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பற்றி கூறியுள்ள புகார் அதிர்ச்சி அளிக்கிறது. பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை. அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை. உயரதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு. பொதுவெளியில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை முதலமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று நீலம் பண்பாட்டு மையம், இந்த விவகாரத்தில் மனீஷ் ஐஏஎஸ் பக்கம் நிற்பதாக ட்விட் செய்துள்ளது.

இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனரா?

மனீஷ் நரனவாரேவின் குற்றச்சாட்டுகள் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளால் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் சாதிய பாகுபாடு உள்ளிட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனரா என்ற கேள்வியையும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் மன/ பணி அழுத்தங்கள் குறித்தும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்திய நாட்டின் கட்டமைப்பே சாதிய கட்டமைப்பாக உள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் அது இருக்கும், அரசாங்கத்திலும் இருக்கிறது. முன்னர் இருந்தது போன்று வெளிப்படையாகத் திட்ட மாட்டார்கள், அவமானப்படுத்த மாட்டார்களே தவிர இன்னும் சாதிய பார்வை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது வேறு வேறு ரூபங்களை எடுத்துள்ளதே தவிர இந்த நிலை எப்போதும் விலகாது. இந்தப் படிமத்தின் விழுதுகள் இன்னமும் உள்ளன," என்றார்.

இத்தகைய அழுத்தங்கள் நிச்சயம் வேலையைப் பாதிக்கும் என்று குறிப்பிட்ட அவர், "தன்னை ஒடுக்குகிறார்கள் என்ற எண்ணம் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு வந்துவிட்டாலோ, அவருக்கு தன்னம்பிக்கை இல்லையென்றாலோ நிச்சயம் பிரச்னைதான்," என்றார்.

‘நானே பார்த்துள்ளேன்’

"நான் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது தனிப்பட்ட முறையில் இதுபோன்ற எந்த அழுத்தங்களையும் எதிர்கொண்டது இல்லை. ஆனால், எனது சக ஐஏஎஸ் அதிகாரிகள் எதிர்கொண்டது குறித்துக் கேள்விப்பட்டுள்ளேன். நானே பார்த்துள்ளேன்.

பெண் அதிகாரிகளின் நிலை இன்னும் மோசம். சாதிய பாகுபாடு என்பதோடு அல்லாமல் பாலினப் பாகுபாடும் அவர்களுடம் காட்டப்படும்.

பெண்தானே என அவர்களை இளக்காரமாகப் பார்க்கும் சூழல் உள்ளது. பாலியல் தொல்லை மட்டுமல்ல, மனரீதியிலான அழுத்தமும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இது போன்றவை அரசுத்துறை என்றல்ல, பிற துறைகளிலும் உள்ளன," என்றார்.

ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் மீது மனீஷ் ஐஏஎஸ் புகார்

பட மூலாதாரம், Sasikanth senthil

படக்குறிப்பு, சசிகாந்த் செந்தில் - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

இதுபோன்ற பிரச்னைகளைக் களைவதற்கான தீர்வு என்ன?

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் இருந்து இதுபோன்ற அழுத்தங்கள் வரும்போது, இளம் அதிகாரிகள் எப்படிச் செயலாற்றுவது என்ற கேள்விக்குப் பதிலளித்த சசிகாந்த் செந்தில், "இதுபோன்ற பிரச்னைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவெளியில் பேசுவதற்கு நடத்தை விதிகள் அனுமதிக்காது.

எனவே, அந்த அமைப்புக்கு உள்ளேயே உயரதிகாரிகளைத் தொடர்புகொள்வது போன்றவற்றில்தான் அவர்கள் ஈடுபட முடியும்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் இருந்து துன்புறுத்தல் வரும்போது அது குறித்து இளம் அதிகாரிகள் புகார் அளிப்பதற்கும், விசாரணை நடத்துவதற்கும் தற்போது எந்த அமைப்பும் இல்லை.

காவல்துறையிலும் இதுபோன்ற எந்த அமைப்பும் இல்லை. அதை ஏற்படுத்த வேண்டும். எப்படி கீழ்நிலை அதிகாரிகள் குறித்து மேல்நிலை அதிகாரிகள் மதிப்பிடுகிறார்களோ, அதேபோல், மேல்நிலை அதிகாரிகள் குறித்தும் கீழ்நிலை அதிகாரிகள் மதிப்பிடும் முறையை கொண்டு வர வேண்டும்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: