பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மு.க.ஸ்டாலின் - எதிர்கொள்ள போகும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
2018ஆம் ஆண்டு `கருணாநிதி சிலை திறப்பு விழா'வில திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் என்ன பேசப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணத்தில், ‘ராகுல் காந்தியை வருகின்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியடைந்தது.
தற்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைக் குறிப்பிட்டு, “இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி, ஜூன் 7ஆம் தேதியன்று மாலை சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றது. திமுக சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியின்போது ஸ்டாலின் எழுதிய ’அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், "இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, பாஜகவிற்கு எதிராக ஒன்று சேர்ந்தாக வேண்டும்” என்று 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
பாஜகவிற்கு எதிராகக் கூடும் எதிர்க்கட்சிகளுக்கு ‘2024ஆம் ஆண்டு தேர்தல்’ சாதகமாக அமையுமா? அவர்கள் முன் இருக்கும் சவால்கள் என்ன?
நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் என்ன பேசினார்?

பட மூலாதாரம், TWITTER/M.K.STALIN
விழாவில் பேசிய ஸ்டாலின் முதலில் கருணாநிதி குறித்த தனது நினைவுகளையும், சிறப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.
பிறகு நாடாளுமன்றத் தேர்தலைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் நமக்காகக் காத்திருக்கிறது. வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதைவிட, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமையப் போகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் ஒரு தேர்தல் சடங்கு அல்ல இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முறையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காப்பாற்றுவதற்காக, இந்தியா முழுவதிலும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயகச் சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்தாக வேண்டும்.
என்னை வந்து சந்திக்கும் அகில இந்தியத் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரிடமும் இதை நான் சொல்லி வருகிறேன்.
இந்தப் பொதுக்கூட்டத்திற்காக நான் காரில் வந்துகொண்டிருந்தபோது, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ஜூன்23ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநாட்டிற்காக அழைப்பு விடுத்தார்,” என்று தெரிவித்தார்.
மேலும் பாஜக குறித்துப் பேசிய அவர், “அவதூறுகளைப் பரப்ப பாஜகவிடம் ஒரு கூட்டமே உள்ளது. தமிழகத்தில் ஆளுநராக இருப்பவர் செய்யும் சித்து வேலைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்ற உணர்ச்சியுடன் இன்று கிளம்பியிருக்கிறோம். ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், மக்கள் நம்முடன் இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நமக்கானது அல்ல, நாட்டிற்கானது. ஜனநாயகத்தை காப்பாற்றப் போகும் தேர்தல் என்பதை மனதில் வைத்து உறுதியேற்போம்,” என்று தெரிவித்தார்.
பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் மாநாடு, வரும் ஜூன் 23ஆம் தேதி, பாட்னாவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தலுக்கு ராகுலை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்
2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ’கருணாநிதி சிலை திறப்பு விழா’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிலை திறப்பு விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வந்திருந்தனர். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
கலைஞரின் மறைவிற்குப் பிறகு திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரங்களால் மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட்டு வந்த நேரம் அது. அதேபோல் கருணாநிதி அளவுக்கு ஸ்டாலினால் என்ன செய்துவிட முடியும் என்பது போன்ற விமர்சனங்களை அப்போது தொடர்ச்சியாக எதிர்கொண்டு வந்தார் ஸ்டாலின்.
சிலை திறப்பு விழாவில் அவர் என்ன பேசப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம், "ராகுல் காந்தியை வருகின்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்," என்று அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் பேசிய இந்த உரை மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
ஸ்டாலினின் இந்த பேச்சு அப்போதைய அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், நடைபெற்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ்.
அந்தத் தேர்தலில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குச் சரியான கூட்டணி அமையாததே தேர்தல் தோல்விக்குக் காரணமாகப் பார்க்கப்பட்டது.
இப்போது 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் ‘இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்’ என மீண்டும் கூறுகிறார் ஸ்டாலின்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின், இன்று 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார்.
ஆனால் இம்முறை பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார் என்பதே எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முன் இருக்கும் பெரிய கேள்வியாக இருக்கிறது.
பாஜகவுக்கு எதிராக கூடும் கட்சிகளின் முன் இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
“யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும்,” என ஸ்டாலின் பேசியிருப்பதன் அர்த்தத்தைத்தான் இங்கு நாம் முழுதாக உள்வாங்க வேண்டும் என்றே பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்து.
"ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால் பாஜகவுக்கு எதிராக, அந்தந்தத் தொகுதிகளில் பொது எதிரியை நிற்க வைக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “எங்கெங்கு காங்கிரஸ் பலமாக இருக்கிறதோ அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களும், எங்கெங்கு மாநிலக் கட்சிகள் பலமாக இருக்கின்றனவோ அங்கு அந்தந்த கட்சியினுடைய வேட்பாளர்களையும் நிற்க வைக்க வேண்டும் என மம்தா கூறியிருக்கிறார்.
கேட்பதற்கு இது நல்ல யோசனையாக இருந்தாலும், இதிலிருக்கும் நடைமுறை சிக்கல்களை நாம் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில் 42 சீட்டுகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதில் 40 தொகுதிகளில் நான்தான் நிற்பேன் என மம்தா கூறினால் அங்குள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி அதை ஏற்றுக்கொள்ளும்?
அதேபோல் கேரளாவில் 20 சீட்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால், அதில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள், கம்யூனிஸ்டுக்கு 10 தொகுதிகள் எனப் பிரிக்க முடியுமா. அந்த கட்சிக்காரர்கள் ஒப்புக்கொள்வார்களா?
இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு முரண்பட்ட நிலைகள் ஏற்படலாம். பாஜகவுக்கு எதிராகக் கூடும் இந்தக் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றால், முதலில் அவர்கள் தங்களது சொந்த கட்சிக்காரர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி சமாதானம் செய்ய வேண்டியிருக்கும்.
தேர்தலையொட்டி சொந்த கட்சிக்காரர்களிடையே முரண்பாடு ஏற்பட்டால் நிலைமை சிக்கலாகும். எனவே வேட்பாளர்களை எப்படி நிறுத்த வேண்டும் என்பதில் கூட்டணிக் கட்சிகள் இன்னும் தெளிவு பெற வேண்டும்” என்று கூறுகிறார் ப்ரியன்.
அதேபோல், “பாரதிய ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 'நிலையற்ற ஆட்சியை' நோக்கிக் கொண்டு போய்விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. இங்கு இடையில் எத்தனையோ கூட்டணி ஆட்சிகளை நாடு சந்தித்து விட்டது. யுபிஏ ஆட்சி 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்தது. இந்திய ஜனநாயகம் கூட்டணிக்குப் பழகிவிட்டது,” என்று மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் குறிப்பிடுகிறார்.
“வலுவான எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்குவதற்கு இரண்டு கூறுகள் தேவை. அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லாத நேர்மையின் சின்னமாக விளங்கும் தலைவர்களும், அனைத்துக் கூட்டணி பங்காளிகளுக்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களும் இங்கு தேவை,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ராகுலை மீண்டும் முன்னிறுத்துவாரா ஸ்டாலின்?
”பாஜகவுக்கு எதிராகக் கூடும் கூட்டணிக் கட்சிகளில் எப்போதுமே இரண்டு பிரிவுகள் உண்டு. அதில் காங்கிரஸ் கூட்டணியில் வேண்டும் என்று ஒரு தரப்பும், காங்கிரஸ் வேண்டாம் என்று மற்றொரு தரப்பும் கூறும்.
ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டன. அதற்கு முக்கியக் காரணம் திமுக,” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் விஜயசங்கர்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ”மத்திய அரசுக்கு எதிராகத் தேசிய அளவிலான கூட்டணிகயை ஒன்றிணைப்பதில் திமுக எப்போதுமே முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக எமெர்ஜென்சி காலத்திலிருந்து 2014ஆம் ஆண்டு காலகட்டம் வரை கருணாநிதி அதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். 2014க்கு பிறகு அவரது உடல்நலம் குன்றிய பிறகு, ஸ்டாலின் ஒரு தலைவராக உருவெடுக்கத் தொடங்கினார்.
அப்போதிலிருந்து அவரும் பாசிசத்திற்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து உறுதியாக வெளிப்படுத்தி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிடும்போது அதில் அவர் தனது கருத்துகளை நேரடியாக வெளிப்படுத்துகிறார்.
எனவே இந்த எதிர்க்கட்சிக் கூட்டணியைப் பொறுத்தவரை ஸ்டாலின் பங்கு பெரியது. அதேபோல் தமிழகத்தில் காங்கிரஸின் தேவை என்பது பெரிய அளவில் இல்லையென்றாலும், காங்கிரஸை தொடர்ந்து ஆதரித்து வருகிறது திமுக,” என்று திமுகவின் முக்கியத்துவம் குறித்து அவர் விவரிக்கிறார்.
பிரதமர் வேட்பாளர் ஆவாரா ராகுல்?

பட மூலாதாரம், Reuters
"அதேபோல் 2019 தேர்தல் போன்று, இப்போதும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்தக் கேள்விக்கான பதிலை இப்போது யூகிக்க முடியாது.
ஒருவேளை எந்தக் கட்சியினர் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் பிரதமர் வேட்பாளர்களை முன்னிறுத்தலாம் என்ற நிலைப்பாடு வரலாம். ஆனால் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்குப் பிறகுதான் இதுகுறித்து நாம் எதையும் கூறமுடியும்,” என்றும் விஜயசங்கர் குறிப்பிடுகிறார்.
பத்திரிக்கையாளர் ப்ரியனும் இதே கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறார் “தேர்தலுக்குப் பின் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் எடுக்கலாம்.
காங்கிரஸ் பெரியண்ணன் தோரணையை கடைபிடித்தால் சிக்கல் அதிகரிக்கும்.ஒருவேளை காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சி, எனவே எங்கள் கட்சியிலிருந்துதான் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறினால், அதற்கு மம்தா, அகிலேஷ், சந்திரசேகர் ராவ் மற்றும் கெஜ்ரிவால் போன்றோர் ஒப்புக்கொள்வார்களா எனத் தெரியாது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணி பாஜகவுக்கு நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தலாம். இந்த 2024 தேர்தல் என்பது நிச்சயமாக மோதிக்கு கடினமாக ஒன்றாக இருக்கும், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என்று தெரிவித்தார்
ராகுலின் செல்வாக்கு எப்படியிருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
"நாட்டிற்காக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்கும் என்பதுதான் இங்கு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. இது பெரிய சவால்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் அவருக்கு இருக்கும் அகில இந்திய செல்வாக்கை அதிகரித்துள்ளது உண்மை. அண்மையில் அவர் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரிடையே கலந்துரையாடியது அங்கு வாழும் ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி வரிசையில் அகில இந்திய அளவில் 18-22% வாக்குகள் பெறக்கூடிய தேசியக் கட்சி காங்கிரஸ் மட்டுமே.
ஆந்திரா, தெலங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. எனவே தேசிய அளவில் அதோடு கரம் கோர்ப்பதில் அந்தந்த மாநிலக் கட்சிகளுக்குத் தயக்கம் இருக்கிறது.
புதிதாகத் தேசியக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் அதே தயக்கம் தான். அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.
பிரதமர் மோதியின் விமர்சகர்கள் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் மோதியை அகற்றும் அளவுக்கு இந்தக் கூட்டணி வலுவாக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது” என்று அவர் சுட்டிகாட்டுகிறார்.
தொடர்ந்து பேசுகையில், “எதிர்க்கட்சிகளின் ஒருமித்த பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வருகின்றன. அதோடு சேர்த்து மக்களவைத் தேர்தலை நடத்தவும் மத்திய அரசு முன்வரலாம். எனவே எதிர்க்கட்சிகளுக்கான நேரம் குறைவு.
எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் போன்றவை காங்கிரஸ் எதிர்ப்பில் தீவிரமாக இருக்கின்றன. இந்நிலையில் காங்கிரஸின் 'பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி’ என்ற ஏற்பாட்டுக்கு அவர்கள் ஒத்துழைப்பது கடினம்” என்றும் அவர் கூறுகிறார்.
மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது?
"ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் ஆகியோர் மாநில அரசியல் காரணமாக பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைப்பதையே விரும்புகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விசாகப்பட்டின வருகைக்குப் பிறகு அதற்கான நகர்வுகள் துவங்கும் என்று அம்மாநிலப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால் சந்திரசேகரராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வருவார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
ஒடிஷா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரண்டோடும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார்,” என்று பத்திரிக்கையாளர் ஷியாம் குறிப்பிடுகிறார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












