மோதி vs ராகுல்: இந்தியாவில் வாக்குரிமையே இல்லாத அமெரிக்கவாழ் இந்தியர்களை ஈர்ப்பதில் ஏன் இந்த போட்டி? அதனால் என்ன லாபம்?

பட மூலாதாரம், Reuters
ராகுல் காந்தியின் சமீபத்திய அமெரிக்கப் பயணம் மகிழ்ச்சியும், ஆர்வமும் கலந்த ஒன்றாகக் காட்சியளிக்கிறது. ஆனால் அதேசமயம் அதில் சில சந்தேகங்களும் நிலவுகின்றன.
பிரதமர் மோதி 2014ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது, அவருக்காக அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கூடியிருந்தனர். ஆனால் ராகுல் காந்திக்கு அத்தனை பெரிய கூட்டம் கூடவில்லை. ராகுல் காந்தி ஒரு முக்கிய அரசியல் தலைவராக இருந்தாலும், அவர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை, எதிர்க்கட்சி தலைவராகவும் இல்லை. இந்த நிலையில், ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணத்திற்காக, காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்தளவு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்.
இந்த வாரம் கலிஃபோர்னியாவின் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் டி.சியிலிருக்கும் நேஷனல் பிரஸ் கிளப் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் ராகுல் காந்தி.
சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி, மாநில ஆட்சியை கைப்பற்றிய வெற்றிக்குப் பிறகு ராகுல் காந்தி தன்னுடைய இந்த அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் ஒற்றுமைக்காக ’பாரத் ஜோடோ யாத்திரையை’ மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருந்தார் என்பதையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டும். ஐந்து மாதங்களில் இந்தியா முழுவதும், சுமார் 4000 கிமீ தூரத்தை அவர் கடந்திருந்தார்.
தற்போது அவருடைய அமெரிக்கப் பயணத்தில், இந்திய அரசையும் மோதியையும் விமர்சித்து வருகிறார். அதேபோல் இந்திய - அமெரிக்க மக்களின் கடினமான உழைப்பிற்காக அவர்களை புகழ்கிறார். மேலும் சிலிகான் வேலியில் இந்தியர்கள் பெற்றிருக்கும் வெற்றியைக் குறிப்பிட்டு பாராட்டுகிறார்.
ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியின் உரையைக் கேட்பதற்காகவும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காகவும் அங்கே மாணவர்கள் திரண்டிருந்தனர்.
ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து பேசும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பித்ரோடா “கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தியின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அமெரிக்காவில் அவருக்குக் கிடைத்திருக்கும் உற்சாக வரவேற்பிற்கு பாரத் ஜோடோ யாத்திரை ஒரு முக்கிய காரணம்” என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், CONGRESS
ஆனால் சர்வதேச அளவில் பெரிதாக தொண்டர்களோ, ரசிகர்களோ அல்லாத ஒரு இந்திய அரசியல்வாதி., அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெற விரும்புவது ஏன்?
மற்ற நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் மக்களுடன் ஒப்பிடும்போது, இந்தியர்கள்தான் அதிகமான வருமானத்தைக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் அந்நாட்டு அரசியலிலும் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தது. அமெரிக்க வாழ் இந்திய மக்களின் வாக்குப்பதிவு அங்குக் கவனிக்கத்தக்க வகையில் செயல்படுகிறது. இந்தியர்கள் பலர் தேர்தல் வேட்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர், மேலும் சிலர் அந்நாட்டு அரசியல் கட்சிகளில் முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.
உள்நாட்டில் தெரிவிக்கப்படும் எந்தவொரு நேர்மறையான செய்திகளும் இந்தியாவில் "தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்கும்" ஆற்றல்களைக் கொண்டுள்ளது என்று வாஷிங்டனில் செயல்படும் சிந்தனைக் குழுவான ‘Carnegie Endowment for International Peace’- ல் பணிபுரியும் மிலன் வைஷ்ணவ் கூறுகிறார்.
இந்த நிலையில், ”இங்கே தன்னுடைய மாண்பை முன்னிறுத்தி கொண்டுசெல்ல நினைப்பது, ராகுல் காந்திக்கு சற்று கடினமான காரியமாக இருக்கலாம்” என்கிறார் டெம்பிள் பல்கலைக்கழகத்தைச் (Temple University) சேர்ந்த சஞ்சய் சக்கரவர்த்தி.
‘சர்வதேச அளவில் ராகுல் தன்னை முன்னிறுத்திக் கொள்ள நினைப்பதை இங்கே சில குழுவினர் கேலியாகப் பார்க்கின்றனர்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அதேபோல் ஒரு தவறான நேரத்தில், ராகுல் காந்தி தன்னுடைய அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார் மிலன் வைஷ்ணவ்.
”வரும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோதி அமெரிக்கா வரவிருக்கிறார். வெள்ளை மாளிகையில் அவருக்குச் சிறப்பு விருந்து அளிப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்தபட்ச மரியாதை இது. ராகுல் காந்திக்கு அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. எனவே இத்தகைய நேரத்தில் ராகுல் இங்கே வந்திருப்பது, மோதியின் செல்வாக்கோடு ராகுலை ஒப்பிட்டு பல விமர்சனங்களை எழுப்புவதற்கு வழிவகுக்கும்” என்று அவர் தெரிவிக்கிறார்.
இங்கே வசிக்கும் இந்தியர்களிடம் மோதி ‘ராக் ஸ்டாராக’ திகழ்கிறார், மேலும் அவர் ஒரு தனித்துவமான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் பொருளாதார சக்தி உயர்ந்து, அமெரிக்காவுடனான அதன் கூட்டணி வலுவடையும் போது, அமெரிக்கவாழ் இந்தியர்களின் அரசியல் செல்வாக்கும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் வகிக்கும் பங்கு உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2000ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்தான், முதன் முதலாக வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான உறவை மேம்படுத்தத் தொடங்கினார்.
அதன்பின் 2014ஆம் ஆண்டு நியூயார்க்கின் ‘மேடிசன் ஸ்கொயர் கார்டனில்’ (Madison square Garden) பிரதமர் மோதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக சுமார் இருபதாயிரம் மக்கள் கூடியிருந்தனர்.
உலக நாடுகளில் உள்ள மற்ற எந்த தலைவருக்காகவும், ‘மேடிசன் ஸ்கொயர் கார்டனில்’ இத்தனை பெரிய அமெரிக்கக் கூட்டம் கூட போவதில்லை என்று கூறுகிறார் மிலன் வைஷ்ணவ்.
அதேபோல் 2019 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஹூஸ்டன் நிகழ்விற்கு’, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோதியைப் பார்க்க சுமார் 50,000 அமெரிக்கவாழ் இந்தியர்கள் வந்தனர். போப்பைத் தவிர, ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு இதுவாகும். டிரம்ப் இந்த நிகழ்வை "விதிவிலக்கானது" என்று குறிப்பிட்டார்.
”இத்தனை பெரிய பொது நிகழ்வுகளுக்கு இதற்கு முன்னதாக மற்ற இந்திய தலைவர்கள் யாரும் முன்னோடியாக இருந்ததில்லை என்கிறார் சக்கரவர்த்தி.
முன்னதாக எத்தனையோ முறை பல இந்திய பிரதமர்கள் இங்கு வந்திருக்கிறார்கள், உயர் அதிகாரிகளையும் தலைவர்களையும் சந்தித்திருக்கிறார்கள், ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்காகவும் இத்தனை பெரிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதில்லை” என்று சஞ்சய் சக்கரவர்த்தி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்தியாவில் வாக்களிக்க முடியாத அமெரிக்கவாழ் இந்தியர்கள், இந்திய அரசியல்வாதிகள் மீது கவனம் செலுத்துவது ஏன்?
ஏனென்றால் இந்த அமெரிக்கவாழ் இந்திய சமூக மக்கள், தங்கள் தாயகத்தில் இருக்கும் குடும்பங்களிடமும், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீதும் ஆழமான தொடர்பை கொண்டிருக்கின்றனர். இன்னும் பலருக்கு, அவர்களுடைய தனிப்பட்ட முதலீடுகள் ஆபத்தில் இருக்கின்றன.
கலிபோர்னியாவில் வசிக்கும் பூஜா லக்கியா பிபிசியிடம் கூறுகையில், ”அமெரிக்காவில் இருக்கும் இந்திய சமூகம் இங்கு சிறந்த வேலைகளில் உள்ளனர். இவர்களில் சிலர் திரும்பி தங்களுடைய நாட்டிற்குச் செல்லும் எண்ணத்தில் இருக்கலாம் அல்லது சிலர் இங்கேயே இருக்கும் முடிவுகளில் இருக்கலாம். ஆனால் எப்படியானாலும் எங்களில் பலருக்கு நிலம், வீடு, பங்குகள் என இந்தியாவில் முதலீடுகள் உள்ளன " என்று தெரிவிக்கிறார்.
தன்னை மோதியின் ரசிகை எனக் கூறி கொள்ளும் லக்கியா, அமெரிக்கவாழ் இந்தியர்கள் இந்திய அரசியல்வாதிகளிடம் கவனிக்கத்தக்க வகையில் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கிறார். இவர் தற்போது ராகுலின் அமெரிக்க பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கல்லூரிகள் மூலம் தாங்கள் கல்வியில் பெரிதும் பயன் அடைந்திருப்பதை அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஒப்புகொள்கின்றனர். அதற்கு பதிலாக தற்போது இவர்களிடமிருந்து இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் அளவில் நிதியுதவிகள் கிடைக்கின்றன. கடந்தாண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து சுமார் 108பில்லியன் டாலர்கள் நிதி வந்திருப்பதாக மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
”அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அமெரிக்கா தங்களுக்கு சிறப்பான வாழ்வை அளித்திருக்கும் போதிலும் அவர்கள் அந்நாட்டு அரசியலில் பெரிதாக ஆர்வம் செலுத்துவதில்லை என்பதற்காக எப்போதும் விமர்சிக்கப்படுகின்றனர். ஆனால் அதேசமயம் அவர்கள் இந்திய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கின்றனர்” என்கிறார் அனு மைத்ரா. இவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறங்காவலராக இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பல முதல் தலைமுறை அமெரிக்கவாழ் இந்தியர்கள் தங்களுடைய நாட்டுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர் என்று சிலிக்கான் வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் தலத் ஹசன் கூறுகிறார்.
"நாங்கள் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், தேசபக்தியின் வலுவான உணர்வோடு வளர்ந்திருக்கிறோம்" எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஷாருக் கான் நடித்திருந்த ஸ்வதேஷ் திரைப்படத்தில், ’ஒருவர் தன் நாட்டிடமிருந்து பெற்ற பலன்களுக்காக நாட்டிற்கு மீண்டும் நன்றிக்கடன் செலுத்த வேண்டும்’ என்பது போன்ற கருத்துக்கள் பேசப்பட்டிருக்கும். அமெரிக்கவாழ் இந்தியரும், பொறியாளருமான ரவி குச்சிமஞ்சியின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். இவர் கலிஃபோர்னியாவில் ராகுலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக அங்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
”ராகுல் காந்தி மிக நேர்மையான மனிதராக காணப்படுகிறார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் அவருக்கு எப்படி உதவ வேண்டும் என்பது குறித்து அவர் எடுத்துக்கூற வேண்டும்” என்று ராகுல்காந்தி குறித்து தன்னுடைய கருத்தை கூறுகிறார் ரவி குச்சிமஞ்சி,
இந்தியாவிற்கு உதவ வேண்டும் என அமெரிக்கவாழ் இந்தியர்கள் நினைப்பது உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் பெரிய அளவில் இந்தியாவிற்கு பணம் அனுப்புவது மட்டுமல்ல, உண்மையாகவே இன்றைய தலைமுறையினர் இந்தியாவின் மீது அக்கறை கொண்டுள்ளனர்” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஞ்சலி அரோந்தேக்கர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












