முஸ்லிம் லீக் குறித்து அமெரிக்காவில் ராகுல் கூறியது என்ன - பாஜக கொந்தளிப்பது ஏன்?

பட மூலாதாரம், ANI
வாஷிங்டனில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முஸ்லிம் லீக் கட்சி தொடர்பான கேள்விக்கு, “அந்தக் கட்சி முழுக்க முழுக்க மதச்சார்பற்றது” என்று அவர் பதிலளித்தார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது இல்லையா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
“முஸ்லிம் லீக் உடனான உறவில் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று எதுவும் இல்லை. இந்தக் கேள்வியை அனுப்பி இருப்பவர் முஸ்லீம் லீக் கட்சியின் வரலாறு குறித்து சரியாக அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்,” என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.
வாஷிங்டனில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்தார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ரஷ்யா - உக்ரைன் போரில், பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு கடைபிடிக்கும் கொள்கையை ஆதரிக்கிறேன்” என்று ராகுல் பதில் கூறினார்.
கேரள மாநிலத்தில் பிராந்திய கட்சியாக இருக்கும் ஐயுஎம்எல், அங்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (UDF) ஆட்சி அமைக்கும் போதெல்லாம் அதில் அங்கம் வகித்து வந்துள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியா குறித்து அவதூறு பரப்பி வருவதாக பாஜக மீண்டும் குற்றம்சாட்டி உள்ளது.
தமது அமெரிக்க சுற்றுப் பயணத்தில் அவர் பேசி வரும் விஷயங்கள் தொடர்பாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANI
பாஜக - காங்கிரஸ் வார்த்தைப் போர்
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கை மதச்சார்பற்ற கட்சி என்று கூறியுள்ள ராகுல் காந்திக்கு, பாஜக தலைவர் அமித் மால்வியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளதால், முஸ்லிம் லீக்கை மதச்சார்பற்ற கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ராகுல் காந்திக்கு உள்ளது என்று மால்வியா விமர்சித்துள்ளார்.
“மதத்தின் அடிப்படையில் இந்தியா பிளவுப்பட்டதற்கு ஜின்னாவின் முஸ்லிம் லீக்தான் காரணம். ஆனால் அந்தக் கட்சியை ராகுல் காந்தி மதச்சார்பற்ற கட்சி என்று கூறுகிறார். முஸ்லிம் லீக் குறித்து ராகுலுக்கு சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் வயநாட்டில் தமது இருப்பை காட்டிக்கொள்ள வேண்டி இதுபோன்ற தந்திரங்களை அவர் கையாள்கிறார்,” என்று அமித் மால்வியா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
‘மோதி’ குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் எம்பி பதவியை இழப்பதற்கு முன்பு வரை, ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியின் எம்பி ஆக இருந்தார்.
ராகுல் மீதான அமித் மாளவியாவின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் பதிலடி கொடுத்துள்ளார்.
“பொய் செய்தி பரப்பும் நீங்கள், நள்ளிரவு வரை விழித்திருந்து ராகுலை கண்டிப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ராகுலின் அமெரிக்க பயணத்தில் அவரைக் கண்காணிக்கும் பொருட்டு வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக தூக்கத்தைத் தொலைக்க வேண்டி வரும். அதற்குத் தயாராக இருங்கள்,” என்று சுப்ரியா கிண்டலாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான பவன் கெராவும் அமித் மாளவியாவின் விமர்சனத்துக்கு எதிர்வினை ஆற்றி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியபோது, “ ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சிக்கும், கேரளாவில் தற்போதுள்ள முஸ்லிம் லீக்கிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பது கூடத் தெரியாத அளவிற்கா நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள்?" என்று பவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜின்னாவின் முஸ்லிம் லீக் என்பது, உங்களின் (பாஜகவின்) முன்னோர்களுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி. ஆனால் கேரளாவின் முஸ்லிம் லீக் கட்சி என்பது, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி” என்று பவன் கெடா பதிலடி கொடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக - முஸ்லிம் லீக் உறவு
கடந்த 2012இல் நாக்பூர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவைப் பெற்றது என்றும் பவன் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 145 உறுப்பினர்களைக் கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் பெரும்பான்மையைப் பெற ஒரு கட்சி குறைந்தபட்சம் 73 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 10 சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் 2 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களின் ஆதரவுடன் நாக்பூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது என்று பவன் கோடிட்டு காட்டியுள்ளார்.
2019 தேர்தலின்போது, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது ஒரு ட்விட்டர் பதிவில் முஸ்லிம் லீக்கை கடுமையாக விமர்சித்திருந்தார்.
“முஸ்லிம் லீக் ஒரு வைரஸ். யாருக்காவது இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர் உயிர் வாழ்வது மிகவும் கடினம். ஆனால் இன்று, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளது. அவர்கள் வெற்றி பெற்று, இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் நிலைமை என்னவாகும் என்று எண்ணி பாருங்கள்” என்று தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் யோகி ஆதித்யநாத்.
2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அப்போது அவர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவை பெற்றது குறித்தும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சிக்கு என்ன நேர்ந்தது?
இந்திய பிரிவினைக்கு பிறகு, தனி பாகிஸ்தான் கோரி போராடி வந்த அனைத்திந்திய முஸ்லிம் லீக் கட்சி கலைக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாக உருவெடித்த பின், அந்நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக முகமது அலி ஜின்னா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சில மாதங்களுக்கு பிறகு, மேற்கு பாகிஸ்தானில் முஸ்லிம் லீக் கட்சியும், கிழக்கு பாகிஸ்தானில் அனைத்து பாகிஸ்தான் அவாமி முஸ்லிம் லீக் கட்சியும் உருவாகின.
பாகிஸ்தானுக்கு முதல் ஆறு பிரதமர்களை தந்த கட்சி என்ற பெருமையை முஸ்லிம் லீக் பெற்றது. ஆனாலும் அவர்கள் குறுகிய காலமே பதவி வகித்தனர். இறுதியில் ஜெனரல் ஆயுப் கான் பாகிஸ்தானில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய பின், முஸ்லிம் லீக் கட்சி கலைக்கப்பட்டது.
சில காலம் கழித்து, முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்று மாற்றி அந்த கட்சிக்கு புத்துயிர் கொடுத்தார் ஆயுப் கான். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் அங்கு பல ஆண்டுகள் செல்வாக்குடன் இருந்து வந்த நிலையில், அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து, நவாஸ் ஷெரிஃப்பை பொதுச் செயலாளராக கொண்டு புதிய கட்சி உருவானது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) பெயரிடப்பட்ட கட்சிக்கு, ஷெபாஸ் ஷெரிஃப் தலைவராக இருந்தார்.
இதனிடையே வங்கதேசம் உருவாக, கிழக்கு பாகிஸ்தானில் அவாமி லீக் கட்சி போராட்டங்களை நடத்தி வந்தது. பஞ்சாபிகள் ஆதிக்கம் நிறைந்த மேற்கு பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதற்கான முயற்சிகளையும் அக்கட்சி முன்னெடுத்து வந்தது. இந்த போராட்டங்களின் விளைவாக, மேற்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் எனும் புதிய நாடு உருவானது. ஷேக் முஜிபுர் ரகுமான் அந்த நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

பட மூலாதாரம், ANI
சுதந்திர இந்தியாவில், அனைத்திந்திய முஸ்லிம் லீக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றம் பெற்றது. அத்துடன் இதன் வரலாறு தாய் கட்சியில் இருந்து முற்றிலும் மாறிப்பட்டிருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடந்து தேர்தலில் போட்டியிட்டு வருவதுடன், நாடாளுமன்ற மக்களவையில் இந்த கட்சியின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து இருந்து வருகிறது.
கேரளாவில் வலுவாக உள்ள ஐயுஎம்எல்லை, அங்கு மாநில கட்சியாக அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டிலும் கிளை உள்ளது.
மூன்றாவது மக்களவையில் தொடங்கி 16 ஆவது மக்களவை வரை, ஐயுஎம்எல் கட்சிக்கு குறைந்தபட்சம் இரண்டு எம்பிக்கள் இருந்துள்ளனர். அதிகபட்சமாக, நான்காவது மக்களவையில் இக்கட்சிக்கு மூன்று எம்பிக்கள் இருந்தனர். இரண்டாவது மக்களவையில் மட்டும் ஐயுஎம்எல்-க்கு எம்பிக்கள் யாரும் இல்லை.
கேரளாவில் காங்கிரசுடன் ஐயுஎம்எல் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகிறது. மேலும் அங்கு எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (UDF) முக்கிய கட்சியாகவும் ஐயுஎம்எல் அங்கம் வகிக்கிறது. கேரள சட்டமன்றத்தில் தற்போது இந்தக் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2011 ஆண்டு, சட்டமன்றத்தில் ஐயுஎம்எல் கட்சிக்கு மொத்தம் 20 எம்எல்ஏக்கள் இருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












