செப்டிக் டேங்கில் கிடைத்த மனித எலும்புக்கூடு: காணாமல் போன வாலிபர் கொலையான மர்மம் வெளியானது எப்படி?

தென்காசி அருகே ஓர் ஆண்டுக்கு முன்பு வாலிபர் காணாமல் போன வழக்கில் அவர் கொலை செய்யப்பட்டது, செப்டிக் டேங்கில் கிடைத்த எலும்பு கூடு மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா இலத்தூரில் உள்ள சுண்டக்காட்டு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பராமரிப்புப் பணிகளின் போது வீட்டிலுள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அதில் ஒரு மனித எலும்புக் கூடு கிடந்துள்ளது. இது குறித்து உடனடியாக அவர் இலத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த காணாமல் போனவர்கள் குறித்துப் பதிவான பழைய வழக்குகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது லட்சுமணனின் வீடு அமைந்துள்ள அதே தெருவைச் சேர்ந்த மது என்ற மாடசாமி (24) என்பவர் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
திடீரென மாடசாமி காணாமல் போன விவகாரத்தில் அவரது தாய் ராமலட்சுமி உள்ளுர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
சுமார் 8 மாதங்களுக்கு முன்பு மாடசாமி காணாமல் போனதும், இது குறித்த வழக்கு இலத்தூர் காவல் நிலையத்தில் பதிவாகியிருந்தது.
மரபணு பரிசோதனை
எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்படட பிறகு அது தன்னுடைய மகன் இல்லை என்று அவரது தாய் காவல்துறையிடம் வாதத்தை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே உறவினர்களிடம் பெறப்பட்ட மரபணு (டி.என்.ஏ) உதவியுடன் செய்யப்பட்ட பரிசோதனையில் செப்டிக் டேங்கில் இருந்து கிடைத்த எலும்புக் கூடு, காணாமல் போன மாடசாமியுடையதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
மாடசாமியை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியபோது அவரது நெருங்கிய உறவினர் பேச்சியம்மாள் மீது சந்தேகம் வந்துள்ளது.
காவல்துறை விசாரணையில், லட்சுமணனின் வீட்டில் பேச்சியம்மாள் என்ற பிரியா (24) என்பவர் குத்தகைக்கு குடியிருந்ததும், சுமார் 8 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு கோயம்புத்தூருக்கு சென்றதும் தெரிய வந்துள்ளது.
மாடசாமி காணாமல் போன நேரத்தில் பேச்சியம்மாள் வெளியூர் சென்றது காவல்துறைக்கு சந்தேகத்தை உருவாக்கியது.
தொடர்ந்து பேச்சியம்மாளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாடசாமியை அவர் கொலை செய்து செப்டிக் டேங்கில் உடலை மறைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை
பேச்சியம்மாளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் குடும்பத் தகராறு காரணமாக தற்போது அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது மாடசாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து பிபிசியிடம் பேசிய தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எ.த. சாம்சன், "கொலை செய்யப்பட்ட மாடசாமியின் வீட்டின் எதிரில்தான் கொலையாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள பேச்சியம்மாளின் வீடு அமைந்துள்ளது.
இருவரும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்துப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் பேச்சியம்மாளுக்கும் மாடசாமிக்கும் இடையே திருமணத்திற்கு வெளியிலான உறவு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மாடசாமி குழந்தைகளை விட்டுவிட்டு பேச்சியம்மாளை தன்னுடன் வந்துவிடும்படி வற்புறுத்தத் துவங்கியுள்ளார். கணவனையும் விவாகரத்து செய்ய வற்புறுத்தியுள்ளார். ஆனால் பேச்சியம்மாள் குழந்தைகளை விட்டுவிட்டு வர மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மாடசாமி பேச்சியம்மாளை மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதம் மாடசாமியை தனது வீட்டில் வைத்து தலையணையால் அழுத்திக் கொலை செய்துள்ளார் பேச்சியம்மாள்.
அவரது தாய் மாரியம்மாள் (42) மற்றும் 17 வயது சகோதரனுடன் சேர்ந்து உடலை வீட்டின் பின்பகுதியில் உள்ள செப்டிக் டேங்கில் மறைத்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளார்," என்று தென்காசி மாவட்ட எஸ்.பி., சாம்சன் கூறினார்.
இதையடுத்து இலத்தூர் போலீசார், பேச்சியம்மாள் அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
மாடசாமியின் தாய் ராமலட்சுமி இது தொடர்பாகப் பேசும்போது, பேச்சியம்மாள் தன மகனை கொலை செய்தார் என நம்ப முடியவில்லை என்றார்.
"என்னுடைய மகன் காணாமல் போன நேரத்தில்தான் என் மகளுக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அந்தத் திருமணத்தில் பேச்சியம்மாளும் அவரது குடும்பத்தினரும் வந்து கலந்து கொண்டனர். அவர்கள் எப்படி என் மகனைக் கொலை செய்து அப்படி வந்து இயல்பாக கல்யாணத்தில் கலந்து கொண்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இதேபோல மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் 2 தினங்களுக்கு முன்பு நடந்த கொலையில் தன்னுடைய காதலியைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை அப்புறப்படுத்தி உள்ளார்.
மும்பையிலிருந்து ஒரு மணிநேரம் பயணிக்கக்கூடிய தொலைவில் அமைந்துள்ள மீரா ரோடு சிட்டியில் அந்தக் கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது.
36 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண் அவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்துகொண்டிருந்த அவரது காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணைக் கொலை செய்த பிறகு அவரது சடலத்தை வெட்டி அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
புதன்கிழமையன்று (ஜூன் 7), அவர்களது குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியிலும் காதல் விவகாரத்தில் கொடூரமான கொலை அரங்கேறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












