ஐபிஎல் ஏலம் 2023: வரலாறு படைத்த சாம் கரன்; கவனிக்க வைத்த 'டாப் 3' வீரர்கள்

சுட்டிக்குழந்தை என சி.எஸ்.கே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சாம் கரன், இன்று ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் எனும் வரலாறை படைத்திருக்கிறார். கொச்சியில் நடைபெற்ற 2023 ஐபிஎல் ஏலத்தில் கடுமையான போட்டிகளுக்கிடையே 18.50 கோடி ரூபாய்க்கு சாம் கரணை ஏலம் எடுத்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன டாப் - 3 வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. சாம் கரன் - ரூ.18.50 கோடி

சாம் கரனின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய். முதலில் ஏலம் கேட்டது மும்பை இந்தியன்ஸ். களத்தில் குதித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 6 கோடி ரூபாய் வரை இரு அணிகள் மட்டுமே மோதின. பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலப்போட்டியில் குதித்தது.

பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சாம் கரனுக்காக போட்டிப்போட்டன. இறுதியில் 18.50 கோடி ரூபாய்க்கு சாம் கரனை வென்றது பஞ்சாப் அணி. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனை படைத்தார் சாம் கரன்.

2022 டி20 உலக கோப்பையை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் இங்கிலாந்தின் சாம் கரன். பாகிஸ்தானை ரன் குவிக்க விடாமல் செய்து முக்கிய விக்கெட்களை கைப்பற்றிய இடது கை பந்துவீச்சாளர் சாம் கரன் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மட்டுமின்றி தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதையும் வென்றார். முதல் முறையாக ஒரு பவுலராலும் தொடர் நாயகன் விருதை வெல்ல முடியும் என நிரூபித்தார். பிப்ரவரி 2022ல் நடைபெற்ற மெகா ஏலத்தில் காயம் காரணமாக சாம் கரண் பங்கெடுக்கவில்லை. அது ஒருவகையில் அவருக்கு நல்லதாகவே அமைந்திருக்கிறது. 2019-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமானார் சாம் கரன் 2020, 2021 சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடினார்.

2. கேமரோன் க்ரீன் - ரூ. 17.5 கோடி

ஏப்ரல் 2022ல் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமான அதிரடி ஆல்ரவுண்டருக்கு இன்றைய ஏலத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. 2 கோடி அடிப்படையில் விலையில் இருந்து ஏலம் தொடங்கியது. பெங்களூரு, மும்பை, டெல்லி அணிகள் போட்டிப்போட்டன. இறுதியில் 17.5 கோடி ரூபாய்க்கு கேமரோனை வாங்கியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2வது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

23 வயதான கேமரோன் க்ரீன், இதுவரை 8 முறை மட்டுமே சர்வதேச டி20 போட்டியில் ஆடியிருக்கிறார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 173.75. இதில் 2 அரைசதங்களும் அடங்கும். அதுவும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலேயே அவர் விளாசியிருந்தார். ஒரு போட்டியில் 30 பந்துகளில் 61 ரன்களும் மற்றொன்றில் 21 பந்துகளில் 52 ரன்களும் குவித்திருந்தார். “2 - 3 ஆண்டுகளாகவே க்ரீனை கவனித்து வருகிறோம். அவர்தான் எங்களுக்கு சரியான இருப்பார் என நினைத்தோம். இளம் வீரர்களை வாங்க முனைப்பு காட்டுகிறோம்” என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்

3. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி

2022 டி20 உலக் கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஒரு கிரிக்கெட் ஃபார்மட்டாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் ஸ்டோக்ஸ் வல்லவர். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைத்தேர்ந்தவர்.

2022 மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் அணியால் கழற்றிவிடப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என கணிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் இருந்து ஏலத்தொகையை எகிற வைத்து 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வந்து சேர்ந்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

பெங்களூரு, ராஜஸ்தான், லக்னெள, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் பென் ஸ்டோக்ஸை வாங்க ஆர்வம் காட்டின. விடாப்பிடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக தொகை கொடுத்து அவரை ஏலம் எடுத்திருக்கிறது. சென்னை அணியால் வாங்கப்பட்டதை தொடந்து இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: