சிவகாசி: இருவேறு பட்டாசு ஆலை விபத்துகளில் 14 தொழிலாளர்கள் பலி - என்ன நடந்தது?

சிவகாசி பட்டாசு விபத்து
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தீபாவளி நெருங்கும் வேளையில் தமிழ்நாட்டில் பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில் சிவகாசி அருகே நேரிட்ட இருவேறு பட்டாசு ஆலை விபத்துகளில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேரிட்டது எப்படி?

சிவகாசியில் 1,085 நிரந்த பட்டாசு ஆலைகள் அரசின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருப்பதால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை உரிமையாளர்கள் வேகப்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய 4 நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் இருக்கக் கூடியப் பட்டாசு ஆலைகளுக்கு திடீர் ஆய்வு நடத்தி, விதிமீறல் இருந்தால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றன.

இருவேறு விபத்துகளில் 14 தொழிலாளர்கள் பலி

சிவகாசி அருகே ரெங்கபாளையம் எம்.புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கனிஷ்கர் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் பட்டாசு விபத்து ஏற்பட்டதாக தகவல் சிவகாசி தீயணைப்பு துறைக்கு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயிணை கட்டுப்படுத்த முயன்றனர்.

ஆனால், பட்டாசு ஆலையின் ஒரு அறையில் அதிகளவு பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தால் அந்த அறை முழுவதும் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வி, பஞ்சவர்ணம், மகாதேவி, முனீஸ்வரி, தங்கமலை, அனிதா உள்ளிட்ட 12 பெண் தொழிலாளர்கள் பாலமுருகன் என்ற ஒரு ஆண் தொழிலாளர் உட்பட 13 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகினர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பொன்னுத்தாயி, சின்னத்தாயி ஆகிய இரு பெண்கள் தொழிலாளர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து நிகழ்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாக சிவகாசி அருகே சிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் போது ஏற்பட உராய்வால் வெடி விபத்து நிகழந்து வேம்பு என்ற தொழிலாளி பலியாக்கினார்.

சிவகாசி பட்டாசு விபத்து

அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை கண்காணித்து இருந்தால் இந்த பட்டாசு ஆலை விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று மகளை பட்டாசு விபத்தில் இழந்த முத்துராசு கூறுகிறார்.

"எனது மகளும் அவரது கணவரும் இந்தப் பட்டாசு ஆலையில் தான் பணிபுரிந்தனர். எனது மகள் லட்சுமி(28) பட்டாசு ஆலையில் கடந்த ஓராண்டாக பணி செய்து வந்தார். அவர் சிறிய ரக வெடிகளை பெட்டியில் அடுக்கி வைக்கும் பணியை செய்து வந்தார்.

அவரது கணவர் இதே பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். பட்டாசு விபத்து ஏற்படும் சமயத்தில் கணவர் வெளியே சென்றுவிட்டதால் உயிர் பிழைத்துவிட்டார். ஆனால், எனது மகளை பட்டாசு ஆலை விபத்தில் பறிகொடுத்த விட்டேன்.

பட்டாசு ஆலைகளுக்கு அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வை நடத்தி குறைகளை சீர் செய்து இருந்தால் எனது மகளை பட்டாசு விபத்திற்கு பறிகொடுத்து இருக்க மாட்டேன்.

எனது மகளுக்கு 11 வயதில் ஒரு மகனும் 9 வயதில் மற்றொரு மகனும் இருக்கின்றனர்.

அவர்களது வாழ்க்கையே இனி கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு உதவ வேண்டும்", என்று கேட்டுக் கொண்டார்.

சிவகாசி பட்டாசு விபத்து
படக்குறிப்பு, முத்துராசு, மகளை பறிகொடுத்தவர்

அரை மணி நேரத்திற்குள் 2 விபத்துகள்

அரை மணி நேரத்திற்குள் இரு வெடி விபத்து அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத்துறையினர் கூறுகின்றனர்.

சிவகாசி தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு பிற்பகல் ஒரு மணி முதல் 1:30 மணிக்குள்ளாக இந்த இரு பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பான அழைப்புகள் வந்தன. முதல் விபத்தில் வெடி மருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழந்து. அதில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 13 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் அரசு விதிகளை மீறி ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமான பட்டாசுகளை சேமித்து வைத்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என மீட்பு பணியில் இருந்த வீரர் கூறினார்.

சிவகாசி பட்டாசு விபத்து

மாவட்ட ஆட்சியர் கூறுவது என்ன?

கடைக்கு அனுமதி பெற்று பட்டாசுகளை அதிக அளவில் சேமித்து வைத்ததே 13 தொழிலாளர்கள் பலியாக காரணம் என கூறுகிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப ஜெயசீலன்.

பட்டாசு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்ததற்காக அருகிலேயே வெடித்து பார்த்த போது அதில் இருந்து தீ பொறி பட்டாசுகள் மீது பட்டதால் இந்த தீ விபத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் அனுமதி பெற்றதைவிட அதிகமான அளவில் பட்டாசுகளை பேக்கிங் செய்யும் அறையில் வைத்தது. அங்கு அந்த அறை இருக்கக் கூடாது விதியை மீறி பட்டாசு ஆலையின் உரிமையாளர் செயல்பட்டது தெரியவந்தது.

சிவகாசி பட்டாசு விபத்து
படக்குறிப்பு, வீ.ப ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

டி .ஆர்.ஓ தலைமையில் விசாரணைக் குழு

சிவகாசியில் நிகழ்ந்த இரு பட்டாசு விபத்துகளை விசாரணை செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குழு விரிவான விசாரணையை செய்து நாளை இந்த விபத்து தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யும்.

பட்டாசு ஆலைகள் கண்காணிப்பு குழு அதிகரிப்பு

சிவகாசி பகுதியில் செயல்பட்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை கண்காணிப்பதற்காக வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகள் அடங்கிய 4 குழுக்கள் உள்ளன. இவை ஏற்கனவே மாவட்டம் முழுவதிலும் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து வருகின்றன.

தற்பொழுது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு ஆலைகள் விதிமீறல்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் விதமாக பட்டாசு ஆலைகளை கண்காணிக்க மேலும் 4 குழுக்கள் விரைவாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த 8 குழுக்கள் மாவட்ட முழுவதிலும் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வை நடத்தி விபத்துகளை தவிர்ப்பார்கள் என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)