தஹாவூர் ஹுசைன் ராணா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள இவர் யார்? மும்பை தாக்குதலில் இவரின் பங்கு என்ன?

பட மூலாதாரம், ANI
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோதி, வியாழக்கிழமை (பிப்ரவரி 13) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இதன்பின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்", என்று கூறினார்.
ராணாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா நீண்டகாலமாக அமெரிக்காவிடம் கோரி வந்தது. ஒரு கட்டத்தில், தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்த முடிவு குறித்து ராணா மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- மும்பை 9/11 தாக்குதல்: அஜ்மல் கசாபை அடையாளம் காட்டிய சிறுமியின் இப்போதைய நிலை
- 26/11 மும்பை தாக்குதல்: நடந்தது என்ன? விவரிக்கும் காவல்துறை அதிகாரி
- கேட்வே ஆஃப் இந்தியா: பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கம் மற்றும் முடிவின் அடையாளமாக நிற்கும் நினைவுச் சின்னம்
- இந்திய சினிமாவுக்கு முதல் சூப்பர் ஸ்டாரை தந்த 'பேய் பங்களா' - அங்கே குடியேறியதும் என்ன நடந்தது?

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடியுரிமை பெற்றவரான ராணா தற்போது அமெரிக்காவில் சிறையில் உள்ளார்.
தனது நண்பர் டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் இணைந்து மும்பை தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும், டென்மார்க்கில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் 2013 ஆம் ஆண்டு தஹாவூர் ராணா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்குகளில், அமெரிக்க நீதிமன்றம் தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஹாவூர் ஹுசைன் ராணா யார்? மும்பை பயங்கரவாத தாக்குதலில் அவரது பங்கு என்ன? மற்ற வழக்குகளில் அவர் ஏன் தண்டிக்கப்பட்டார்?

பட மூலாதாரம், Getty Images
யார் இந்த தஹாவூர் ராணா?
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று இரவு மும்பையில் 10 பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 164 பேர் உயிரிழந்தனர். மற்றும் 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இவர்கள் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்று இந்தியா குற்றம் சாட்டியது. இந்த தாக்குதலில் உயிர் தப்பிய அஜ்மல் கசாப்புக்கு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க குடிமகனான டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு எதிராக இந்திய அமைப்புகள் நடந்தி வந்த விசாரணையில், ஒரு பெயர் மட்டும் வலுவாக ஒலித்தது. அதுதான் தஹாவூர் ஹுசைன் ராணாவின் பெயர்.
அமெரிக்காவின் சிகாகோவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், நான்கு வாரம் நடந்த விசாரணையின்போது தஹாவூர் ராணா பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகின.
தஹாவூர் ராணாவுக்கு எதிராக ஹெட்லி அரசுத்தரப்பு சாட்சியாக மாறியது, இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் வம்சாவளி
தஹாவூர் ஹுசைன் ராணா பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் மருத்துவப் படையில் சேர்ந்தார்.
அவரது மனைவியும் ஒரு மருத்துவர். இந்த தம்பதியினர் 1997 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தனர், 2001 ஆம் ஆண்டு அவர்கள் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றனர்.
2009 ஆம் ஆண்டு கைது செய்யப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு குடிவரவு மற்றும் பயண நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.
டேவிட் கோல்மன் ஹெட்லியுடனான அவரது நட்பு, மீண்டும் சிகாகோவில் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மும்பையில் தாக்குதல் நடத்த ஹெட்லி தயாராகத் தொடங்கியபோது, 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அவர் பலமுறை மும்பைக்கு வந்துள்ளார்.
இந்தியாவுக்கு அடிக்கடி வருவதால் ஏற்படும் சந்தேகத்தைத் தவிர்க்க, மும்பையில் ராணாவின் பயண நிறுவனத்தின் கிளையை ஹெட்லி தொடங்கினார்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் உத்தரவின் பேரில் ராணா இதையெல்லாம் செய்கிறார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மும்பையில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க குடிமக்களை கொல்ல உதவியது உட்பட 12 குற்றங்களுக்காக ராணா தண்டிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Harper Collins
எஃப்.பி.ஐ-யிடம் சிக்கியது எப்படி?
2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணா மற்றும் ஹெட்லி ஆகிய இருவரும் சிகாகோ விமான நிலையத்தில் எஃப்.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் டென்மார்க்கில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தப் போவதாக எஃப்.பி.ஐ அப்போது தெரிவித்திருந்தது.
ஜில்லான்ட்ஸ்-போஸ்டன் செய்தித்தாளின் அலுவலகத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் படங்களை இந்த செய்தித்தாள் வெளியிட்டது.
கைது செய்யப்பட்ட பிறகு நடந்த விசாரணையில், மும்பை பயங்கரவாத தாக்குதலிலும் இவ்விருவருக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது.
இதனால் இரண்டு தனித்தனி பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டங்களில் ஈடுபட்டதற்காக ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட பின்னர் ராணா அளித்த வாக்குமூலத்தில், பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்களில் ஹெட்லி கலந்துகொண்டதாக ஒப்புக்கொண்டார்.
ஹெட்லியின் ஒப்புதல் வாக்குமூலம்
கடந்த 2006 ஆம் ஆண்டு ஹெட்லியும் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளும் மும்பையில் ஒரு குடியேற்ற அலுவலகம் திறப்பது குறித்து ஆலோசித்தனர் என்று சிகாகோவில் நடைபெற்ற விசாரணையில் அட்டர்னி ஜெனரல் கூறினார்.
இதற்காக சிகாகோ சென்று தனது பள்ளி நண்பர் ராணாவிடம் இந்தியாவில் சாத்தியமான இடங்களை தேடுவது குறித்து ஆலோசித்ததாக வாக்குமூலம் அளித்ததாகவும் அட்டர்னி ஜெனரல் கூறினார்.
ராணாவிடம் மும்பையில் முதல் உலக குடியேற்ற சேவை அலுவலகத்தைத் திறக்குமாறு ஹெட்லி கேட்டுக்கொண்டார். இதனால் அவர்கள் அந்த அலுவலகத்தை தாக்குதல் நடத்த எடுக்கும் நடவடிக்கைகளை மறைக்க ஒரு கவசமாக பயன்படுத்த முடியும் என்று கருதினர்.
"2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம், நான் ராணாவை சந்திக்க சிகாகோ சென்றேன். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு என்னிடம் ஒப்படைத்த திட்டம் (மும்பை பயங்கரவாத தாக்குதல்) குறித்து அவரிடம் விளக்கினேன்", என்று ஹெட்லி கூறினார்.
"மும்பையில் முதல் உலக குடியேற்ற சேவை மையம் அமைக்கும் எனது திட்டத்துக்கு ராணா ஒப்புதல் அளித்தார், அதற்காக அவர் ஐந்து ஆண்டுகளுக்கு வணிக விசா பெற்றார்" என்று அரசு தரப்பு சாட்சியான ஹெட்லி கூறினார்.
இருப்பினும், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் பேசிய ஹெட்லி, மும்பை தாக்குதல்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் ராணாவுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததாக கூறியிருந்தார்.

பட மூலாதாரம், FBI
'ஏமாற்றும் மற்றும் சூழ்ச்சிக்கார மனிதன்'
"பயங்கரவாதிகளையும் அவர்களின் அமைப்புகளையும் நாங்கள் கண்காணிக்கும் விதத்தில், அவர்களுள் வன்முறை சதித்திட்டங்களைச் செய்பவர்களை தூரத்தில் இருந்து பின்தொடர்வோம் என்பதை இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது", என்று தேசிய பாதுகாப்புக்கான உதவி அட்டர்னி ஜெனரல் லிசா மொனாகோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"ஹெட்லி தாக்குதலுக்கு திட்டமிடுகிறார் என்பதை அறிந்த தஹாவூர் ராணா அமெரிக்காவில் உள்ள தனது தளத்தில் இருந்து அவருக்கு உதவினார்" என்று லிசா மொனாக்கோ கூறினார்.
ஹெட்லியும், ராணாவும் அரசு தரப்பு சாட்சியாக ஆவதற்கு முன்பு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்று அப்போது ராணாவின் வழக்கறிஞர் சார்லி ஸ்விஃப்ட் தெரிவித்தார்.
ராணா போன்ற நேர்மையான மனிதரை சிக்க வைக்கும் வகையில் ஹெட்லி செயல்படுகிறார் என்றும் ராணாவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
"ஹெட்லி ஒரு சதி திட்டம் தீட்டுபவர் மற்றும் ராணாவை முட்டாளாக்கிய கைதேர்ந்த சூழ்ச்சிக்காரர்" என்று சார்லி ஸ்விஃப்ட் கூறினார்.
ராணாவும் ஹெட்லியும் சிறுவயது முதலே நண்பர்கள் என்பதும், ஐந்து வருடங்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும் உண்மைதான். இருவரும் முதல் முறையாக 2006 ஆம் ஆண்டு சிகாகோவில் சந்தித்தனர்.
ராணாவை விட ஹெட்லி லஷ்கர்-இ-தொய்பாவுக்கு மிகவும் ஆதரவாக செயல்படுவது சிகாகோ நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
2005 ஆம் ஆண்டு மும்பையிலும் கோபன்ஹேகனிலும் ஒரே நேரத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டிருந்தது என்பது அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் இருந்து தெரிவாகியது. இந்த இரண்டு திட்டங்களிலும் ராணாவுக்கு பங்கு இருந்தது.
மும்பை தாக்குதலில்போது, ஹெட்லி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு தாக்குதலை நடத்த உதவியதில் மட்டுமே அவரது பங்களிப்பு இருந்தது.
ஆனால், டென்மார்க் தாக்குதலைப் பொறுத்தவரை, இருவரும் தாங்களாகவே தாக்குதலை நடத்தத்ய் திட்டமிட்டு, அதைச் செயல்படுத்த டென்மார்க்கிற்குச் செல்லவிருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னதாக அவர் சிகாகோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












