குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டி லாரி மீது மோதிய நபர் - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
(தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 14/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்)
சென்னையில் மாநகர பேருந்தை குடிபோதையில் ஒருவர் ஓட்டிச் சென்று லாரி மீது மோதியதாக, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், "கைது செய்யப்பட்ட நபரின் பெயர் லூர்துசாமி ஆப்ரஹாம் (33). அவர் புதன்கிழமை அன்று விடிகாலை 2:30 மணி அளவில் திருவான்மியூர் பேருந்து பணிமனைக்கு சென்றுள்ளார். யாரும் பாராத நேரத்தில் பிராட்வே முதல் கோவளம் வரை செல்லும் பேருந்தான 109-இல் ஏறி அதனை கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஓட்டிச் சென்றுள்ளார். அக்கறை சுங்கச்சாவடி தாண்டி அவர் இந்த பேருந்தை ஒரு லாரியின் மீது மோதியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த லாரி ஓட்டுநர் ஆப்ரஹாமுடன் வாக்குவாதம் நடத்தியபோது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்ததால் அவர் காவல்துறையினரிடம் இது பற்றி தெரிவித்துள்ளார்.
ஆப்ரஹாமை கைது செய்து விசாரணை நடத்தியபோது நடத்துநர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே பேருந்தை கடத்தி, அதனை ஓட்டிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். ஆப்ரஹாம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஓட்டியபடி மடிக்கணினியில் பணியாற்றிய பெண்ணுக்கு அபராதம்
பெங்களூருவில் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, தினத்தந்தி நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
"பெங்களூருவில் கார் ஸ்டியரிங்கில் மடிக்கணினி வைத்து கார் ஓட்டிக்கொண்டே வேலை பார்த்த பெண் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதனைத்தொடர்ந்து, அந்த காரின் பதிவு எண்ணை வைத்து அந்த பெண்ணை அடையாளம் கண்ட போக்குவரத்து காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
பெங்களூருவில் ஆர்.டி.நகர் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் அந்த பெண் கார் ஓட்டியபடி மடிக்கணினியில் பணிபுரிந்தது தெரியவந்தது. மேலும், ஆர்.டி.நகர் போக்குவரத்து காவல்துறை, அந்த பெண்ணையும் அடையாளம் கண்டனர். அந்த பெண் ஐ.டி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போக்குவரத்து விதிகளை மீறி கார் ஓட்டியதற்காக அந்த பெண் மீது ஆர்.டி.நகர் போக்குவரத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணுக்கு 1,000 ரூபாய் அபாராதமும் விதித்துள்ளனர்", என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், FACEBOOK/ILAYARAAJA
'ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இருந்தது இல்லை' - இளையராஜா
இசை வெளியீட்டு உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 13) ஆஜராகி இளையராஜா சாட்சியம் அளித்தார். அதில் பேசிய அவர் 'இசையமைப்பது மட்டுமே எனது தொழில். ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இருந்தது இல்லை', என்று தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தது. அதில், 'இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்தும் இசை நிறுவனத்திடம் இருந்து எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, எங்களது அனுமதியின்றி அந்த பாடல்களை யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்ததாக அச்செய்தி கூறுகிறது.
இந்த வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இளையராஜா நேற்று ஆஜரானார். அதில் அவரிடம் 'இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு என்னவாக இருந்தீர்கள்? கார், பங்களா போன்றவற்றை எந்த ஆண்டு வாங்கினீர்கள்? குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீச் ரிசார்ட் எப்போது வாங்கினீர்கள்?' போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த இளையராஜா 'இசையமைப்பது மட்டுமே எனது தொழில். இசை மீதான ஆர்வத்தால், ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இருந்தது இல்லை. அதனால், எந்த பொருட்களை எப்போது வாங்கினேன் என்பது தெரியாது. திரைப்படங்களில் இசையமைக்கும்போது, இயக்குநர்களுடன் மட்டுமே உரையாடல்கள் இருக்கும். தயாரிப்பாளர்களுடன் எந்த தொடர்பும் இருந்தது இல்லை. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் நான் தலையிடுவது இல்லை. எனக்கு சொந்தமாக அலுவலகம், ஸ்டுடியோகூட இல்லை. பெயர், புகழ், செல்வம் என அனைத்தும் சினிமா தந்தது' என்று தெரிவித்தார்", என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எண்டோஸ்கோபி நுட்பத்தில் மார்பகத்தை அகற்றாமல் புற்றுநோய் கட்டி அகற்றம்
சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மார்பகத்தை அகற்றாமல் எண்டோஸ்கோபி முறையில் கட்டியை அகற்றி அவரை குணப்படுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், 'மார்பகப் பகுதியில் ஒரு கட்டியுடன் 60 வயதான ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அது புற்றுநோய் பாதிப்பு என்று தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அந்த பெண்ணின் தோள்பட்டைக்கு அருகே சிறிய கீறலிட்டு அதன் மூலம் எண்டோஸ்கோபி குழாயை உள் செலுத்தி அந்த புற்றுநோய் கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது என்றும் அதனுடன் புற்றுநோய் செல் பாதித்த நிணநீர் பகுதியும் நீக்கப்பட்டது என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. இதுபோன்ற பாதிப்புகளுக்கு பெரும்பாலும் மார்பகத்தையே அகற்றும் சிகிச்சையே நடைமுறையில் உள்ளது என்கிறது அச்செய்தி.
"ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற சில நாடுகளில்தான் மார்பகத்துக்கு எந்த பாதிப்புமின்றி கட்டியை அகற்றும் சிகிச்சை வசதிகள் உள்ளன. அந்த வகையில் தற்போது இங்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அந்த பெண் அடுத்த நாளே வீடு திரும்பினார்" என்று அந்த தனியார் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை நிபுணர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"வெளிப்படைத்தன்மையுடன் சமமான வரி கொள்கை இலங்கைக்கு பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்கும்" - அமெரிக்கா
வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
"அமெரிக்க தூதுக்குழுவினர் புதன்கிழமை (பிப்ரவரி 12) தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாந்துவை தொழில் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்முறைக்கு திறம்பட பங்களிக்க தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கும் தனது பங்களிப்பை வழங்க முடியும் என்பதுடன் இந்த நாட்டின் அபிவிருத்தி செயல்பாட்டுக்கு அமெரிக்க மனித வளத்தை விணைத்திறன் மிக்கதாக தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கு பங்களிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் திறன் அமெரிக்க வர்த்தகர்களுக்கு இருப்பதாகவும் அது இலங்கையின் அபிவிருத்தியின் முன்னுரிமை ஒழுங்கின் படி செய்யப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவோம்.
வரிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக எடுக்கப்படும் கொள்கைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தயாரிப்பது முக்கியமாகும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்புறவை விருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் இதற்காக முடியுமான ஒத்துழைப்பை வழங்குவதாக இதன்போது அமைச்சர் தெரிவித்தார்", என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












