You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோயில் இருந்து உங்கள் உயிரைக் காப்பாற்றும் பிரா
- எழுதியவர், அய்லின் யாசன்
- பதவி, பிபிசி துருக்கிய சேவை
நீங்கள் தேநீர் அருந்தும்போது கூட உங்கள் மார்பகங்களில் உள்ள கட்டிகளைக் கண்டறியும் அல்ட்ராசவுண்ட்(Ultrasound) சாதனத்தை உங்கள் ப்ராவின் மேல் அணிந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.
துருக்கியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர். ஜனன் தாடெவிரென் தனது குழுவினருடன் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின்(Massachusetts Institute of Technology ) (எம்ஐடி) ஆய்வகத்தில் இதேபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.
மார்பக புற்றுநோயால் இறந்த தனது அத்தையின் நினைவாக இந்த கருவியை அவர் தயார் செய்துள்ளார்.
மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து காரணமாக அடிக்கடி மேமோகிராம் (mammograms) செய்ய அறிவுறுத்தப்பட்ட பெண்களுக்கு இந்த சாதனம் உதவியாக இருக்கும். அத்தகைய பெண்கள் இந்த கருவி மூலம் இரண்டு மேமோகிராம்களுக்கு இடையில் கூட மார்பக புற்றுநோயை கண்காணிக்க முடியும்.
புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் மார்பக புற்றுநோயால் தான் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில், 23 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும், 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.
பெண்களின் இறப்புக்கு மார்பக புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாகும்.
அமெரிக்காவின் கேன்சர் சொசைட்டி, மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால், நோயாலிகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஐந்தாண்டுகளில் 99 சதவீதமாகும் எனக் கூறுகிறது.
தாமதமாக கண்டறியப்படும் பெண்களின் உயிர் பிழைப்பு விகிதம் 22 சதவீதம் மட்டுமே என்பதால், இந்த சாதனம் உயிர் பிழைப்பு விகிதத்தை அதிகரிக்க உதவும் என்று டாக்டர் டாடெவிரென் கூறுகிறார்.
சாதனம் எவ்வாறு செயல்படுகிறது?
எம்ஐடியின் மெட்டீரியல் விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் ஜனன் தாடெவிரென், மருத்துவமனையில் தனது அத்தையின் அருகில் அமர்ந்திருந்தபோது இந்த சாதனத்தை உருவாக்க வேண்டும் எனத் தோன்றியது.
அவரது அத்தை தனது வழக்கமான சோதனைகளை செய்து வந்தார், ஆனால் ஒரு நாள் அவர் வேகமாக வளர்ந்து வரும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஆறு மாதங்களுக்குப் பிறகு இறந்தார்.
அவர் கண்டுபிடித்துள்ள சாதனத்தில், ஆறு தேன் கூடு வடிவ ஸ்லாட்டுகள் உள்ளன, அதில் சிறிய அல்ட்ராசவுண்ட் கேமராவை இணைக்க முடியும்.
அந்த கேமராவை வெவ்வேறு ஸ்லாட்டுகளில் வைப்பதன் மூலம், மார்பகத்தை எல்லா பக்கங்களிலும் இருந்து பரிசோதிக்க முடியும். அதன் பயன்பாட்டிற்கு அல்ட்ராசவுண்ட் ஜெல் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
0.3 செ.மீ அளவிலான சிறிய கட்டிகளைக் கூட அந்த சாதனத்தின் மூலம் கண்டறிய முடியும் என்று டாக்டர் டாடெவிரென் கூறுகிறார். ஆரம்பத்தில் உருவாகும் கட்டிகளின் அளவு ஒன்றுதான், என்றும் அவர் கூறுகிறார்.
"இது எந்த வகையான அசாதாரணத்தையும் கண்டறிவதில் மிகவும் துல்லியமானது" என்று அவர் விளக்கினார்.
மேமோகிராம் என்றால் என்ன?
மார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கான பொதுவான முறை மேமோகிராம் ஆகும். இதில், மார்பகத்தின் எக்ஸ்ரே மூலம் கட்டிகள் கண்டறியப்படுகின்றன.
ரேடியோகிராஃபர் மார்பகங்களை ஒவ்வொன்றாக, இரண்டு தட்டையான தட்டுகளுக்கு இடையே இயந்திரத்தில் வைக்கிறார்.
இந்த தட்டுகள் மார்பகங்களை சில கணங்களுக்கு அழுத்துகின்றன. இதன் காரணமாக, பெண்கள் லேசான அழுத்தத்தை உணர்கிறார்கள், மேலும் அவர்கள் சங்கடமாகவும் உணரலாம்.
சில பெண்கள் இந்த செயல்முறையை வலிமிகுந்ததாகக் காணலாம் ஆனால், செயல்முறை மிக விரைவாக முடிக்கப்படுகிறது.
இருப்பினும், மேமோகிராம் செய்து கொள்வதும் விலை உயர்ந்தது. பல நாடுகளில் அதன் செலவு அரசாங்க சுகாதார அமைப்பு சார்பில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
சில பெண்கள் ஏன் வலியை உணர்கிறார்கள்?
ஹெலன் யூல், ஒரு ரேடியோகிராஃபர் மற்றும் இங்கிலாந்தில் உள்ள கன்சல்டேட்டிவ் சொசைட்டி ஆஃப் ரேடியோகிராஃபர்களின்(Consultative Society of Radiographers) தலைவர்.
"ஒவ்வொருவரின் மார்பகங்களும் வேறுபட்டவை, அவற்றில் உள்ள சுரப்பிகள் மற்றும் கொழுப்பின் அளவும் மாறுபடும்" என்று அவர் விளக்குகிறார்.
கொழுப்பு நிறைந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களை விட அதிக சுரப்பி திசுக்களைக் கொண்ட பெண்கள் மேமோகிராம் போது அதிக அசௌகரியத்தை அனுபவிக்கலாம்.
மேலும், ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) காரணமாக மார்பகங்கள் உணர்திறன் அடையலாம்.
மேமோகிராம் செய்து கொள்ளும் அனுபவத்தைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் இது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று யூல் கூறுகிறார்.
மேமோகிராம் போது அசௌகரியத்தை தவிர்க்க சில எளிய வழிகள் உள்ளன. உதாரணமாக, மாதவிடாய் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தால், மேமோகிராம் செய்துகொள்வதைத் தவிர்க்கலாம், அல்லது மேமோகிராமிற்கு முன் பாராசிட்டமால் உட்கொள்ளலாம்.
இந்த சாதனம் யாருக்காக?
ஒரு மேமோகிராமிற்கும் மற்றொரு மேமோகிராமிற்கும் இடையில் மார்பக புற்றுநோய் உருவாகலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது இடைவெளி புற்றுநோய்(nterval cancer) என்று அழைக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் மொத்த நோயாளிகளில் 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்த வகை புற்றுநோயாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் உருவாகும் கட்டிகள் வழக்கமான பரிசோதனையின் போது காணப்படும் கட்டிகளை விட ஆபத்தானவை என்று எம்ஐடி குழு கூறுகிறது.
அத்தகைய சூழ்நிலையில், மார்பக புற்றுநோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு இந்த சாதனம் ஆரம்பத்தில் கொடுக்கப்படலாம்.
இரண்டு மேமோகிராம் அல்லது சுய பரிசோதனைக்கு இடையில் உருவாகும் கட்டிகளைக் கண்டறிய இது அவர்களுக்கு உதவும்.
ஆனால் இந்த சாதனம் ஏதேனும் அசாதாரணத்தை கண்டறிந்தால், மேமோகிராம் செய்ய வேண்டியது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எங்கே தயார் செய்யப்பட்டது?
அணியக்கூடிய சுகாதார சாதனங்களை தயாரிக்கும் பணியில் உள்ள எம்ஐடி குழு இந்த சாதனத்தை உருவாக்க ஆறரை ஆண்டுகள் ஆனதாகக் கூறுகின்றனர்.
இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் காப்புரிமை பெற்று, தற்போது மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு சாதனத்தின் விலை 1000 டாலர்கள் (சுமார் 83 ஆயிரம் ரூபாய்) ஆனால் வெகுஜன உற்பத்திக்குப் பிறகு விலை குறையும் என்று கண்டுபிடிப்பாளர்கள் கூறுகிறார்கள். இது நடக்க நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம்.
'தினமும் அதன் உதவியுடன் ஸ்கேன் செய்தால், ஒரு கப் காபிக்குக் குறைவாகவே செலவாகும்' என ஆய்வுக் குழு மதிப்பிடுகிறது.
வளரும் நாடுகளில் மார்பகப் புற்றுநோயால் அதிக இறப்பு விகிதத்திற்கு புற்றுநோயை தாமதமாகக் கண்டறிவதும், நல்ல சுகாதார வசதிகள் இல்லாததுமே காரணம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அதிக வருமானம் உள்ள நாடுகளில் ஐந்தாண்டு உயிர் பிழைப்பு விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது இந்தியாவில் 66 சதவீதமாகவும், தென்னாப்பிரிக்காவில் 40 சதவீதமாகவும் உள்ளது.
உடலின் மற்ற பாகங்களை ஸ்கேன் செய்யவும் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு விஞ்ஞானி தாடெவிரென் கர்ப்பமாக இருந்தபோது, தனது குழந்தையை ஸ்கேன் செய்ய பயன்படுத்தினார்.
“என் அத்தைக்கு வயது மிகவும் குறைவு. வயது 49 மட்டுமே. இப்படி உயிரை இழக்க நேரிடும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அவளும் அப்படிப்பட்ட பிரா அணிந்திருந்தால் என்ன?,” என்கிறார் தாடெவிரென்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)