மலைப்பாம்பு எண்ணெய் பக்கவாதத்தை போக்குமா? முதியவர் கைதானது ஏன்?

    • எழுதியவர், சு.மகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பாம்பை கொன்று எண்ணெய் தயாரித்த குற்றத்திற்காக முதியவர் ஒருவர் வனத்துறையால் கைது செய்யப்பட்டார்.

மாமிசம் மற்றும் தோலுக்காக பாம்புகள் கொல்லப்படுவது உண்டு. ஆனால் மருத்துவ பயன்பாட்டிற்காக மலைப்பாம்பு கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அரிதாகப் பார்க்கப்படுகிறது.

நாகர்கோவிலை அடுத்த களியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான பால சுப்பிரமணியன். இவர் மலைப்பாம்பை கொன்று எண்ணெய் காய்ச்சியதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

வனத்துறை அலுவலர்கள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, மலைப்பாம்பை பயன்படுத்தி அவர் காய்ச்சிய எண்ணெய் கிடைத்துள்ளது.

இதையடுத்து மலைப்பாம்பை வேட்டையாடிக் கொன்ற குற்றத்திற்காக அவர் மீது இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 9-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வனத்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பக்கவாத நோய்க்கு பாம்பு எண்ணெய்

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை என்கிறார் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அதிகாரி மு.இளையராஜா.

“பழைய ஆவணங்களையும் ஆய்வு செய்தேன், மலைப்பாம்பை வேட்டையாடியது தொடர்பாக இதற்கு முன்பும் எந்த வழக்கும் பதிவானதாகத் தெரியவில்லை," என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையால் அமைக்கப்பட்ட கிராம வனக்குழுவில் (Village Forest Committee) உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் அவரது ஊருக்குள் வந்த ஒரு மலைப்பாம்பை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு வனத்துறையோடு தொடர்பு இருப்பதால் அந்த மலைப்பாம்பை அவரிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

பாலசுப்பிரமணியனுக்கு பக்கவாதம் தொடர்பான பாதிப்புகள் இருந்துள்ளன. இதற்கு பாம்பு கொழுப்பைக் கலந்து எண்ணெய் தயாரித்து தடவினால் சரியாகும் என்ற நம்பிக்கையில் அவர் பாம்பை கொன்று அதன் கொழுப்பைப் பயன்படுத்தி எண்ணெய் தயாரித்துள்ளார்.

ஆனால், “அவர் மலைப்பாம்புகளை வேட்டையாடி விற்பனை செய்யும் நபர் கிடையாது,” என்கிறார் வனத்துறை அதிகாரி இளையராஜா.

ஆனால் கன்னியாகுமரி வன சரகத்திற்கு உட்பட்ட பணகுடி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளின் எல்லையோரப் பகுதிகளில் தனியார் பட்டா நிலங்களில் காற்றாலைகள் அமைந்துள்ளன.

இங்கு குடியிருப்புகள் அதிகம் இருப்பதில்லை. மேலும் மனிதர்கள் நடமாட்டமும் அதிகம் கிடையாது. எனவே இங்கும் காட்டுயிர்களின் நடமாட்டம் இருப்பதுண்டு. இப்பகுதிகளில் தொடர்ந்து உடும்பு (monitor lizard) வேட்டை நடைபெற்று வந்தது.

உடும்புக் கறி உண்பதால் இழுப்பு நோய் குணமாகும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவி வருகிறது. இதற்காக உடும்புகள் வேட்டையாடப்படுகின்றன.

" உடும்பை எல்லோராலும் எளிதாகப் பிடித்துவிட முடியாது. அதைப் பிடிப்பதற்கு என்று சிலர் இருந்தனர். அவர்கள் மீது தொடர்ச்சியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ததால் உடும்புகள் வேட்டையாடப்படுவது தற்போது குறைந்துள்ளது.

அதே போல் கடமான் (Sambar deer) வேட்டையாடப்படும் சம்பவங்களும் இங்கு நடைபெற்றுள்ளன. வனத்துறை சார்பில் போதிய சோதனைச் சாவடிகள் உள்ளதால் காட்டுக்குள் சென்று வேட்டையாடும் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன," என்கிறார் வனத்துறை அதிகாரி இளையராஜா.

மருந்துக்காக பாம்பை கொல்வது அரிதானது

"கடமான் போன்ற காட்டுயிர்கள் காட்டை ஒட்டியுள்ள பட்டா நிலங்களுக்கு சில நேரங்களில் தவறுதலாக வருவதுண்டு. அவ்வாறு வருபவை சில நேரங்களில் மாமிசத்திற்காக வேட்டையாடப்படுவது உண்டு," என்றார் மாவட்ட வன அதிகாரி இளையராஜா.

மருந்து எண்ணெய் தயாரிப்பதற்காக மலைப்பாம்பு கொல்லப்பட்ட சம்பவம் அரிதானதுதான் என்கிறார் வனக்காப்பு குற்றவியல் (Conservation Criminology) ஆராய்ச்சியாளரான ஷங்கர் பிரகாஷ்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் காட்டுயிர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வனத்துறை மற்றும் பழங்குடியினர் குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார் ஷங்கர் பிரகாஷ்.

அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “நஞ்சற்ற மலைப்பாம்புகள் இந்திய காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் அட்டவணை ஒன்றின் கீழ் வருபவை.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாரம்பரிய வைத்திய முறையில் மருந்துகள் தயாரிக்க காட்டுயிர்கள் கடத்தப்பட்டு, அவற்றின் உடல் பாகங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பாம்புகளைப் பொருத்தவரை அவற்றின் தோலுக்காக அல்லது வளர்ப்புப் பிராணியாக வீடுகளில் வளர்க்கத்தான் பெரும்பாலும் கடத்தப்படுகின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்பை மாமிசத்திற்காக கொல்லும் பழக்கம் உள்ளது," என்றார்.

பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் அயல்நாட்டு வகை பாம்புகள் (Ball Phyton), ஆமைகள் (Tortoise), குரங்குகள் (macaque), கிளிகள் உள்ளிட்டவை (exotic pets) இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக தாய்லாந்து நாட்டிலிருந்துதான் இந்த வகை விலங்குகள் இந்தியாவுக்கு அதிகம் கடத்தப்படுகின்றன. அவ்வாறு கடத்தி வரப்படுபவை பெரும்பாலும் செல்வந்தர்களின் வீடுகளில் வளர்ப்புப் பிராணியாக வளர்க்கப்படுவதற்குத்தான் கொண்டு வரப்படுகின்றன.

அயல்நாடுகளில் இருந்து விலங்குகள் (Exotic Species) இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வரப்படும்போது விமான நிலையங்களில் அவை சிக்குவதுண்டு.

அவ்வாறான நிகழ்வுகளின்போது, கடத்தல்காரர்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல் குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்வதோடு, கொண்டு வரப்படும் விலங்குளை மீண்டும் அந்த நாட்டிற்கே திரும்பி அனுப்புகின்றனர்," என்றார் ஷங்கர் பிரகாஷ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)