You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனி ஆளாக குறைந்த செலவில் பாதுகாப்பாக சுற்றுலா செல்வது எப்படி? எங்கே போகலாம்?
- எழுதியவர், மகாலட்சுமி. தி. ரா.
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிறு வயதில் நாம் அனைவரும் ஒருமுறையேனும் குடும்பத்தோடு ஊருக்கு அருகில் உள்ள கோவிலுக்கோ அல்லது சுற்றுலா தலத்திற்கோ ‘பிக்னிக்’ சென்றிருப்போம்.
புளி சாதம், சிப்ஸ், நொறுக்குத் தீனி, பொரிகடலை, பாய், தலையணை என அனைத்தையும் கட்டிக்கொண்டு அங்கு ஆற, அமர உண்டு மகிழ்ந்திருப்போம். அதன் பின் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறிது நேரம் விளையாடிருப்போம்.
சொல்ல போனால் அந்த வருடத்திற்கான மறக்க முடியாத நாளாக உங்களுக்கு அது அமைத்திருக்கும்.
குறிப்பாக 90ஸ் கிட்ஸ்க்கு சுற்றுலா என்றாலே இப்படித்தான் அமைந்திருக்கும்.
ஆனால் சுற்றுலாக்களின் வகையும் நிறமும் இன்று வெகுவாக மாறியிருக்கின்றன.
உலகம் சுற்றும் ‘Solo Travellers’
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது பழமொழி.
ஆனால் இன்று, ‘திரைகடல் தாண்டியும் அனுபவம் தேடு’ என்பதே சுற்றுலாப் பிரியர்களின் புதுமொழி.
வெளிநாடு செல்வது வெறும் சம்பாத்தியத்துக்காக, படிப்புக்காக எனும் நிலை மாறி, சுற்றுலாவுக்காகவும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.
அதேபோல் ‘solo travellers’ என்றழைக்கப்படும் குறைந்த செலவில் தனி ஆளாக பயணம் மேற்கொள்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
தன்னந்தனியே பயணம் மேற்கொள்வது ஒருவருக்கு இணையற்ற அனுபவங்களைத் தரும் என்பதைத் தாண்டி, அது ஒருவரை பொறுப்புள்ள, தைரியமான மனிதராக உருவாக்கும் என்பதும் இந்த solo travellers அனைவரும் சொல்லும் கருத்து.
இந்தியா என்றாலும் சரி, வெளிநாடுகள் என்றாலும் சரி, பயணம் என்றாலே சினிமாவில் நாம் பார்த்த அருவி, பனி படர்ந்த மலைகள், கையில் எட்டிப்பிடிக்கும் அளவில் மேகங்கள் என எண்ணிலடங்கா இயற்கைக் காட்சிகள் நம் மனதில் தோன்றி, உடனே பயணம் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம் பீறிடும்.
ஆனால், எப்படிப் போவது? எங்கு போவது? ஒரு solo traveller-ஆக, குறைவான செலவில் எப்படிப் பயணம் மேற்கொள்வது?
இப்படிப் பலதரப்பட்ட கேள்விகள் எழும்.
இக்கட்டுரை இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.
பயணங்களுக்கு முன் திட்டமிட வேண்டிய 5 விஷயங்கள்
- நீங்கள் மொழி தெரியாத ஒரு ஊருக்குப் பயணம் செய்வதாக இருந்தால், சில ‘மொழி கற்றல் செயலி’களை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
- போதுமான அளவு பணத்தை கையில் ரொக்கமாக வைத்து கொண்டால், இணையதளம் இல்லாத இடங்களில் அது பெரும் உதவியாக இருக்கும்.
- எப்போதும் மாற்று திட்டத்தை வைத்திருப்பது உதவிகரமாக இருக்கும்.
- கடல் கடந்து வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறீர்கள் என்றால் தேவையான முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் தங்கும் இடங்களை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Solo Travel – எங்கிருந்து துவங்குவது?
Solo traveller-ஆக, தனியாகப் பயணம் செய்வது மிகவும் பிரபலமாகி வரும் இன்று, உங்களுக்கும் தனியாக பயணம் செய்ய பெரும் ஆவல் இருக்கும். அதே நேரத்தில் பயமும் இருக்கும். இதனை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்திருப்பீர்கள்.
இதற்கு பதில் தருகிறார் பயண ஆர்வலர் (ட்ராவல் இன்ஃப்ளூயென்சர் – Travel Influencer) கௌதமி.
தனியாக பயணம் செய்வதற்கு முன் நீங்கள் மனதில் வைத்து கொள்ளவேண்டியவை:
- தனியாகப் பயணம் செய்வதற்கு முன் முதலில் நீங்கள் முன்னரே பயணம் செய்த பரிச்சயமான இடத்திற்கு ஒருமுறை தனியாகச் சென்று பார்க்க வேண்டும். அங்கு நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் வசதியாக உணர்கிறீர்களா என்பதை பார்க்க வேண்டும்.
- பின்பு, பிரபலமான ஒரு இடத்திற்குச் செல்லலாம். கூட்டம் அதிகம் நிறைந்த, வாகன வசதிகள் நிறைந்த இடங்களுக்கு பயணப்பபடலாம்.
- இதனைத் தொடர்ந்து, தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். மலைப்பிரதேசங்கள், பனிப்பிரதேசங்கள் எனத் தொடங்கலாம்.
- தொலைதூரப் பயணங்கள் மேற்கொண்டால் உங்கள் பாதுகாப்புக்கு உதவியாக நீங்கள் தங்கும் இடத்தின் விவரங்களை உங்கள் நெருங்கிய வட்டங்களுக்கு அனுப்ப வேண்டும்.
- அதிக சுமைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்த்து விட்டு, தேவையான பொருட்களான மழை கோட், காலணிகள், பை கவர், பவர் பேங்க் முதலியவற்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.
- நீங்கள் பயணம் செய்யும் இடங்களில் இணையதள வசதி இல்லாமல் இருக்கலாம். அதனால் ஆஃப்லைன் செயலிகளை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
Solo Travel - பெண்களுக்குப் பாதுகாப்பானதா?
இது குறித்து மேலும் பேசிய கௌதமி, பெண்களுக்குத் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பானதா என்பது நாம் போகும் இடத்தை சார்ந்து அமைகிறது, என்கிறார்.
இரவு நேரங்களில் பயணம் செய்யும் பொழுது தேவையான பாதுகாப்பு முன்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, அந்த ஊரில் நமக்கு தெரிந்தவரிடம் தொடர்பு கொண்டு பேசுவது போன்றவற்றைச் செய்யலாம்.
“பலர் நம்புவது போல் தனியாக பயணம் செய்வது ஆபத்தானது அல்ல. ஆனால் அதற்கான திட்டமிடலோடு செல்ல வேண்டும். பெரும்பாலான மக்கள் உணர்ந்ததை விட உலகம் பாதுகாப்பானது. மேலும் உள்ளூர்வாசிகள் அத்தியாவசிய பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்குவர். அதீத சிந்தனையும் எச்சரிக்கையும் இன்பத்தைக் குறைக்கும். தவறுகள் மூலமாக தான் கற்றலும் வளர்ச்சியும் மென்மேலும் அதிகரிக்கும்,” என்கிறார் கௌதமி.
பயணத்தில் செலவுகளை எப்படித் திட்டமிடுவது?
நெடுந்தூரமோ அருகில் உள்ள சுற்றுலாத்தலமோ, நீங்கள் பயணம் செய்து திரும்பி வர முக்கிய ஆதாரமாகத் திகழ்வது பணம்.
குறைந்த செலவில் உங்கள் பயணத்தை எப்படி திட்டமிடுவது ?
- பயணம் தொடங்கும் முன், மொத்தப் பயணத்திற்கும் எவ்வளவு செலவாகும் என்பதைத் திட்டமிட வேண்டும்.
- செல்லும் இடத்தில் இலவசமாகப் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கும். அங்கு செல்லலாம்.
- விலையுயர்ந்த ஹோட்டல்களுக்குப் பதிலாக, விடுதிகளில் (Hostels) தங்கலாம்.
- உள்ளூர் உணவுகளை அங்கிருக்கும் சிறிய கடைகளிலேயே சாப்பிடலாம்.
- மிகவும் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்லலாம். உள்ளூர் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.
- வெளிநாடுகளுக்கு பயணம் செய்தால் அதற்கான டிக்கெட்களை சில மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்யலாம்.
- பண்டிகை நாட்களைத் தவிர்த்துச் சாதாரண நாளில் பயணம் செய்யலாம்.
- புது ஊர்களுக்குச் செல்கிறோம் என்று அங்கு உள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்காமல் இருக்க வேண்டும்.
மோசடிகளைப் பற்றி எச்சரிக்கை அவசியம்
சுற்றுலாக்கள் தொடர்பாகச் சமீப காலமாக நிறைய மோசடிகளும் நிகழ்கின்றன.
ஆன்லைனில் ஹோட்டல்கள் புக் செய்து நேரில் சென்று பார்த்தால் அந்த இடமே இல்லாமல் இருக்கலாம், அல்லது நாம் ஆன்லைனில் பார்த்த படத்தைப் போலில்லாமல், வசதிகள் இல்லாமல் இருக்கலாம்.
போலியான இணையதளம் மூலம் இப்படியான நிகழ்வுகள் நிகழ்கின்றன.
வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் முன் அந்த நிறுவனத்தின் பின்புலத்தை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.
தங்கும் இடங்களுக்கான பாதுகாப்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்