You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லியோ பாடல் வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது ஏன்? கொதிக்கும் விஜய் ரசிகர்கள்
பல்வேறு காரணங்களால் விஜய் நடித்த லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்திருக்கும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேலைகள் நடந்துவந்தன.
இந்த நிலையில்தான், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "விழா அனுமதிச் சீட்டு கோரி ஏகப்பட்ட கோரிக்கைகள் வருவதாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க, படம் குறித்த தொடர்ச்சியான அப்டேட்களை வழங்கிவருவோம். பின்குறிப்பு: பலரும் கற்பனை செய்வதைப் போல, அரசியல் அழுத்தம் காரணமாகவோ, வேறு காரணங்களாலோ இது செய்யப்படவில்லை" என்று கூறப்பட்டிருக்கிறது.
லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், செப்டம்பர் 30ஆம் தேதி அந்த விழா நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்வு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் படத்தின் இணைத் தயாரிப்பாளரான ஜெகதீஷ் பழனிச்சாமி, "இது மிகவும் கடினமான முடிவு" என்று தெரிவித்திருக்கிறார்.
"இது மிகவும் கடினமான முடிவு. ஒவ்வொரு ரசிகரும் எந்த அளவுக்கு ஏமாற்றமடைவார்களோ, அதே அளவுக்கு நாங்களும் ஏமாற்றமடைந்திருக்கிறோம். பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்தும், கடுமையாக முயற்சி செய்தும் இந்த கடினமான முடிவைத்தான் எடுக்க வேண்டியிருந்தது. டிக்கெட்டுகள் கேட்டு பல கோரிக்கைகள் வந்ததாலும் விருந்தினர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது" என ஜெகதீஷ் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் எனப் பேசப்படும் நிலையில், இந்த ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பதுதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு சில நாட்களுக்கு முன்பாக, லியோ படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்பதாகவும், அதன் காரணமாகவே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அந்த விழாவை நடத்த அனுமதி இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் சிலர் ட்விட்டரில் பதிவிட்டனர்.
ஆனால், செவன் ஸ்க்ரீன் நிறுவனம் உடனடியாக அதனை மறுத்தது.
கோபத்தை வெளிப்படுத்தும் விஜய் ரசிகர்கள்
ஆனால், இப்போது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பதால், விஜய் ரசிகர்கள் கடும் கோபமடைந்திருக்கின்றனர். அதனை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
#DMKFearsThalapathyVIJAY என்ற ஹாஷ்டாகின் கீழ் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.
"துப்பாக்கி, மெர்சல், வாரிசு, ஜெய்லர் படங்களின் ஆடியோவை நேரு ஸ்டேடியத்தில் நடத்தும்போது பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. இப்போது சில சாதாரண காரணங்களைக் கூறி, ரத்து செய்வது ஏன்? விஜய்க்கு படம் பிடிக்காததால் ரத்து செய்தாரா அல்லது அரசியல் அழுத்தமா?" என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நடக்காத ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு டிக்கெட் அடிக்கப்பட்டது ஏன் என சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
சினிமா விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், பத்தாயிரத்திற்கும் அதிகமான போலி டிக்கெட்கள் பெரும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதால், மீண்டும் "மறக்குமா நெஞ்சம்" (ஏ.ஆர். ரஹ்மானின் பிரச்னைக்குள்ளான இசை நிகழ்வு) போன்ற ஒரு சம்பவத்தைத் தவிர்க்கவே தயாரிப்பாளர்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.
விஜய், த்ரிஷா நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை எஸ்.எஸ். லலித்குமார், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் என்ற பேனரின் கீழ் தயாரித்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்