You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹமாஸ் ஆயுதக்குழுவை பயங்கரவாதிகள் என பிபிசி குறிப்பிடாதது ஏன்?
- எழுதியவர், ஜான் சிம்சன்
- பதவி, சர்வதேச விவகாரங்கள், செய்தி ஆசிரியர்
தெற்கு இஸ்ரேலில் பயங்கரமான அட்டூழியங்களை நடத்திய ஹமாஸ் ஆயுததாரிகளை பிபிசி ஏன் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுவது இல்லை என்று அமைச்சர்கள், செய்தித்தாள் கட்டுரையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கான பதில் பிபிசியின் அடிப்படைக் கொள்கைகளில் உள்ளது.
பயங்கரவாதம் என்பது கூடுதல் உணர்ச்சியை அளிக்கும் வார்த்தை. தாங்கள் தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளாத ஓர் அமைப்பைக் குறிக்க இந்த வார்த்தையை மக்கள் பயன்படுத்துகின்றனர். யாரை ஆதரிக்க வேண்டும், யாரைக் கண்டிக்க வேண்டும் - யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று மக்களுக்குச் சொல்வது பிபிசியின் வேலை அல்ல.
பிரிட்டிஷ் மற்றும் பிற அரசுகள் ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கண்டித்துள்ளன என்பதை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறோம். ஆனால் அது அவர்களின் பணி. நாங்கள் பலருடன் நேர்காணல்களை நடத்துகிறோம் மற்றும் ஹமாஸை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடும் பங்களிப்பாளர்களை மேற்கோள் காட்டுகிறோம்.
முக்கிய விஷயம் என்னவென்றால், நாங்கள் அதை எங்கள் குரலில் சொல்லவில்லை. பார்வையாளர்களுக்கு உண்மைகளை வழங்குவதும், அவர்களாக சுயமாக முடிவெடித்துக் கொள்ள வைப்பதுமே எங்களின் பணி.
பயங்கரவாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்பதற்காக எங்கள் மீது விமர்சனங்களை வைக்கும் பலரும் எங்களின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறார்கள், எங்களின் ஒலி வடிவிலான செய்திகளைக் கேட்டிருக்கிறார்கள், எங்களின் செய்திகளைப் படித்திருக்கிறார்கள். எங்கள் செய்தியின் அடிப்படையில் அவர்களாகவே சுயமாக முடிவும் எடுத்துள்ளனர். எனவே, நாங்கள் உண்மையை எந்த வகையிலும் மறைக்கவில்லை.
எந்தவொரு சராசரி நபரும் நாங்கள் பார்த்த விஷயத்தைக் கண்டு திகைக்க நேரிடும். நடந்த சம்பவங்களை “அட்டூழியங்கள்” என்று அழைப்பதே முற்றிலும் நியாயமானது, அவற்றை அப்படித்தான் குறிப்பிட முடியும்.
பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் கொலைகளையும் இசை விழாவில் கலந்துகொள்ளும் அப்பாவி, அமைதியை விரும்பும் மக்கள் மீதான தாக்குதல்களையும் யாராலும் நியாயப்படுத்த முடியாது.
ஐம்பது ஆண்டுகளாக மத்திய கிழக்கில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி நான் செய்தி அளித்து வருகிறேன், இஸ்ரேலில் இதுபோன்ற தாக்குதல்களின் பின்விளைவுகளை நானே நேரடியாகப் பார்த்துள்ளேன்.
மேலும் லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேலிய குண்டுவெடிப்பு தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்களின் விளைவுகளையும் நான் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற விஷயங்களால் ஏற்படும் பேரச்சம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும்.
ஆனால், அதற்காக இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அழைக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. அப்படிச் செய்தால், நாம் தனிப்பட்ட சார்பு இல்லாமல் இருக்க வேண்டிய கடமையைத் தவற விட்டுவிட்டோம் என்று அர்த்தம்.
பிபிசி எப்போதும் இப்படித்தான் இருந்துள்ளது. நாஜிக்களை நாங்கள் “எதிரி” என்று அழைத்தாலும்கூட இரண்டாம் உலகப்போரின் போது, பிபிசி தொகுப்பாளர்களிடம் நாஜிகளை தீயவர்கள் என்று அழைக்க வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டது.
“அனைத்திற்கும் மேலாக,” பிபிசி ஆவணம் ஒன்று இதைப் பற்றி, “ஆரவாரத்துக்கு இடமில்லை” என்று குறிப்பிடுகிறது. எங்கள் தொனி நிதானமாகவும், கட்டுக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஐஆர்ஏ(Irish Republican Army) பிரிட்டனில் குண்டுவீசி அப்பாவி பொதுமக்களைக் கொன்றபோது அந்தக் கொள்கையைத் தொடர்வது கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் கடைப்பிடித்தோம்.
மார்கரெட் தாட்சர் அரசாங்கத்திடம் இருந்து பிபிசிக்கும் என்னைப் போன்ற தனிப்பட்ட செய்தியாளர்களுக்கும் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக அப்பாவி மக்கள் உயிரிழந்த, மார்கரெட் தாட்சர் நூலிழையில் உயிர் தப்பிய பிரைட்டன் குண்டுவெடிப்புக்கு பின் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
ஆனால், நாங்கள் எங்களின் வரைமுறையை நிலைநாட்டினோம். தற்போதும் செய்து வருகிறோம்.
நாங்கள் சார்பு எடுப்பதில்லை. “தீய” அல்லது “கோழை” போன்ற வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. பயங்கரவாதிகள் என்று நாங்கள் பேசுவதில்லை. மேலும் நாங்கள் மட்டுமில்லை, உலகில் மிகவும் மதிக்கப்படும் சில செய்தி நிறுவனங்களும் இதே கொள்கையைக் கொண்டுள்ளன.
ஆனால், அரசியலிலும் ஊடகத்திலும் வலுவான விமர்சகர்களைப் பெற்றுள்ளோம் என்பதோடு ஓரளவு நாங்கள் உயர் தரத்தைக் கடைப்பிடிப்பதால் பிபிசி மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் முடிந்தவரை எவ்வித சார்பும் இல்லாமல் இருப்பது அந்த உயர் தரத்தைக் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக இருக்கிறது.
அதனால்தான், பிரிட்டனிலும், உலகெங்கிலும் உள்ள மக்கள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறார்கள், படிக்கிறார்கள், கேட்கிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)